Last Updated : 16 Apr, 2024 08:52 PM

6  

Published : 16 Apr 2024 08:52 PM
Last Updated : 16 Apr 2024 08:52 PM

“பதவிக்காக பாஜகவுடன் பாமக கூட்டணி... மக்களை ஏமாற்றும் திமுக...” - இபிஎஸ் தாக்கு @ மேட்டூர்

படங்கள்: எஸ்.குரு பிரசாத்

மேட்டூர்: “மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தால்தான் கொள்ளையடிக்க முடியும் என்பது மு.க.ஸ்டாலின் எண்ணம். அதிமுகவுக்கு மக்கள் வாக்களித்ததால் தான் அன்புமணி இன்று எம்.பியாக உள்ளார்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

தருமபுரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அசோகனை ஆதரித்து சேலம் மாவட்டம் மேச்சேரியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது: “தருமபுரி மக்களவைத் தேர்தலில் மும்முனை போட்டியை நாம் சந்திக்கிறோம். அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி 2-ம் இடத்தில் இருந்தது. 3-ம் இடத்தில்தான் பாஜக இருந்தது. பாமக அடிக்கடி கூட்டணியை மாற்றி கொண்டிருக்கிறார்கள். அதிமுக ஓட்டு போட்டுதான் அன்புமணி எம்பியாக உள்ளார்.

மக்கள் அதிமுகவுக்கு ஓட்டு போட்டதால்தான் அன்புமணி வெற்றி பெற்று எம்பியாக முடிந்தது. 5 ஆண்டு காலம் மத்தியில் சுகாதார துறை அமைச்சராக இருந்தபோது அன்புமணி தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்காக பேசவில்லை. நாடாளுமன்றத்தில் சுயமாக, சுதந்திரமாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசினார்கள்.

சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று ஆணையிட்டது நான். அதிமுகவை பற்றி விமர்சனம் செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. தமிழகம் முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றால் இரண்டு ஆண்டு காலம் பிடிக்கும். ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக திமுக ஆட்சிக்கு வந்ததால் அது காலாவதியாகிவிட்டது.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கூடிய கட்சி அதிமுக. தமிழகத்தில் எம்ஜிஆர் தலைமையில் அதிமுக தொடங்கப்பட்டு 30 ஆண்டு காலம் நல்லாட்சி கொடுத்தது. கடலூரில் பிரச்சார கூட்டத்தில் அன்புமணி, உள்ளூர் வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார். அதேபோன்று நானும் கூறுகிறேன் உள்ளூர் வேட்பாளர் அசோகனுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால், தேவையான திட்டங்களை செய்து கொடுப்பார்.

நீட் தேர்வை கொண்டு வந்த பாஜகவுடன்தான் பாமக கூட்டணி வைத்துள்ளது. பதவிக்காக எந்தக் கட்சியுடனும் பாமக கூட்டணி வைத்துக்கொள்ளும். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஜி.கே.மணி இருந்தார். அவருடைய பதவியையும் அவர்களே எடுத்துக் கொண்டனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்வதையும் சொல்வதில்லை; செய்யப்போறதையும் சொல்வதில்லை. ஆனால் என்னைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார். மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருக்க வேண்டும். அப்போதுதான் கொள்ளையடிக்க முடியும் என்பதுதான் அவரின் எண்ணம்.

இந்தியாவிலேயே நம்பர் ஒன் ஆட்சி திமுக என்று ஸ்டாலின் கூறுகிறார். லஞ்சம், ஊழல், கடன் வாங்குவதில் நம்பர் ஒன் ஆட்சியாக இருந்து வருகிறது. தேர்தலின் போது கவர்ச்சியான திட்டங்களை சொல்லி ஆட்சிக்கு வந்த பிறகு அந்த பல்டி அடித்து விட்டார்கள்.

ஏழை மக்கள் 5 சவரனுக்கு குறைவாக கூட்டுறவு சங்கத்தில் அடமானம் வைத்திருந்தால், தள்ளுபடி செய்யப்படும் என ஆட்சிக்கு வருவது முன்பு தேர்தல் வாக்குறுதியை அறிவித்தது திமுக. இதனை நம்பி ஏழை எளிய மக்கள் 5 சவரன் நகையை கூட்டுறவு சங்கத்தில் அடமானம் வைத்து கடன்காரார்களாக ஆனார்கள்.

உதயநிதி ஸ்டாலினின் பேச்சை நம்பி தாய்மார்கள் கூட்டுறவு சங்கத்தில் கழுத்து, காதில் இருந்த தங்க நகைகளை அடமானம் வைத்தார்கள். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தகுதியானவர்களுக்கு மட்டும் தான் நகை தள்ளுபடி என்று கூறியதால், 45 லட்சம் பேர் ஏமாந்து போய்விட்டார்கள். மக்களை ஏமாற்றிய திமுக அரசாங்கத்துக்கு இந்த தேர்தலில் தகுந்த பதிலடி தர வேண்டும். அதிமுகவின் 10 ஆண்டுகளாக ஆட்சி பொற்கால ஆட்சி. அதிமுக ஆட்சி மக்களுக்கு வெளிச்சம் தந்த ஆட்சி.

திமுக, அரசு ஊழியர்களுக்கு தேர்தல் நேரத்தில் பல அறிவிப்புகள் வெளியிட்டது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று கூறிய திமுக இதுவரை அதனை நிறைவேற்றவில்லை. கரோனா காலத்தில் அரசு ஊழியர்களுக்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் பிடித்தம் செய்யாமல் 100% சம்பளம் கொடுத்த அரசாங்கம் அதிமுக ஆட்சி.

திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பல சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை எல்லாம் அரசு ஊழியர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அமெரிக்கா அரபு நாடுகளில் கூட கரோனா வைரஸ் நோயை தடுப்பதில் தமிழகம் தான் முன்மாதிரியாக இருந்தது. மருத்துவர்களை ஊக்கப்படுத்தி அந்த நோயை கட்டுப்படுத்தி காட்டிய மாநிலம் தமிழ்நாடு” என்றார் எடப்பாடி பழனிசாமி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x