Published : 18 Apr 2024 07:34 PM
Last Updated : 18 Apr 2024 07:34 PM
கோவை: கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலையின் வெற்றிக்காக, விரலை வெட்டிக் கொண்ட அக்கட்சியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாஜக நிர்வாகி துறையூர் ராமலிங்கம். இவர் கோவையில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவு கோரி வாக்கு சேகரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். களப்பணியின்போது, அண்ணாமலை தோல்வி அடைந்துவிடுவார் என ஒருவர் கூறியிருக்கிறார். இதைக் கேட்டு மனமுடைந்து, தனது விரலை வெட்டிக்கொண்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் குறித்து ராமலிங்கம் வீடியோப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த 10 ஆண்டுகளாக கட்சி பணியாற்றி வருகிறேன். கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடும் நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் கோவைக்கு வந்து களப்பணியாற்றி வந்தேன்.
புதன்கிழமை மாலை சம்மந்தமில்லாத நபர் ஒருவர் என்னிடம் அண்ணாமலைக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்று கூறினார். இதனால், எனது இடது கை ஆள்காட்டி விரலை துண்டித்துக் கொண்டேன். அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துமனையில் அனுமதித்தனர்” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT