Published : 17 Apr 2024 05:49 PM
Last Updated : 17 Apr 2024 05:49 PM
தமிழகத்தில் தெற்கு மண்டலத்தில் முன்னிலை வகிப்பது யார் என்பதை சற்றே விரிவாக இந்தத் தொகுப்பில் பார்க்கலாம். சிவகங்கை: திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் கார்த்திக் சிதம்பரம் இங்கு போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் சேவியர் தாஸ், பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் களம் காண்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பாக எழிலரசி போட்டியிடுகிறார். இவர்களே சிவகங்கையின் முக்கிய வேட்பாளராக களத்தில் இருக்கின்றனர்.
சிவகங்கை தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் சார்பாக கார்த்திக் சிதம்பரம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிட்டிங் எம்.பி.யான கார்த்தி சிதம்பரத்தின் செயல்பாடுகள் மீது அதிருப்தி நிலவியது. ஆனால், டெல்லியில் தலைமையைச் சரிகட்டி மீண்டும் வாய்ப்பைப் பெற்றார். எனினும், பரப்புரை மேற்கொள்ளும்போது மக்கள் பலர் இவர் தொகுதிக்கு செய்தது என்ன என்பது போன்ற கேள்வியை முன்வைத்து வருகின்றனர். அதை கார்த்திக் சிதம்பரம் எதிர்கொண்டாலும், இது அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதேபோல, அதிமுகவும் இங்கு தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தவிர பாஜக கூட்டணி வேட்பாளரான தேவநாதன் யாதவ் பாஜக மற்றும் டிடிவி தினகரன் ஆதரவுடன் களமாடி வருகிறார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் சொந்த ஊர் சிவகங்கை என்பதால் இங்கு நாம் தமிழர் கட்சிக்கும் கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது.
சிவகங்கை மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரைத் திமுகவின் கூட்டணி பலம் மற்றும் காங்கிரஸுக்கு தொகுதியில் உள்ள பலம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் குடும்பத்தின் தனிப்பட்ட செல்வாக்கு போன்ற காரணங்களால் திமுக கூட்டணி இந்தத் தொகுதியில் சற்றே முன்னிலை வகிக்கிறது. எனினும், தேர்தல் நெருங்கும் வேலையில் இதில் மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்புகளும் உண்டு. எப்படியும் ஜெயித்து விடலாம் என்ற நம்பிக்கையில் தெம்புடன் இருக்கிறார் கார்த்திக் சிதம்பரம். ஜூன் 4-ல் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்
தென்காசி (தனி): தென்காசி மக்களவைத் தொகுதியில் திமுக கட்சி சார்பாக ராணி ஸ்ரீகுமார் முதன்முறையாக களம் காணுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி மீண்டும் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் இருக்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் அந்தக் கூட்டணி சார்பாக களம் காண்கிறார், நாம் தமிழர் கட்சி சார்பாக இசைமதிவாணன் போட்டியிடுகிறார். இவர்கள்தான் முக்கியமான வேட்பாளராக தென்காசி மக்களவைத் தொகுதியில் இருக்கின்றனர்.
தென்காசி மக்களவைத் தொகுதியில் கடந்து முறை திமுக வேட்பாளரான தனுஷ் வெற்றி பெற்றார். இந்த நிலையில், அங்கு புதிய வேட்பாளராக ராணி ஸ்ரீகுமார் களமிறக்கப்பட்டிருக்கிறார். கனிமொழியின் ஆதரவுடன் இந்தத் தொகுதியில் அவர் களம் காண்கிறார். இங்கு போட்டி கடுமையாக இருக்கும் என்றுதான் சொல்லப்படுகிறது. குறிப்பாக, அதிமுக வேட்பாளரான டாக்டர்.கிருஷ்ணசாமி செல்வாக்கு இந்தத் தொகுதியில் அதிகமாக இருக்கிறது.தவிர, அதிமுகவின் வாக்கு வங்கியும் இவருக்கு உதவும். தென்காசி மக்களவைத் தொகுதியைப் பொருத்தவரை திமுக, அதிமுக மற்றும் பாஜக என மும்முனை போட்டி தான் நிலவுகிறது. என்றாலும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் பலம் ஆகியவற்றின் அடிப்படையில் திமுக முன்னிலை வகிக்கறது.
திருநெல்வேலி: திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் களம் காணுகிறார். அதிமுக சார்பாக ஜான்சிராணி, பாஜக சார்பாக நயினார் நாகேந்திரன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக சத்யா ஆகியோர் களத்தில் இருக்கின்றனர்.திமுகவின் கோட்டை என கருதப்படும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி இம்முறை காங்கிரஸுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பல இழுபறிக்குப் பின்னரே இந்தத் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்
இத்தொகுதியைப் பொறுத்தவரை திமுக வாக்கு வங்கி பலமாக இருக்கிறது. அதனை நம்பியே காங்கிரஸ் களத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த முறை திமுக சார்பாக போட்டியிட்ட ஞானதிரவியம் 5,22,993 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தை அதிமுக கைப்பற்றியது. ஆகவே, கணிசமான வாக்கு வங்கி அதிமுகவுக்கு இருக்கிறது. ஆகவே,சிட்டிங் திமுக எம்.பி.யின் அதிருப்தி வாக்குககள் அதிமுக, பாஜக என இரு கட்சிகளுக்கும் கிடைக்கும்.
திமுக - அதிமுக - பாஜக என மும்முனை போட்டி இங்கு நடக்கிறது. காங்கிரஸ் வேட்பாளர் மீதான புகார்கள், காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் உட்கட்சி பூசல்கள் உள்ள நிலையில் தற்போதைக்கு பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேகமெடுக்கிறார். ஸ்பீட் பிரேக்குகள் போட திமுக எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்குமா என்பதைக் பொறுத்திருந்திந்து பார்க்கலாம்.
தென் மண்டலங்களில் உள்ள மற்ற தொகுதிகளைப் பற்றி தெரிந்துகொள்ள:
கன்னியாகுமரி: காங்கிரஸ் Vs பாஜக - கடும் போட்டி நிலவும் கன்னியாகுமரி கள நிலவர அலசல்
மதுரை: மார்க்சிஸ்ட் Vs அதிமுக: மதுரை களத்தில் கடும் போட்டி - முந்துவது யார்?
தேனி:தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல்
ராமநாதபுரம்:நவாஸ் கனி Vs ஓபிஎஸ் - ராமநாதபுரம் ‘டஃப்’ களத்தில் முந்துவது யார்? - ஒரு பார்வை
தூத்துக்குடி: மீண்டும் வெல்வாரா கனிமொழி? - தூத்துக்குடி தொகுதி கள நிலவரம் என்ன? - ஓர் அலசல்
விருதுநகர்: மாணிக்கம் தாகூர் Vs ராதிகா Vs விஜய பிரபாகரன் - விருதுநகர் களத்தில் முந்துவது யார்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT