Published : 17 Apr 2024 04:04 PM
Last Updated : 17 Apr 2024 04:04 PM

அண்ணாமலைக்கான இடம் எது? - கோவை தொகுதி கள நிலவர அலசல்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் களம் காண்பதால் அந்தத் தொகுதி ’ஸ்டார் தொகுதி’ என்னும் சிறப்பைப் பெற்றுள்ளது. கோவை இறுதிகட்ட களநிலவரம் என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம். கோவையில் திமுக சார்பாகக் கணபதி ராஜ்குமார் களத்தில் இருக்கிறார். அதிமுக சார்பாக சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பாக அண்ணாமலை மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக ம. கலாமணி ஜெகநாதன் ஆகியோர் முக்கியமான வேட்பாளர்களாகக் களத்தில் இருக்கிறார்கள்.

திமுக வியூகம் என்ன? - சமுதாய தலைவர்கள், தொழில்துறையினர், ஜமாத் அமைப்புகளை ஆகியோரைச் சந்தித்து ஆதரவைப் பெற்று வருகிறது திமுக. வேட்பாளர் முன்னாள் கோவை மேயராக இருந்தபோதிலும் அதிகளவில் அறியப்படாதவராக இருந்தாலும் கூட்டணி பலம் தங்களுக்கு உதவும் எனத் தீவிரமாக நம்புகிறது திமுக. கோவையில் தொழில்துறையினர் அதிகம் இருப்பதால், அவர்களைத் திமுக பக்கம் இழுக்க தொழில் துறை அமைச்சரான டிஆர்பி.ராஜா கோவை பொறுப்பு அமைச்சராக அறிவிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிரமாகக் களமாடியும் வருகிறார்.

மத்திய அரசு ஜிஎஸ்டி அறிமுகம் செய்ததால் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டன. அதைச் சரி செய்ய திமுகவுக்கு வாய்ப்பு தாருங்கள். உங்களுக்கு மிகப் பெரிய வளர்ச்சித் திட்டங்கள் காத்துக் கொண்டிருப்பதாக திமுக வாக்குறுதி அளிப்பது, தொழில்துறையினரை ஈர்க்கிறது. இதனால், சிறிய நிறுவனங்கள் திமுகவுக்கு ஆதரவளிக்கும் நிலையில் இருக்கின்றனர்.

அதுபோல், சிறுபான்மையினர் வாக்குகள் பெரியளவில் திமுகவுக்குக் கைகொடுக்கும். கடந்த முறை ’பாஜக - அதிமுக’ கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்ததால், சிறுபான்மையினர் மொத்த வாக்குகளும் திமுகவுக்குச் சென்றது. இம்முறை அதிமுக தனித்துத் தேர்தலைச் சந்திப்பதால் அதிமுகவுக்குச் சிறுபான்மையினர் வாக்குகள் பதிவாக அதிகம் வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இது எந்த அளவு இரு கட்சிகள் இடையே மாற்றத்தை உண்டாக்கும் என்பதைப் பொறுத்திருந்துப் பார்க்கலாம். திமுகவினர், கோவையில் திமுக-அதிமுக இடையே தான் போட்டி எனக் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.

அதிமுக நிலை என்ன? - கோவை தொகுதியைப் பொறுத்தவரை அதிமுகவுக்கு நல்ல வாக்கு வங்கி இருக்கிறது. குறிப்பாக, அம்மாவட்ட முன்னாள் அமைச்சர் வேலுமணி களத்தில் தீவிரமாகச் செயலாற்றி வருகிறார். தனிப்பட்ட முறையில் சிங்கை ராமச்சந்திரன் முக்கியமான வேட்பாளராகத்தான் வலம் வருகிறார். சோஷியல் மீடியா நிறுவனத்தின் தலைவராக இருந்த காரணத்தால் சமூக வலைத்தளத்திலும் தீவிரமாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

ஆனால், கோவையில் சிறுபான்மையினர் (இஸ்லாமியர்கள்) சிலர் அதிமுக மீது முழுமையாக நம்பிக்கை வைத்து வாக்களிக்கத் தயங்குவதாகச் சொல்லப்படுகிறது. அதிமுக தலைமை நேரடியாகப் பாஜக தலைவர்களை விமர்சிக்காமல் இருப்பதால், தேர்தலுக்குப் பின் அவர்கள் பாஜகவுக்கு ஆதரவளித்து விடுவார்களோ என்னும் அச்சம் அவர்களுக்கு இருப்பதுதான் தயக்கத்துக்கு காரணம். இருப்பினும், அனைத்து தரப்பு வாக்குகளைக் கவர தீவிரம் காட்டுகிறது அதிமுக. தேர்தல் களத்தில் திமுக, பாஜக என இரு கட்சிகள் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகிறது.

பாஜக நிலை என்ன? - பாஜக மாநிலத் தலைவர் நேரடியாகக் களம் காணுவதால் கோவை மக்களவைத் தொகுதி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பாஜகவுக்குக் கோவை நகர்ப்புறப் பகுதியில் கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. இது அவர்களுக்கும் கை கொடுக்கும் எனச் சொல்லப்படுகிறது. பிரதமர் மோடி நேரடியாக அங்கு 'ரோடு ஷோ' நடத்தியதும் பாஜகவுக்கு வாக்குகளைப் பெற்று தரும் என்னும் கருத்து முன்வைக்கப்படுகிறது.

ஆனால்,பாஜகவைப் பொறுத்தவரை சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு நல்ல பலம் இருப்பதான தோற்றம் உருவாக்கப்படுகிறது. ஆனால், அடிமட்ட அளவில் நிர்வாகிகள் இல்லாமல் திணறுவதாகவும், குறிப்பாக பூத் கமிட்டியில் கூட போதுமான ஆட்கள் இல்லை என்று எதிர்த்து போட்டியிடுவோர் பிரச்சாரம் செய்யுமளவுக்கு உள்ளதாக களத்திலிருந்து தகவல் கிடைக்கிறது. ஆனாலும், மாநில அரசு எந்தத் திட்டத்தையும் அமல்படுத்தவில்லை, பாஜக வெற்றி பெற்றால் அடிப்படையான திட்டங்கள் அமல்படுத்தப்படும் என வாக்குறுதிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, விவசாயிகள், தொழில் நிறுவனங்களுக்கு தனித்தனியாக வாக்குறுதி வழங்குகிறார் அக்கட்சி வேட்பாளர் அண்ணாமலை.

2024-ம் ஆண்டு களம் எப்படி இருக்கிறது? - கோவையைப் பொறுத்துவரை அந்தத் தொகுதியில் யார் வெல்லப்போகிறார்கள் என்பதைக் கோவை மக்களைக் கடந்து, பிற தொகுதி மக்களும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கின்றனர். காரணம், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அந்தத் தொகுதியில் போட்டியிடுவதால்தான். கடந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பியாக இருந்த நடராஜன் மீது பெரிய நல்ல பெயரும் இல்லை, கெட்ட பெயரும் இல்லை.

எனினும், மாநில அரசு உயர்த்திய மின் கட்டணம், சொத்து வரி ஆகியவை திமுகவுக்குப் பின்னடைவைத் தரலாம். குறிப்பாக மின்கட்டன உயர்வு, பீக் அவர்ஸ் அதிக கட்டணம் போன்றவை சிறு, குறுந்தொழில் செய்வோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், ஜிஎஸ்டி அமல்படுத்தியதால் சிறு, குறு நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. ஆகவே, இது பாஜகவுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம்.

இந்த நிலையில், பெருவாரியாக திமுக, பாஜக அதிருப்தி வாக்குகள் அதிமுக பக்கம் செல்ல வாய்ப்புள்ளது. ஆகவே, கோவை மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை ’திமுக-அதிமுக - பாஜக’ இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. எனினும், சிறுபான்மையினர் மற்றும் தொழில்துறையினர் கணிசமாக இருக்கும் கோவை தொகுதியில் திமுகவுக்கு அதிகமான ஆதரவு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

தற்போதைய நிலையில், மாநிலத்தில் ஆளும் கட்சியான திமுகவுக்குக் களம் சாதகமாக உள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரை அவர்கள் தொகுதியில் வெல்லவேண்டும். இல்லையெனில், இரண்டாவது இடத்தைப் பிடித்துவிட வேண்டும். எந்தக் காரணத்துக்காகவும் பாஜக முன்னிலைப் பெற்று விடக் கூடாது என்னும் முடிவில் களமாடி வருகிறது. கோவையில் மூன்று கட்சிகளிடையே போட்டி நிலவுவதால் களம் அனல் பறக்கிறது. தேர்தல் முடிவுகள் வரும்போது பாஜக மாநிலத் தலைவரின் சவால் வெல்லுமா என்பது தெரிய வரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x