Published : 17 Apr 2024 04:08 AM
Last Updated : 17 Apr 2024 04:08 AM
ஓசூர்: ஓசூர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், நகரப் பேருந்துகளை குறிப்பிட்ட நேரத்துக்கு இயக்க முடியாத நிலையுள்ளது. இதனால், கிராம மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஓசூரிலிருந்து தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், பாகலூர், பேரிகை, அத்திப்பள்ளி, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஓசூர் அரசு போக்கு வரத்துக் கழக பணிமனை சார்பில், நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகள் மூலம் அன்றாட பணிகளுக்கும், மருத்துவமனை உள்ளிட்ட அவசர பணிகளுக்கும் பொதுமக்களும், பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்களும் சென்று வருகின்றனர்.
3 மணி நேரம் காத்திருப்பு: இந்நிலையில், நகரப் பேருந்துகளை இயக்க போதிய ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் இல்லாத நிலையுள்ளது. இதனால், ஓசூர் பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்துக்குப் புறப்படுவதில், தாமதம் ஏற்படுகிறது. சில நேரங்களில் 3 மணி நேரம் தாமதத்துக்குப் பின்னர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், இப்பேருந்தை நம்பியுள்ள கிராம மக்கள் நீண்ட நேரம் பேருந்தில் காத்திருக்கும் நிலை நீடிக்கிறது.
இது தொடர்பாக கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் சிலர் கூறியதாவது: கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, தளி போன்ற பகுதிகளுக்கு அரசு நகரப் பேருந்துகளை மட்டுமே நம்பியுள்ளோம். ஓசூருக்கு பல்வேறு பணிக்கு வரும் நாங்கள் மீண்டும் கிராமங்களுக்குச் செல்ல பேருந்தில் ஏறினால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் இல்லாமல் நீண்ட நேரம் வரை காத்திருக்கும் நிலையுள்ளது.
பரிதவிக்கும் அவலம்: இதனால், உரிய நேரத்துக்கு வீடுகளுக்குச் செல்ல முடியாமல் மன உளைச்சல் ஏற்பட்டு பேருந்து நிலையத்தில் பரிதவிக்கும் நிலையுள்ளது. பலர் ஆட்டோவில் அதிக பணம் கொடுத்து கிராமங்களுக்குத் திரும்பும் நிலையுள்ளது. கிராமப் பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நகரப் பேருந்துகளை உரிய நேரத்துக்கு இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பணி சுமையால் சோர்வு: இது தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநர்கள் கூறியதாவது: ஓசூர் அரசு போக்கு வரத்துக் கழக பணிமனையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பணியிடம் காலியாக உள்ளதால், இருக்கும் ஊழியர்கள் தொடர்ந்து 3 நாட்கள் வரை பணி செய்கிறோம். இதனால், பணிச் சுமை அதிகரித்து சோர்வு ஏற்படுகிறது. தொடர்ந்து பணி செய்வதால், பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்தி விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு, மீண்டும் பணிக்குத் திரும்புவதால், பேருந்துகளைக் குறிப்பிட்ட நேரத்துக்கு இயக்க முடியாத நிலையுள்ளது.
சில நேரங்களில் மாற்று ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் வராமல், பேருந்தை இயக்க முடியாத நிலையுள்ளது. இதனால், பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தேர்தலுக்குப் பின்னர் சீராகும்: ஓசூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அதிகாரிகள் கூறியதாவது: ஓசூர் அரசு போக்கு வரத்துக் கழக பணி மனையிலிருந்து கிராமப் பகுதிகளுக்கு 70 நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், 180 ஓட்டுநர்கள், 170 நடத்து நர்கள் பணி புரிகின்றனர். இன்னும் தலா 70 ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் தேவைப்படுகின்றனர். தற்போது, இருக்கும் ஊழியர்களை வைத்து பேருந்துகளை இயக்குவதால், தொடர் பணிச் சுமை காரணமாகக் குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து களை இயக்குவதில் சிக்கல் உள்ளது. தேர்தலுக்குப் பின்னர் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT