Published : 18 Apr 2024 06:28 PM
Last Updated : 18 Apr 2024 06:28 PM
சென்னை: மூத்த குடிமக்கள், கண்பார்வை, உடலியக்க குறைபாடு உள்ளவர்கள் மற்றும் பலவீனமான உடலியக்கம் உள்ள வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு நாளான, வெள்ளிக்கிழமை (ஏப்.19) அன்று சாதாரண நகர சேவைகளில் இலவச பயணச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியத் தேர்தல் ஆணையம், மூத்த குடிமக்கள், கண்பார்வை, உடலியக்க குறைபாடு உள்ளவர்கள் மற்றும் பலவீனமான உடலியக்கம் உள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் நாளன்று பொது போக்குவரத்தை பயன்படுத்த இலவச பயணச்சீட்டு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
பொதுப் போக்குவரத்து வசதி இல்லையெனில், அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து வாக்குச் சாவடிக்கு இலவசமாக அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யலாம் எனவும், தகுதியுள்ள வாக்காளர்களுக்கு இந்த வசதிகளைப் பெறுவதற்கு “Saksham Mobile App” அல்லது உதவி எண்ணில் பதிவு செய்யும் வசதியும் வழங்கப்படலாம் எனவும் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி, மூத்த குடிமக்கள், கண்பார்வை, உடலியக்க குறைபாடு உள்ளவர்கள் மற்றும் பலவீனமான உடலியக்கம் உள்ள வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு நாளான ஏப். 19 அன்று, சாதாரண நகர சேவைகளில் இலவச பயணச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து மாவட்டங்களிலும், வாக்குப்பதிவு நாளன்று மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அவர்களின் இல்லத்திலிருந்து வாக்குச் சாவடிக்கும், வாக்குச்சாவடியிலிருந்து இல்லத்துக்கும் இலவசமாக சென்று வர போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேற்கண்ட வசதிகள் தேவைப்படும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் Saksham Mobile App, 1950 உதவி எண்ணில் தொடர்பு கொண்டு மாவட்டக் கட்டுப்பாட்டு அறையில் கோரிக்கையை முன்வைத்து, வாக்களிக்க ஏதுவாக இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT