Published : 17 Apr 2024 05:00 AM
Last Updated : 17 Apr 2024 05:00 AM
சென்னை: சென்னை குன்றத்தூர் அருகில் பிடிபட்ட 1,425 கிலோ தங்க கட்டிகள் உரிய நிறுவனத்திடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை தமிழகம் முழுவதும் ரூ.162.47 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 85 வயதுக்குமேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு வசதிசெய்யப்பட்டுள்ளது. இதில், 85வயதுக்கு மேற்பட்டவர்களில் 71,325 பேர் தபால் வாக்கு படிவத்துக்கு விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் நேற்று வரை 66,461 பேர் தபால் வாக்குப்பதிவு செய்துள்ளனர். இது, தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாகும்.
அதேபோல், மாற்றுத் திறனாளிகளில் 43,788 பேர் விண்ணப்பித்ததில் 40,971 பேர் தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். தபால் வாக்குகளை வீடுகளில் சென்று வாங்கும் பணியானது நாளை 18-ம் தேதி வரை நடைபெறும்.
சென்னையில் கடந்த தேர்தல்களில் வாக்கு சதவீதம் குறைந்திருந்தது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, மாவட்ட தேர்தல் அதிகாரி பல்வேறுமுயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அவரே நேரடியாக சென்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இந்த முறை வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
ஆரணி தொகுதி பாமக வேட்பாளரின் பெயருடன் அவரது கல்வித்தகுதியும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒட்டப்பட்டுள்ளது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு கூடுதலாக 10 கம்பெனி துணை ராணுவம் அனுப்ப வேண்டும் என்ற தமிழக டிஜிபியின் கோரிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையம் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
தமிழகத்தில், கடந்த மார்ச் 16 முதல் ஏப்.16-ம் தேதி காலை வரை, தேர்தல் பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுக்களால் ரூ.78.84 கோடி, வருமான வரித்துறையால் ரூ.83.63 கோடி என மொத்தம் ரூ.162.47 கோடி ரொக்கம், ரூ.5.92 கோடி மதிப்பு மதுபானங்கள், ரூ.1.03கோடி மதிப்பு போதை பொருட்கள், குன்றத்தூரில் பிடிபட்ட 1,425கிலோ தங்க கட்டிகள் உட்பட ரூ.1,079 கோடி மதிப்பு தங்கம் உள்ளிட்ட உலோக பொருட்கள், ரூ.35.34கோடி மதிப்பு இலவச பொருட்கள்என ரூ.1,284.46 கோடி மதிப்புள்ளவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இதில், சென்னை அருகில் சமீபத்தில் பிடிபட்ட 1,425 கிலோ தங்க கட்டிகளின் மதிப்பு தோராயமாக ரூ.950 கோடி இருக்கும் என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த தங்கம், பிரிங்ஸ் இண்டியா நிறுவனத்தின் சார்பில்,சென்னையில் ‘ப்ரீ டிரேட் ஜோன்’க்காக, தென்னாப்பிரிக்காவின் ராண்ட் மெர்ச்சண்ட் வங்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும். இதுதொடர்பான சுங்கத்துறை, வருமான வரித்துறை சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, தங்கம் அந்த நிறுவனத்திடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆவணங்கள் இல்லாமல், வாக்குக்கு பணம் தருவதற்காக வைத்திருப்பதாக பெறப்பட்ட புகார்கள் அடிப்படை யிலும், வருமானவரித்துறையினர் நடத்திய பல்வேறு சோதனைகளில் கடந்த ஏப்.13-ம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் ரொக்கமாக ரூ.25.97 கோடியும், தங்கம் உள்ளிட்ட பொருட்கள் என ரூ.11.15 கோடி மதிப்புள்ளவையும் பறி முதல் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment