Published : 18 Apr 2024 02:12 PM
Last Updated : 18 Apr 2024 02:12 PM

‘வாக்காளர் அடையாள அட்டை இல்லையெனில் ஆதார், பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள்...’ -  சத்யபிரத சாஹு விவரிப்பு

சத்யபிரத சாஹு

சென்னை: மக்களவைத் தேர்தலை ஒட்டி தமிழகத்தில் நாளை (ஏப்.19) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார், ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்கு புத்தகம், மருத்துவக் காப்பீடு அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் 1950 என்ற எண்ணுக்கு அழைத்தால் வாக்களிக்க வாகனம் அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரத சாஹு, “மக்களவைத் தேர்தலை ஒட்டி நாளை(ஏப்.19) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். நாளை மாலை 6 மணிக்குள் வரிசையில் வந்து நிற்பவர்கள் வாக்களிக்கலாம். கடைசி வாக்காளர் வாக்களிக்கும் வரை முழுமையாக வாய்ப்பு வழங்கப்படும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார், ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்கு புத்தகம், மருத்துவக் காப்பீடு அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்காக 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6.23 கோடி ஆகும். முதல் தலைமுறை வாக்காளர்கள் எண்ணிக்கை 10.92 லட்சம் ஆகும். தமிழகத்தில் 874 ஆண் வேட்பாளர்கள், 76 பெண் வேட்பாளர்கள் என மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மொத்தம் 3.32 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். 39 பொது பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் பணியில் உள்ளனர். தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்காக சுமார் ஒரு லட்சம் போலீஸார் தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர். அதாவது, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காவலர்களும், கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட காவலர்களும் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். 39 இடங்களில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்படுகிறது.

புகார்கள்: சி-விஜில் செயலி மூலம் இதுவரை 4,861 புகார்கள் பெறப்பட்டுள்ளன. 22 புகார்கள் மீதான நடவடிக்கைகள் மட்டும் நிலுவையில் உள்ளன. மற்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. நேற்று (ஏப்.17) காலை 9 மணி வரை ரூ.173.85 கோடி பணம், ரூ.1,083 கோடி மதிப்பிலான நகை மற்றும் பொருட்கள், ரூ.6.67 கோடி மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மொத்த வாக்குச்சாவடிகளில் 44,800 வாக்குச்சாவடிகள் வெப் காஸ்டிங் முறையில் நேரடியாக கண்காணிக்கப்பட உள்ளன. மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் வாக்களிக்க ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் 1950 என்ற எண்ணுக்கு அழைத்தால் வாக்களிக்க வாகனம் அனுப்பி வைக்கப்படும். பிங்க் நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பணியாற்றும் அனைத்து அலுவலர்கள், ஊழியர்கள், போலீஸார் என அனைவரும் பெண்களே.

2009-ஆம் ஆண்டில் 73.02 சதவீதம், 2014-ஆம் ஆண்டில் 73.74 சதவீதம், 2019-ஆம் ஆண்டில் 72.47 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியிருந்தது. வாக்குச்சாவடி வளாகத்துக்குள் செல்போன் எடுத்துச் சென்றாலும், வாக்குச்சாவடிக்கு உள்ளே செல்போன் அனுமதிக்கப்படாது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x