Published : 17 Apr 2024 08:52 PM
Last Updated : 17 Apr 2024 08:52 PM
விருதுநகர்: மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் புதன்கிழமை மாலையுடன் ஓய்ந்தது. இறுதி நாளான இன்று வேட்பாளர்களும் கட்சி நிர்வாகிகளும் தொகுதி முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நாளை (ஏப்.19) நடைபெறுகிறது. அதையொட்டி வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. பிரச்சாரத்தின் இறுதி நாளில் வேட்பாளர்களும் அரசியல் கட்சி பிரமுகர்களும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரும் அவருக்கு ஆதரவாக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனும் காலை அருப்புக்கோட்டை பாவாடி தோப்பு பகுதியில் பிரச்சாரத்தைத் தொடங்கினர்.
தொடர்ந்து, முக்கடை, காந்தி மைதானம், வேலாயுதபுரம், பாம்பே மெடிக்கல், அண்ணா சிலை, காமராஜர் சிலை, எம்.எஸ். கார்னர், நடார் சிவன் கோயில், முஸ்லிம் பஜார், புதிய பேருந்து நிலையம் வரை பிரச்சாரம் மேற்கொண்டனர். மாலையில், விருதுநகர் பர்மா காலனி, அகமது நகர், ஈ.பி. அலுவலகம், பீனாம்பிகை பங்களா, புல்லலக்கோட்டை சாலை, பாண்டியன் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரித்து பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.
விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ. சீனிவாசன் தலைமையில் திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினர் எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானாவில் தொடங்கி, நகராட்சி அலுவலகம், தெப்பம், பஜார், மாரியம்மன் கோயில், தேசபந்து திடல் வரை பேரணியாகச் சென்று பொதுமக்களிடமும் வியாபாரிகளிடமும் வாக்கு சேகரித்தனர்.
பாஜக வேட்பாளர் ராதிகா அருப்புக்கோட்டை அருகே உள்ள மேலசின்னையாபுரம், கட்டனார்பட்டி, ஆத்திபட்டி, சூரம்பட்டி, கோவிந்தநல்லூர் பகுதிகளிலும், பின்னர் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டி, சொக்கலிங்கபுரம், சின்னவாடி, ஆர்.ஆர். நகர், வச்சக்காரப்பட்டி பகுதிகளிலும், மாலையில் விருதுநகர் கட்டையாபுரம், பாத்திமா நகர், மீனாம்பிகை பங்களா, பாண்டியன் காலனி, ரயில்வே பீடர் சாலை, அரசு மருத்துவமனை சாலை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானாவில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌசிக் சிவகாசி மீனம்பட்டியில் பிரச்சாரத்தைத் தொடங்கி எஸ்.எச்.வின்.என். பள்ளி, ரிசர்வ் லைன், செங்கமலநாச்சியார்புரம், கார்னேசன், பைபாஸ் ஜங்சன் பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.
தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் மற்றும் அவருக்கு ஆதரவாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதிகளில் பிரச்சாம் செய்து மாலையில் விருதுநகர் தேசபந்து திடலில் வாக்கு சேகரித்து பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இன்று ஒரே நாளில் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் இருசக்கர வாகன பேரணி, தெருமுனைப் பிரச்சாரம் என தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT