Published : 17 Apr 2024 11:23 AM
Last Updated : 17 Apr 2024 11:23 AM

சிட்டிங் எம்.பி Vs மத்திய அமைச்சர் - நீலகிரி தொகுதியில் முந்துவது யார்?

நீலகிரி மக்களவைத் தொகுதியில் சிட்டிங் எம்பி ஆ.ராசா vs மத்திய அமைச்சர் எல்.முருகன் இடையே போட்டி நிலவுவதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி சிட்டிங் எம்பியான ஆ.ராசா திமுக சார்பாகப் போட்டியிடுகிறார். அதிமுகவில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், பாஜக சார்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக ஆ.ஜெயகுமார் ஆகியோர் களத்தில் இருக்கின்றனர்.

யார் 2024 தேர்தலில் வெல்வார்கள் என பார்ப்பதற்கு முன்பு, கடந்த தேர்தலில் ஆ.ராசா வெற்றி பெற்றது எப்படி எனப் பார்க்கலாம்: 2014-ம் ஆண்டு நீலகிரி தனித்தொகுதியில் போட்டியிட்டு ஆ.ராசா தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில், 2019-ம் ஆண்டு மீண்டும் அங்கு களம் கண்டு வெற்றி பெற்றார். ’அதிமுக-பாஜக’ கூட்டணி அமைத்ததால் பாஜக எதிர்ப்பு அலை ஆ.ராசா வெற்றி வாய்ப்பைக் கூர்மையாக்கியது. தவிர, 2014-ம் ஆண்டு அதிமுக சார்பாக வென்ற கோபாலகிருஷ்ணன் தொகுதியில் முக்கியமான பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை என்னும் குற்றச்சாட்டுகள் அதிமுகவினர் சார்பாகவே வைக்கப்பட்டது.

தனது சொந்த தொகுதியான குன்னூரில் கூட குடிநீர் பிரச்சினைத் தீர்க்காதது, பழமையான தொழிற்சாலைகள் மூடப்பட்டது, தேயிலைத் தோட்ட தொழிலாளர் நிலை மேம்படுத்தாதது, அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிறைவேற்றப்படாதது, குறிப்பாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு முன்பு கொடநாடு சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக வேலை பார்த்த கோபாலகிருஷ்ணன், அவர் மறைவுக்குப் பின் எதையும் கண்டுகொள்ளவில்லை. இப்படியாக மக்களின் ஒட்டுமொத்த அதிருப்தியும் ஆ.ராசாவுக்குச் சாதகமான வாக்குகளாக மாறின.

2024-ம் ஆண்டு தேர்தல் களம் எப்படி இருக்கிறது? - நீலகிரியில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளும், கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் தொகுதியும் ,திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி தொகுதியும், ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதிகளும் நீலகிரி மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இப்படியாக, மலைப் பகுதிகள் மற்றும் சமவெளிப் பகுதிகள் என இருவேறு நிலப்பகுதிகளை இந்தத் தொகுதி கொண்டுள்ளது.

இங்கு சிட்டிங் எம்பி.,மத்திய அமைச்சர் களம் காணுவதால் போட்டி சூடு பிடித்துள்ளது. சமவெளிப் பகுதிகளான அவினாசி, பவானிசாகர், மேட்டுப்பாளையம் ஆகிய தொகுதிகளில் அதிமுக, பாஜக என இரு கட்சிகளுக்கும் நல்ல வாக்கு வங்கி இருக்கிறது. இருந்தபோதிலும் கடந்த முறை இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது. அப்போது பாஜக எதிர்ப்பு திமுகவுக்கு சாதகமானது. ஆனால், இம்முறை இரு கட்சிகளும் தனித்து தேர்தலைச் சந்திப்பதால் திமுகவுக்கு ’டஃப் பைட்’ இருக்கும் என சொல்லப்படுகிறது.

