Published : 17 Apr 2024 05:45 AM
Last Updated : 17 Apr 2024 05:45 AM
விருதுநகர்: மகாலட்சுமி திட்டத்தின் கீழ், பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்வழங்கப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் உத்தரவாத அட்டையால், விருதுநகர் தொகுதியில் பல்வேறு இடங்களில் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில், மகாலட்சுமி திட்டத்தில் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்வழங்கப்படும் என்றும், இளைஞர்களின் வேலைவாய்ப்பு பயிற்சிக்காக (இன்டர்ன்ஷிப்) ரூ.1 லட்சம்வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல்காந்தி கையொப்பமிட்ட இந்த தேர்தல் வாக்குறுதியை, ‘காங்கிரஸ் கட்சியின் உத்தரவாத அட்டை’ என்ற தலைப்பில், வரிசை எண்ணுடன் அச்சடித்து விருதுநகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு வழங்கி வருவதாக பரவலாக புகார்கள் எழுந்துள்ளன.
மேலும், இந்த வாக்குறுதி அட்டையின் கீழ் பகுதியில் வாக்காளரின் பெயர், செல்போன் எண், வயது, சட்டப்பேரவைத் தொகுதி, வாக்காளர் எண், மகாலட்சுமி திட்டம்- இளையோர் திட்டம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப்படிவங்கள் மூலம் வாக்காளர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுவதாக, காங்கிரஸ் கட்சியினர் மீதுதொடர்ந்து புகார்கள் கூறப்படுகின்றன.
இதுபோல வாக்காளர்களின் விவரங்களைப் பெற்று, அவர்களுக்கு உறுதிமொழி அட்டை வழங்குவதால், வாக்காளர்கள் இதை நம்பி காங்கிரஸ் கட்சிக்குவாக்களிக்கும் வாய்ப்பு உள்ளதாக, மற்ற கட்சியினர் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், வாக்காளர்களுக்கு இந்தப் படிவத்தை பூர்த்தி செய்து வழங்கிய, விருதுநகர் தந்திமரத் தெருவைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் காமராஜ் என்பவரை பாஜகவினர் பிடித்தனர். பின்னர்,தேர்தல் பறக்கும் படை அலுவலர்களின் புகாரின் பேரில், அவர்போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
விருதுநகரில் காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்கு உறுதிமொழி அட்டை வழங்கியதுபோல, திருமங்கலம், சாத்தூரிலும் வழங்கப்பட்டதாக தேமுதிக, அதிமுக சார்பில் காவல் துறை மற்றும் தேர்தல் அலுவலர்களிடம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் அருகேயுள்ள வடமலைக்குறிச்சி, சிவகாசி, விருதுநகர் ஆத்துமேடு, என்ஜிஓகாலனி, பாத்திமா நகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்கு உறுதிமொழி அட்டை வழங்கி, குழப்பத்தை ஏற்படுத்துவதாக பாஜகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT