Published : 16 Apr 2024 09:14 PM
Last Updated : 16 Apr 2024 09:14 PM

“அண்ணாமலைக்கு நாடாளுமன்ற அரசியல் பற்றி என்ன தெரியும்?” - பிரதமர் வேட்பாளர் குறித்து கே.பி

மதுரையில் நடந்த பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றினார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: “பாஜகவும் அதிமுகவும் நாணயத்தின் இரு பக்கங்கள். இவர்களில் யாருக்கு வாக்களித்தாலும் ஒன்றுதான். அவர்களை இந்தத் தேர்தலில் வீழ்த்த வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மதுரையில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.

மதுரை மீனாம்பாள்புரத்தில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து இன்று பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: “மதுரை அதிமுக வேட்பாளர் சரவணன் பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி எம்பி சு.வெங்கடேசன் செய்த திட்டங்களை பைனாகுலர் வைத்து பார்த்தும் ஒன்றுமே தெரியவில்லை என்கிறார். அவரிடம் ஒரு கேள்வியை கேட்கிறேன். பைனாகுலர் மட்டுமல்ல பயாஸ்கோப் வைத்து பார்த்தால்கூட தெரியாது.

ஏனென்றால் கண் பார்வை இருந்தால்தான் அவை தெரியும். கண்பார்வை இல்லாதவர்களுக்கு எதுவும் தெரியாது. பள்ளிக்கூட பிள்ளைகளுக்குகூடத் தெரிந்த சு.வெங்கடேசன் எம்பியின் சாதனைகள் அவருக்கு தெரியவில்லை என்றால் நாம் பொறுப்பாக முடியாது. அதிமுகவுக்கு ஆட்கள் கிடைக்காமல் இவரை வேட்பாளராக தேடிப் பிடித்து நிறுத்தியுள்ளனர். ஆனால் அவர் தேர்தலுக்குப் பின் அவர் எந்தக் கட்சியில் இருப்பார் என சொல்ல முடியாது. கடைசிவரை அதிமுகவில் இருப்பார் என சொல்ல முடியுமா? பசுமை எங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் தாவிக்கொண்டு இருப்பார். ஆனால் இமயமலை மாதிரி வெங்கடசேன் எம்பி உள்ளார்.

இண்டியா கூட்டணி பலவீனமாக இருப்பது போலவும், பிரதமர் வேட்பாளர் யார் எனவும் அரைவேக்காடு அண்ணாமலை பேசுகிறார். அவருக்கு நாடாளுமன்ற அரசியலைப் பற்றி என்ன தெரியும்? நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடித்தான் பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள். அமெரிக்காவில் மக்கள் நேடிரயாக ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பார்கள். சில நாடுகள் சில நடைமுறையை கடைபிடிக்கின்றன. இந்தியாவில் நாடாளுமன்ற முறையின்படியே பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள். இவர்கள் மோடியை வைத்துக்கொண்டு வண்டியை ஒட்டலாம் என நினைக்கிறார்கள்.

2004-ல் கடைசி வரை சோனியா காந்திதான் பிரதமர் என்று பலரும் கூறிவந்தனர். ஆனால், தேர்தலுக்குப் பின்னர் சோனியா காந்தி, நான் பிரதமர் வேட்பாளர் இல்லை மன்மோகன் சிங்தான் பிரதமர் என அறிவித்தார். ஜூன் 4-ல் இண்டியா கூட்டணி மகத்தான வெற்றி பெறப் போகிறோம். ஜூன் 7-ம் தேதி இண்டியா கூட்டணி ஒன்றாகக் கூடி அரைமணி நேரத்தில் பிரதமரை தேர்ந்தெடுக்கப் போகிறோம். ஆனால் 10 ஆண்டுகள் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பாஜக ஏழை மக்களுக்கு செய்த திட்டங்கள் ஏதாவது ஒன்றை சொல்லமுடிகிறதா? அதை வைத்துத்தான் ஓட்டு கேட்க முடிகிறதா?

அதிமுக முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆட்சியை விட்டு போகும்போது கஜானாவை காலி செய்துவிட்டு தமிழகத்தை அடகு வைத்துவிட்டு சென்றார். தமிழக முதல்வராக ஸ்டாலின் ஆட்சிக்கு வரும்போது கடும் நிதி நெருக்கடி இருந்தது. அதிலும் விவசாயிளுக்கு 7 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்திருக்கிறோம். ரூ.5,000 கோடி நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு ரூ.2,000 கோடி தள்ளுபடி செய்துள்ளதுபோல் பாஜகவால் ஏதாவது செய்ய முடிந்ததா? மகளிர் உரிமைத் திட்டம், காலை சிற்றுண்டி திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.

ஆனால் பாஜகவின் 10 ஆண்டுகளில் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ததுண்டா? விவசாயிகளின் டிராக்டர் கடன், மாணவர்களின் கல்விக்கடன்களை தள்ளுபடி செய்தீர்களா? யாருக்காக ஆட்சி செய்தீர்கள்? அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 16 லட்சம் கோடியை தள்ளுபடி செய்துள்ளீர்கள். அந்த தொகையை ஏழைகளுக்கு பயன்படுத்தியிருந்தால் பஞ்சம், பசி பட்டினி போக்கியிருக்கலாம். பல கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தந்திருக்கலாம். தற்போது ஏழைகளைப்பார்த்து ஓட்டுப்போட வேண்டுமென்றால் எப்படி போடுவார்கள்.

பாஜகவால் தமிழகத்தில் நல்ல கூட்டணியை உருவாக்க முடிந்ததா? அவர்களுடன் பாமக எத்தனை நாளைக்கு நீடிப்பார்ககள் என்று சொல்ல முடியாது. வலிமையான கூட்டணியை உருவாக்க முடியவில்லை. செல்வாக்கு இல்லாத கட்சிகளோடு, சாதி வெறி பிடித்த கட்சியோடு கூட்டணி வைத்துள்ளனர். தெலங்கானா, ஒடிசா, உத்தரப் பிரதேசம், பிஹார் என எங்கும் கூட்டணி இல்லை. தமிழகத்தில் பாஜக பாமக கூட்டணி படுதோல்வி அடையும். வடமாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு முடிவுக்கு வரப்போகிறது.

தற்போது அதிமுக பழனிசாமி பாஜகவோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்கிறார். பாஜகவை எதிர்க்க அவருக்கு நெஞ்சில் உரமில்லையே. உண்மையிலேயே எதிர்க்கிறார்களா? என்றால் சந்தேகம்தான். அதிமுக, தேமுதிக நயவஞ்சகக் கூட்டணி. பாஜகவும் அதிமுகவும் நாணயத்தின் இரு பக்கங்களாக உள்ளனர். இருவரில் யாருக்கு வாக்களித்தாலும் ஒன்றுதான். இவர்களை இந்த தேர்தலில் வீழ்த்த வேண்டும். எனவே நாடு நலம் பெற பாசிச பாஜக ஆட்சி மீண்டும் வந்துவிடக்கூடாது. மதத்தை பயன்படுத்தி மக்களை பிரிவினை செய்கிறவர்களை அகற்ற வேண்டும்.

கீழடியை மத்திய அரசு மூடி மறைக்கும்போது அதற்காக போராடி, வாதாடி உலக அரங்கில் கீழடியின் பெருமையை வெளிப்படுத்தியவர் சு.வெங்கடேசன். மதுரை எம்பியாக மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கும், தமிழக உரிமைக்காகவும் குரல் கொடுத்தவர் சு.வெங்கடேசன் என தமிழக முதல்வரே பாராட்டியுள்ளார். அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று அவர் பேசினார். இந்தப் பிரச்சாரத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் மா.கணேசன் தலைமை வகித்தார். திமுக மாநகர செயலாளர் கோ.தளபதி, முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x