பாஜக நிலை என்ன? - கடந்த 10 ஆண்டுகளில் மத்தியில் பாஜக நல்ல திட்டங்களை கொண்டுவந்திப்பதால், பாஜகவுக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்னும் கோரிக்கையை வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பாஜக வேட்பாளர் முருகன். திமுக வெற்றி பெற்று தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை, திமுக ஊழல், ரவுடியிசம் தான் கொள்கை எனத் தீவிரமாக விமர்சித்துப் பேசிவருகிறார். அதேபோல், களத்தில் அதிமுக என்ற கட்சி இருப்பதாகவே தெரியவில்லை என இரு திராவிட கட்சிகளையும் விமர்சித்து வருகிறார்.

அதிமுக நிலை என்ன? - திமுக, பாஜக என மாநில, மத்திய அரசை விமர்சித்து வருகிறார் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன். குறிப்பாக, நீலகிரி தொகுதியில் அதிமுகவுக்கு வெற்றி உறுதியாகி உள்ளது. ’1.76 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்’ எனச் சொல்லி வருகிறார். முதுமலையில், தொரப்பள்ளி முதல் கர்நாடக மாநிலம் மேல் கம்ம நள்ளி வரை மேல்மட்ட சாலை அமைப்பது எனப் பல ஆண்டுகள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பான். எனவே, தனக்கு வாய்ப்பு தாருங்கள் எனப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், “ஆ.ராசா தலைக்கனம் பிடித்தவர். இந்த நாடே தலைகுனியும் வகையில் ஊழல் செய்த கட்சி திமுக. 2ஜி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் ஆ.ராசா. தேர்தல் முடிந்ததுமே பல திமுகவினர் ஜெயிலுக்குப் போகப் போகிறார்கள்" எனக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

மக்கள் மனநிலை என்ன? - நீலகிரியில் மருத்துவக் கல்லூரி அமைத்ததையும் ’திமுக-அதிமுக’ இருவரும் உரிமை கொண்டாடுகின்றனர். அத்திக்கடவு அவினாசி திட்டம் முடிவடைந்த நிலையிலும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. முன்பு அணுகும் முறையில் இருந்த ஆ.ராசா, பின் மக்களால் சந்திக்க முடியாத நிலைக்குச் சென்றுவிட்டார் . தவிர, சுற்றுலா மேம்படுத்த நிதி ஒதுக்கப்படவில்லை. எம்பி ராசா தொகுதி பக்கம் வரவில்லை என்னும் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

திமுக வியூகம் என்ன? - மீண்டும் வெற்றியை உறுதி செய்ய தீவிரம் காட்டி வருகிறது திமுக. குறிப்பாக, கடந்த ஆண்டுகளில் செய்த பணிகளைச் சொல்லி வாக்கு கேட்கிறது. மாநில அரசின் திட்டங்களைப் பரப்புகின்றனர். பாஜகவை டார்கெட் செய்து விமர்சனத்தை முன்வைக்கின்றனர். திமுக-அதிமுக என இருமுனை போட்டிதான் நடக்கிறது. பாஜக வேட்பாளர் பெயர் கூட தொகுதி மக்களுக்குத் தெரிவதில்லை என விமர்சனத்தை முன்வைக்கிறார் திமுக வேட்பாளர் ராசா. மேலும், சிட்டிங் எம்பியான ராசா தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி தந்தது மற்றும் தொகுதியில் தீர்க்கப்பட்ட பிரச்சினைகளை முன்வைத்து வாக்கு சேகரித்து வருகிறார்.

எனவே, நீலகிரி பொறுத்தவரையிலும் மும்முனை போட்டிதான் நிலவுகிறது. அதில் திமுகவின் ஆ,ராசா முந்துவதாகவே கருத்துகள் தற்போது சொல்லப்படுகிறது. எனினும் மக்கள் தீர்ப்பு என்ன என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். தேர்தலுக்கு முன்பு களம் எப்படி வேண்டுமானாலும் திசை மாறலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x