Published : 17 Apr 2024 05:36 PM
Last Updated : 17 Apr 2024 05:36 PM

‘டெல்டா’வை வளைப்பது யார் யார்? - 6 தொகுதிகளின் கள நிலவர அலசல்

தமிழக மக்களவைத் தொகுதிகளில் ‘டெல்டா பகுதி’யில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளில் எந்தக் கட்சி முன்னிலை வகிக்கிறது என்பதை விரிவாக இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.

கடலூர் : கடலூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பாக எம்.கே.விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக சார்பாக சிவக்கொழுந்து களமிறக்கப்பட்டுள்ளார். பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பாக தங்கர்பச்சான் மற்றும் நாதக சார்பாக வே.மணிவாசகன் ஆகியோர் முக்கியமான வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளனர். கடலூரைப் பொறுத்தவரையில் நீண்டகாலமாகவே காங்கிரஸ் வெற்றி பெற்று வரும் தொகுதியாக இருந்துள்ளது. கடந்த முறை திமுக வேட்பாளர் களமிறக்கப்பட்டார். ஆனால், இம்முறை காங்கிரஸுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கும் இங்கு வாக்கு வங்கி இருக்கிறது. அதேபோல் பாமகவும் இங்கு பலமாக இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது. இருந்தபோதிலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவு காரணமாக திமுக கூட்டணியே இங்கு முன்னிலை வகிக்கிறது.

சிதம்பரம்: சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் களத்தில் உள்ளார். அதிமுக சார்பாக சந்திரகாசன், பாஜக சார்பாக கார்த்தியாயினி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக ரா.ஜான்சி ராணி ஆகியோர் பிரதான வேட்பாளராக களத்தில் உள்ளனர். இத்தொகுதியில் கடந்தமுறை மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றார்.

இந்தத் தொகுதியில் விசிக மற்றும் திமுகவுக்கு நல்ல வாக்கு வங்கி இருக்கிறது. ஆகவே, திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது என்றே தகவல் சொல்லப்படுகிறது. கடந்த முறை போலவே இம்முறையும் தீவிரமான போட்டி இருக்கலாம். பாஜக கூட்டணியில் இருந்தபோதே அதிமுக கடுமையான போட்டியை இந்தத் தொகுதியில் கொடுத்தது. இம்முறை தனித்து தேர்தலைச் சந்திப்பதால் வாக்கு வங்கி அடிப்படையில் அதிமுக கடுமையான போட்டியை உருவாக்கும். தற்போதைய நிலவரப்படி திருமாவளவனுக்கு தொகுதியில் ஆதரவு இருப்பதாகவே கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறன.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பாக சுதா களமிறக்கப்பட்டிருக்கிறார். அதிமுக சார்பாக பாபு, பாஜக கூட்டணியில் இடம்பெற்ற பாமக சார்பாக ம.க.ஸ்டாலின் மற்றும் நாதக சார்பாக பி.காளியம்மாள் ஆகியோர் முக்கியமான வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளனர். மயிலாடுதுறையில் திமுக, காங்கிரஸ் என இரு கட்சிகளுக்கும் கணிசமான வாக்கு வங்கி உள்ளன. அதேபோல், அதிமுகவும் தனித்த பலத்துடன் இந்தத் தொகுதியில் உள்ளது. ஆகவே, திமுக கூட்டணி மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

பாமக வேட்பாளருக்கு இருக்கக் கூடிய தனித்த செல்வாக்கு மற்றும் பாஜகவின் பலத்தை நம்பி பாமக களத்தில் உள்ளது. அதேபோல், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் இந்தத் தொகுதியில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டவர் என்ற அடிப்படையில் இம்முறை கணிசமான வாக்குகளைப் பெறுவார் என சொல்லப்படுகிறது. மயிலாடுதுறையைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா சற்றே கூடுதல் பலத்துடன் வலம் வருகிறார். ஆனால், இந்த நிலவரம் மாற்றம் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆகவே, பொறுத்திருந்து பார்க்கலாம்.

