Published : 17 Apr 2024 07:13 PM
Last Updated : 17 Apr 2024 07:13 PM
மேட்டூர்: தருமபுரி மக்களவை தொகுதிக்குட்பட்ட மேட்டூர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய தலைவர்கள் ஆர்வம் காட்டாததால் தனி தீவாக மாறி வருகிறது என அரசியல் விமர்சகள் தெரிவித்துள்ளனர்.
தருமபுரி மக்களவை தொகுதிக்குட்பட்ட 6 தொகுதிகளில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த மேட்டூர் தொகுதியும் அடங்கும். தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து வாக்கு சேகரிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டனர். குறிப்பாக, திமுக சார்பில் போட்டியிடும் அ.மணியை ஆதரித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, எம்ஆர்கே பன்னீர்செல்வம், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் ராமகிருஷ்ணன், முத்தரசன், திராவிடர் கழக தலைவர் வீரமணி உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
அதேபோல், அதிமுக வேட்பாளர் அசோகனை ஆதரித்து முன்னாள் முதல்வர் பழனிசாமி, தேமுதிக பிரேமலதா ஆகியோரும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணியை ஆதரித்து மருத்துவர் ராமதாஸ், அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அபிநயாவை ஆதரித்து சீமான் உள்ளிட்டோரும் வாக்கு சேகரித்தனர்.
ஆனால், அனைத்து கட்சி தலைவருக்கும் தருமபுரி மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆனால், கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் மேட்டூர் தொகுதி புறக்கணித்து விட்டனர். இதனால் கடந்த தேர்தலை விட, இந்த தேர்தலில் மேட்டூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் களைக்கட்டாததால் உள்ளூர் நிர்வாகிகள் சற்று சோர்வடைந்துள்ளனர்.
இது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறியது: ''தேர்தல் என்றாலே கிராமங்களில் திருவிழா போல தேர்தல் பிரச்சாரம் களைகட்டும். மேட்டூர் தொகுதியில் அதிகளவு கிராமங்கள் தான் உள்ளன. ஆனால், கடந்த தேர்தலை விட, இந்த முறை தேர்தல் சுறுசுறுப்பாக இல்லை. தருமபுரி மக்களவை தொகுதியுடன் இருக்கும் மேட்டூர் தொகுதிக்கு நீண்ட தொலைவில் உள்ளதால், வேட்பாளர்கள் கூட பிரச்சாரத்திற்கு ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் மேட்டூர் தொகுதியை அரசியல் கட்சி தலைவர்கள் ஒதுக்கி வைத்து வருவதால், மக்களவை தேர்தலில் மேட்டூர் தனி தீவாக மாறியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் கடைசி நேரத்தில் தன் மாவட்ட தொகுதி என பிரச்சாரம் செய்தார். அதேபோல், பாமகவுக்கு அதிக வாக்குகள் இருப்பதால், ராமதாஸ் பிரச்சாரம் செய்ய இருந்த நிலையில், ரத்து செய்யப்பட்டு அன்புமணி பிரச்சாரம் செய்தார்.
ஆனால், ஆளும் கட்சியான திமுகவின் அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோரும் கூட மேட்டூர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய விரும்பாமல் தவிர்த்து விட்டனர். திமுக, அதிமுக கட்சிகளில் இருக்கும் நட்சத்திர பேச்சாளர்கள் கூட மேட்டூர் தொகுதிக்கு வரவில்லை. மக்களவை தேர்தலில், பிரச்சாரம் செய்ய கட்சி தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள், அமைச்சர்கள் புறகணிப்பால், மேட்டூர் தொகுதி தனி தீவாக மாறி வருகிறது'' என்று அவர்கள் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT