Published : 30 Apr 2018 09:41 AM
Last Updated : 30 Apr 2018 09:41 AM

வழக்கமான தத்கால் டிக்கெட்டுகளை குறைத்து பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்ட பிரிமியம் தத்காலுக்கே முன்னுரிமை?: ரயில் பயணிகள் கடும் அதிருப்தி

ரயில் தத்கால் டிக்கெட் தொடங்கிய அடுத்த சில நிமிடங்களில் விற்று தீர்ந்து விடுகிறது. பல மடங்கு கட்டணம் வசூலிக்கும் பிரிமியம் தத்காலுக்கே முன்னுரிமை அளிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மற்றும் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் கூடுதல் கட்டணத்துடன் ஒருநாள் முன்பு தத்கால் முறையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது நடைமுறை அமலில் உள்ளது. ஏசி டிக்கெட்களுக்கு காலை 10 மணிக்கும் ஏசி அல்லாத டிக்கெட்களுக்கு காலை 11 மணிக்கும் முன்பதிவு தொடங்கும்.

கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தத்கால் டிக்கெட் முன்பதிவு முறையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, நாடு முழுவதும் முக்கிய விரைவு ரயில்களில் தத்கால் டிக்கெட்டுகளில் பாதியளவை ‘டைனமிக் கட்டணம்’ என்ற முறையில் பிரிமியம் தத்கால் என புதிய முறையை அறிமுகம் செய்தது. இதன்படி, பயணிகளின் தேவையின் அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு 20% டிக்கெட்டுகளுக்கும் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படுகிறது. 2 ஏசி, 3 ஏசி, படுகை வசதி பெட்டிகள் என தலா 20 சதவீதம் என 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு ஒருவர் செல்ல வேண்டுமென்றால், படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் அதிகபட்சமாக பிரிமியம் தத்கால் டிக்கெட்டில் ரூ.1,200 வரையிலும் இரண்டாம் வகுப்பு ஏசியில் ரூ.4,300 வரையிலும் 3-ம் வகுப்பு ஏசியில் 3,200 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

மேலும், தத்கால் டிக்கெட் முன்பதிவில் பிரிமியம் தத்கலுக்கே முன்னுரிமை அளிப்பதாகவும் இந்த பிரிவுக்கு அதிக டிக்கெட் ஒதுக்கீடு செய்வதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக ரயில் பயணிகள் சிலர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: பண்டிகைக்கால நெரிசலை பயன்படுத்தி கூடுதல் வருவாய் ஈட்டும் நோக்கத்தில், டைனமிக் கட்டண முறையில் பிரிமியம் தத்கால் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முக்கிய விரைவு ரயில்களில் மட்டுமே நடைமுறையில் இருந்தது. ஆனால், தற்போது பெரும்பாலான விரைவு ரயில்களில் பிரிமியம் தத்கால் முறையில் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மொத்த தத்கால் டிக்கெட் ஒதுக்கீட்டில் 50 சதவீத டிக்கெட் பிரிமியம் தத்கால் முறைக்கு ஒதுக்கீடு செய்வதாக ரயில்வே அறிவிக்கிறது. ஆனால், இந்த சதவீத முறையை சரியாக பின்பற்றுவதில்லை. பிரிமியம் தத்கால் முறைக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பொதுமக்களும் தெரிந்துக் கொள்ளும் வகையில் வெளிப்படை தன்மையும் இல்லாமல் இருக்கின்றன. இதனால் கூடுதல் கட்டணம் கொடுத்து அவதிப்படுகின்றனர். எனவே, அதிக மக்கள் பயணம் செய்யும் படுக்கை வசதியுள்ள முன்பதிவு பெட்டிகளில் பிரிமியம் தத்கால் டிக்கெட் முறையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக ஐஆர்சிடிசி உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘நாடு முழுவதும் 2,700-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களில் தத்கால் கட்டண முறை இருக்கிறது. ஆனால், ரயில்வே வாரியத்தின் உத்தரவுப்படி முக்கிய விரைவு ரயில்களில் மட்டுமே பிரிமியம் தத்கால் கட்டண முறை அமலில் இருக்கிறது. பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகள் வழங்குவதை உறுதி செய்யவும், பயணிகள் இடைத்தரகர்களிடம் செல்வதை தடுக்கும் நோக்கத்திலும் இந்த முறை நடைமுறையில் இருக்கிறது. மொத்தமுள்ள தத்கால் ரயில் டிக்கெட் ஒதுக்கீட்டில் 50% டிக்கெட் மட்டுமே பிரிமியம் தத்கால் முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில், எந்த முறைகேடும் நடக்கவில்லை’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x