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் சிபிஐ சார்பாக செல்வராஜ், அதிமுக சார்பாக சுர்ஜித் சங்கர் , பாஜக சார்பாக ரமேஷ் மற்றும் நாதக சார்பாக மு.கார்த்திகா ஆகியோர் முக்கியமான வேட்பாளர் களத்தில் உள்ளனர். சிபிஐ-யின் வாக்கு வங்கி, திமுக, விசிக என்ற கூட்டணி கட்சிகளின் செல்வாக்கு என களம் சிபிஐ வேட்பாளருக்கு சாதகமாகவே உள்ளது. அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் சமீபத்தில்தான் கட்சியில் இணைந்தார். அவருக்கு அங்கு எம்.பி.யாகப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதுமுகம் என்பதால் கட்சி நிர்வாகிகளுடன் பெரிதும் தொடர்பில்லாதவராக தான் இருக்கிறார். இது அவருக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. பாஜக சார்பாக போட்டியிடும் ரமேஷ் ஏற்கனவே சுயேட்சையாக இந்தத் தொகுதியில் களம் கண்டவர்தான். எனினும் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லாத தொகுதி என்பதால் அவருக்கும் இங்கு பின்னடைவே. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா தூத்துக்குடியைச் சேர்ந்தவர். அவருக்கென தனித்த செல்வாக்கு இல்லை. கட்சிக்கான வாக்குகளை அவர் பெறுவார் என சொல்லப்படுகிறது . நாகப்பட்டினம் தொகுதியைப் பொறுத்தவரை கட்சி பலம், கூட்டணி செல்வாக்கு, வேட்பாளர் தனித்த பலம் என அனைத்து வகையிலும் சிபிஐ வேட்பாளர் செல்வராஜ் முன்னிலையில் இருக்கிறார். ஆகவே, களமும் அவருக்கு சாதகமாக உள்ளதாகவே தகவல் சொல்லப்படுகிறது.

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை திமுக சார்பாக முரசொலி, அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக சார்பாக சிவநேசன் , பாஜக சார்பாக முருகானந்தம் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக ஹூமாயூன் கபீர் ஆகியோர் களத்தில் உள்ளனர். தஞ்சையைப் பொறுத்தவரை அது திமுக கோட்டை என்றே கருதப்படுகிறது. அதிக முறை திமுகவே இத்தொகுதியில் வென்றுள்ளது. காங்கிரஸுக்கும் இங்கு வாக்கு வங்கி இருப்பதால் திமுகவுக்கு சாதகமான அலை வீசுகிறது. அதிமுகவுக்கு இருக்கும் வாக்கு வங்கியை நம்பி தேமுதிக களத்தில் நிற்கிறது. பாஜகவுக்கு இங்கு தனித்த வாக்கு வங்கி இல்லை.

ஆகவே, கூட்டணியில் உள்ள அமமுகவின் செல்வாக்கை நம்பி களத்தில் உள்ளது. நாம் தமிழர் கட்சி இளைஞர்கள் வாக்குகளைக் கவர தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டுவருகிறனர். ஆனால், யார் வென்றாலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு இருக்காது . காரணம், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளர் களமிறக்கப்பட்டிருக்கிறார். அவரும் கணிசமான வாக்குகள் பெறுவார் என்பதால் யார் வென்றாலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி அமையும் என்று சொல்லப்படுகிறது. எனினும் இந்தத் தொகுதியில் தற்போது திமுக சற்றே முன்னிலையில் உள்ளது.

பெரம்பலூர்: பெரம்பலூர் மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரையிலும் திமுக சார்பாக அருண் நேரு, அதிமுக சார்பாக சந்திரமோகன், பாஜக கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் மற்றும் நாதக சார்பாக தேன்மொழி ஆகியோர் களத்தின் பிரதான வாக்காளர்களாக உள்ளனர். இங்கு திமுகவுக்கு நல்ல வாக்கு வங்கி இருக்கிறது. அமைச்சர் நேருவின் மகன் என்பதால் தீவிரமான களப்பணியைத் திமுக செய்து வருகிறது.

அதேபோல், அதிமுகவுக்கும் சின்னம் மற்றும் கட்சி கட்டமைப்பு பெரிதாக இங்கு உதவும் . கடந்தமுறை திமுக சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாரிவேந்தர் இப்போது பாஜக சார்பாகக் களம் காணுகிறார். ஆனால், சிட்டிங் எம்.பி.யான இவர்மீது அதிருப்தியே நிலவுகிறது. அதேபோல், தொண்டர் பலம் இவருக்குப் பெரிதாக இல்லை. கூட்டணி கட்சியான பாஜகவுக்குப் பெரிதாக செல்வாக்கு இல்லாதது இவருக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. சீமானை முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சி பரப்புரை மேற்கொண்டு வருகிறது. இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை திமுக சற்று முன்னிலையில் இருப்பதாகவே கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x