Published : 16 Apr 2024 08:02 PM
Last Updated : 16 Apr 2024 08:02 PM
மதுரை: பிரேமலதா விஜயகாந்த் தனது மகனுக்காக விருதுநகர் தொகுதியில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார்.
விருதுநகர் தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது. இந்தத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர், பாஜக வேட்பாளராக ராதிகா சரத்குமார், அதிமுக கூட்டணியில் மறைந்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கவுசிக் ஆகியோர் போட்டியிடுகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜக தேசிய தலைவர் நட்டா, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்ற தலைவர்கள் அவரவர் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர்.
தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்தின் சொந்த ஊரான ராமானுஜபுரம் அருப்புக் கோட்டை சட்டமன்ற தொகுதியில் இருப்பதால் அவரது மகன் விஜய பிரபாகரனை போட்டியிட செய்யவே விருதுநகர் தொகுதியை கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா கேட்டுப் பெற்றார். இவருக்கு முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி மற்றும் தென்மாவட்ட தேமுதிக மாநில நிர்வாகிகள் தொகுதியில் முகாமிட்டு பிரச்சாரம் செய்கின்றனர். மறைந்த தனது தந்தையைப் பற்றி உருக்கமாக பேசியும், ''வென்றால் இந்தத் தொகுதிக்கே முக்கியத்துவம் தருவேன்'' என்றும் அவர் பிரச்சாரம் செய்கிறார்.
கூட்டணியில் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இடம்பெற்ற பிரேமலதா, தமிழ்நாடு முழுவதும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் பிரச்சாரம் செய்தாலும், வேட்பு மனுத்தாக்கலின் போது, தலைகாட்டிய பிரேமலதா தற்போது இந்தத் தொகுதியில் தீவிரம் காட்டியுள்ளார். அவரது சொந்த ஊரான ராமானுஜபுரம் உட்பட தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு செல்கிறார். மத்திய, மாநில அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை கூறி ஆதரவு திரட்டுகிறார். தாய், மகன்கள் என தனித்தனியாக பிரிந்து மக்களிடம் வாக்குச் சேகரிக்கின்றனர்.
தேமுதிகவினர் நிர்வாகிகள் கூறியது: ''விஜயகாந்த் மறைவுக்கு பிறகு அவரது மகன் விருதுநகர் தொகுதியில் களம் காணுகிறார். விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போது, அவரை முதல்வராக்க முடியவில்லையே என்ற மனநிலையில் இருக்கும் மக்களின் அனுதாபம் அவரது மகனுக்கு வாக்குகளாக மாற வாய்ப்புள்ளது. விஜய பிரபாகரன் போட்டியால் விருதுநகர் அவரது சொந்த தொகுதியாகவே மாறி இருக்கிறது. வென்றால் அடுத்தடுத்த தேர்தல்களிலும் செல்வாக்கு பெறும். மாநில, மாவட்ட அளவில் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து பணியாற்றுகிறோம். சில நாளாகவே கேப்டன் 2-வது மகனும், நடிகருமான சண்முக பாண்டியனும் தொகுதியில் முகாமிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டிய பொதுச் செயலாளர் பிரேமலதா, ''இனிமேல் எங்களது வாழக்கை எலலாமே விருதுநகர் தொகுதி மட்டுமே. விஜய பிரபாகரனுக்கு இத்தொகுதி மக்கள் முன்னிலையில் தான் திருமணம் நடத்தப்படும்'' என்பன போன்ற உருக்கமான வார்த்தைகளை எழுப்பி பிரச்சாரம் செய்கிறார்.
விருதுநகரில் தனியார் விடுதியில் தங்கி, கடந்த சில தினங்களாக மகனுக்கு இறுதிக் கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். பிரேமலதா, வேட்பாளர் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் ஒரே வேனில் பிரச்சாரம் செய்வது தவிர்த்து, தனித்தனியாக பிரிந்து நான்கு திசையிலும் பிரச்சாரம் செய்கின்றனர்.
மக்கள் கூடும் இடங்களில் நடந்து சென்றும் சண்முக பாண்டியன் தனது அண்ணனுக்கு ஆதரவு திரட்டுகிறார். தேமுதிக நிர்வாகிகளும் 'முந்தும் முரசு' என்ற நம்பிக்கையில் முழுவீச்சில் ஓட்டு கேட்கிறோம். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோரும் தங்களது தொகுதியில் மும்மரம் காட்டியுள்ளனர். அனைவரின் பிரச்சாரமும் எங்களுக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தும் என நம்புகிறோம்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT