Published : 16 Apr 2024 06:08 PM
Last Updated : 16 Apr 2024 06:08 PM

3 நாட்களுக்கு ஜிபே, ஃபோன்பே பரிவர்த்தனைகளை கண்காணிக்க தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவு

தமிழ்நாடு மாநிலத்துக்கான சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர் பி.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடந்த கூட்டம்.

மதுரை: ''தேர்தலுக்கு முந்தைய கடைசி மூன்று நாள் ஜிபே, ஃபோன்பே பணப் பரிவர்த்தனைகளை கண்காணியுங்கள்'' என்று மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு மாநிலத்துக்கான சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர் பி.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சியர் சங்கீதா முன்னிலை வகித்தார். தேர்தல் வாக்குப்பதிவு நாளையொட்டி மாவட்டத்தில் பறக்கும்படை கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்துதல் தொடர்பாக இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், ஆலோசிக்கப்பட்ட தகவல்கள் பற்றி அதிகாரிகள் கூறியது: ''வேட்பாளர்கள் தேர்தல் பரப்புரை செய்வதற்கான அவகாசம் நாளை புதன்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து பறக்கும் படை குழுக்கள், நிலைத்த கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்ககள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கத் தொகைகள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வரும் 3 தினங்கள் பறக்கும்படை குழுவினரின் கண்காணிப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்திட வேண்டும். பொதுமக்கள் எவ்வித தூண்டுதலுமின்றி சுதந்திரமாக தங்களது வாக்குகளை பதிவு செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்துவது நம் அனைவரது கடமையாகும்.

கார்கள், சரக்கு வாகனங்கள், வங்கி ஏ.டி.எம்-களில் பணம் நிரப்புவதற்கான வாகனம் என அனைத்துத் தரப்பு வாகனங்களையும் தீவிரமாகக் கண்காணித்து தணிக்கை மேற்கொள்ள வேண்டும். உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் ரொக்கத் தொகைகளை பறிமுதல் செய்திட வேண்டும்.

அதேபோல, வாக்காளர்களை கவரும் நோக்கில் கொண்டு செல்லப்படும் பரிசுப் பொருட்கள் தொடர்பாகவும் ஆய்வு செய்து பறிமுதல் செய்திட வேண்டும். மேலும், இணையவழி வங்கி பரிவர்த்தனைகளையும் கண்காணித்திட வேண்டும்.

சந்தேகத்துக்கு இடமளிக்கக் கூடிய வகையில் பெரும் தொகை பரிவர்த்தனை, ஜிபே (G-Pay), ஃபோன்பே (Phone Pay) போன்ற செயலிகள் மூலம் ஒரே எண்ணிலிருந்து பல்வேறு எண்களுக்கு அனுப்பப்படும் தொகை, வேறு வேறு எண்களிலிருந்து குறிப்பிட்ட ஒரே எண்ணிற்கு அனுப்பப்படும் தொகை என சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளை கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, தேர்தலுக்கு முந்தைய கடைசி மூன்று நாட்கள் மிக உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.

அதேபோல, மதுபான விற்பனை தொடர்பாக கண்காணித்திடவும், அதிகளவில் மொத்தமாக மதுபானம் வாங்குவோர் குறித்த விவரங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் மதுமிதா தாஸ், ராணி லாமா, மாவட்ட மாநகர காவல்துறை ஆணையாளர் ஜெ.லோகநாதன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர்.மோனிகா ராணா. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்விந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x