Published : 16 Apr 2024 05:25 PM
Last Updated : 16 Apr 2024 05:25 PM
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுகவின் பிரம்மாஸ்திரத்தை எதிர்கொள்ள அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகள் முனைப்பு காட்டுகின்றன. திராவிடர் கழகத்தில் இருந்து திராவிட முன்னேற்ற கழகம் உருவானபோது, தேர்தல் அரசியல் களத்தில் ‘தடம்’ பதிக்க ‘தோள்’ கொடுத்தது ஆன்மிக பூமியான திருவண்ணாமலை.
கடந்த 1957-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட தர்மலிங்கம், 41.75 சதவீத வாக்குகளை பெற்று காங்கிரஸ் வேட்பாளர் நீலகண்டனை வீழ்த்தி வெற்றி பெற்றார். இவருடன், நாமக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ஈ.வி.கே.சம்பத்தும் வெற்றி கண்டார். இவர்கள் இருவர்தான், 70 ஆண்டுகளை கடந்தும் தேர்தல் களத்தில் திமுக பீடுநடை போடுவதற்கு அச்சாரமாக திகழ்கின்றனர். கடந்த 1957-ல் பெற்ற வெற்றியை, 1962-ல் நடை பெற்ற மக்களவைத் தேர்தலில் தக்க வைத்துக் கொண்டார் தர்மலிங்கம். 48.99 சதவீத வாக்குகளை பெற்று, காங்கிரஸ் வேட்பாளர் நீலகண்டனை மீண்டும் வீழ்த்தினார்.
திமுகவின் தேர்தல் அரசியலுக்கு அச்சாணியாக திகழும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியானது, தொகுதி சீரமைப்பில் கலைக்கப்பட்டன. திருப்பத்தூர் மக்களவைத் தொகுதியுடன் திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி சேர்க்கப்பட்டது. கடந்த 1967 முதல் 2004 வரை 11 மக்களவைத் தேர்தலை திருப்பத்தூர் சந்தித்தது. இதில், 8 முறை திமுகவும், 3 முறை காங்கிரசும் வெற்றி கண்டது.
தொகுதி சீரமைப்பில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி மீண்டும் உதயமானது. கடந்த 2009 முதல் 2019 வரை 3 மக்களவைத் தேர்தலை சந்தித்துள்ளது. இதில், 2 முறை திமுகவும், ஒரு முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது. திமுகவைச் சேர்ந்த மறைந்த வேணுகோபால், தொடர்ந்து 5 முறை (1996, 1998, 1999, 2004, 2009 வரை) வெற்றி பெற்றுள்ளார். 16 தேர்தல்களில் 12 முறை திமுகவும், 3 முறை காங்கிரசும், ஒரு முறை அதிமுகவும் வெற்றி வாகை சூடியுள்ளது.
தொகுதி சீரமைப்புக்கு பிறகு 4-வது முறையாக மக்களவைத் தேர்தலை வரும் 19-ம் தேதி சந்திக்க உள்ளது ’திருவண்ணாமலை’. இத்தொகுதியில் திருவண்ணாமலை, கலசப் பாக்கம், கீழ்பென்னாத்தூர், செங்கம் மற்றும் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை (2 தொகுதிகளும் திருப்பத்தூர் மாவட்டம்) ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. 6 தொகுதிகளிலும் திமுக வசம் உள்ளது. அமைச்சர் எ.வ.வேலு (திருவண்ணாமலை), சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி (கீழ்பென்னாத்தூர்), மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன்(கலசப்பாக்கம்), நல்லதம்பி (திருப்பத்தூர்), தேவராஜ் (ஜோலார்பேட்டை) ஆகியோர் சட்டப்பேரவை உறுப்பினர்களாக உள்ளனர். திருவண்ணாமலை மற்றும் திருப் பத்தூர் ஆகிய 2 மாவட்டத்துக்கும் அமைச்சராக எ.வ.வேலு வலம் வருகின்றார்.
திமுகவின் தேர்தல் வியூக சக்கரம்... - திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி யில் 3-வது முறையாக திமுக சார்பில் களம் காண்கிறார் சி.என்.அண்ணாதுரை. கடந்த 2014-ல் அதிமுக வேட்பாளர் வன ரோஜா விடம் தோல்வியை தழுவியவர், 2019-ல் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை வீழ்த்தி வாகை சூடினார்.
மக்களவையில் அதிக முறை கேள்விகளை எழுப்பியது, மத்திய அரசு நிதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொகுதி வாரியாக நலத்திட்ட உதவிகளை வழங்கியது, ஜவ்வாது மலையில் செல்போன் டவர் அமைத்தது, ரயில் நிலையங்களின் தரத்தை மேம்படுத்தியது ஆகிய பணிகளை குறிப்பிட்டு கூறலாம்.
அமைச்சர் எ.வ.வேலு அமைத்து கொடுத்துள்ள ‘தேர்தல் வியூக சக்கர(ம்)’த்தில் இருந்து தடம் புரளாமல், தேர்தல் களத்தில் பயணிக்கிறார். காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரிகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருந்தாலும், திமுக வாக்குவங்கியை மையமாக வைத்து பிரச்சார வியூகம் வகுக்கப்பட்டுள்ளன. 6 தொகுதிகளும் திமுக வசம் உள்ளதால், அதிக வாக்குகளை பெற்று கொடுக்க வேண்டும் என்ற போட்டி, சட்டப்பேரவை உறுப்பினர்களின் தேர்தல் பணியில் காணமுடிகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது பிரச்சாரம் கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. கூட்டணி தலைவர்களின் பார்வை, திருவண்ணாமலையில் விழாமல் உள்ளது, தொண்டர்களிடம் பேசும்பொருளாக உள்ளது.
இரட்டை இலையும், மும்மூர்த்திகளும்... - அதிமுக சார்பில் முதல் முறையாக களம் காண்கிறார் எம்.கலியபெருமாள். முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் தீவிர விசுவாசி. அவர் வகுத்து கொடுத்த வழி தடத்தில் கவனமாக பயணித்து, தேர்தல் பணியில் ஈடுபடுகிறார். அசுர பலத்துடன் வலம் வரும் திமுக வேட்பாளரை எதிர்த்து களம் காண்கிறார்.
பொறுப்பாளர்களாக நியமிக்கப் பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், வீரமணி ஆகியோர் ‘இரட்டை இலை’யை மனதில் கொண்டு, வெற்றி வாகை என்ற ஒற்றை நோக்கத்துடன் களப்பணியில் ஈடுபட்டால், உதய சூரியனுக்கு நெருக்கடி கொடுக்கலாம்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் பிரச்சாரம், உத்வேகம் அளித்திருந்தாலும், பிரச்சார களத்தில் கூட்டணி தலைவர்கள் இல்லாதது பின்னடை வாக பார்க்கப்படுகிறது. மும்மூர்த்திகள் மூவரும், தாங்களே போட்டியிடுவதாக கருதி, கடைக்கோடி தொண்டர்களை தட்டிக் கொடுத்து வழிநடத்தினால், திருவண்ணாமலையில் 2-வது முறையாக இரட்டை இலை துளிரும்.
தாமரைக்கு பலம் சேர்க்கும் மாம்பழம்... பாஜக சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் ஏ.அஸ்வத்தாமன், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர். பாஜகவுக்கு பெரியளவு வாக்குவங்கி இல்லையென்றாலும், பிரதமர் மோடி அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி பிரச்சார களத்தில் சுழன்று வருகிறார்.
மேலும், தன்னை வெற்றி பெற செய்தால் விவசாயம், வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து ‘தாமரை’ சின்னத் துக்கு வாக்கு சேகரிக்கிறார். பாஜக கூட்டணி யில் பாமக அங்கம் வகிப்பது பலமாக பார்க் கப்படுகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம், அவருக்கு நம்பிக்கையை கொடுத் துள்ளது. பாஜக தலைவர்களின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.
ஒலி பறக்கும் ‘மைக்’... நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். விவசாய சின்னம் மறுக்கப் பட்டாலும், தேர்தல் ஆணையம் வழங்கிய மைக் சின்னம் மக்களிடம் எளிதாக சென்றடைந்துள்ளது. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிரச்சாரம், நம்பிக்கையை கொடுத்துள்ளது. கிராமங்களில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரம், வாக்கு வங்கிக்கு வலுசேர்த்துள்ளது.
களத்தில் 31 வேட்பாளர்கள்... வன்னியர், பட்டியலின சமூக மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். மேலும், முதலி யார், நாயுடு உள்ளிட்ட பிற சமூகத்தினரும் கணிசமாக உள்ளனர். ஜவ்வாதுமலையில் வாழும் மலைவாழ் மக்களின் வாக்குகளும் உள்ளன. திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திமுக வின் பிரம்மாஸ்திரத்தை எதிர்கொள்ள அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகள் முனைப்பு காட்டுகிறது.
தொழிற்சாலைகளை தொடங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் விவசாயம், விவசாயிகள் நிறைந்த தொகுதியாகும். தொழிற்சாலைகள் இல்லாததால் பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங் களுக்கு புலம் பெயரும் தொழிலாளர்கள் அதிகம். ஜவ்வாதுமலையில் வாழும் மலைவாழ் மக்களும், ஆந்திர மாநிலத்தில் செம்மர கடத்தல் வழக்கில் சிக்கி, தங்களது வாழ்க்கையை தொலைத்துவிடுகின்றனர்.
தொழிற்சாலைகளை தொடங்கி வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்: என்பது பிரதான கோரிக்கையாகும். அதேநேரத்தில் விளை நிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்ற கருத்தும் நிலவுகிறது. மலர் சாகுபடி நிறைந்து உள்ளதால், நறுமண தொழிற்சாலை தொடங்க வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை நிறைவேறவில்லை. மேல்செங்கத்தில் உள்ள 12 ஆயிரம் ஏக்கர் விதைப்பண்ணையில் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் தொடங்க ஆட்சியாளர்கள் முன்வரவில்லை.
கரும்பு சாகுபடி அதிகம் உள்ளதால், கூட்டுறவு சர்க்கரை ஆலையை தொடங்க வேண்டும், நெல் சாகுபடியும் முதன்மையாக உள்ளதால், கூடுதல் எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், நிலக்கடலை சாகுபடியும் இருப்பதால் மணிலா எண்ணெய் வித்து தொழிற்சாலை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.
திருவண்ணாமலை - சென்னை ரயில் சேவை, திண்டிவனம் - ஜோலார்பேட்டை (திருவண்ணாமலை வழியாக) புதிய ரயில் பாதை திட்டம் கடந்த 15 ஆண்டுகளாக கானல் நீராகவே உள்ளன. இக்கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக ஒவ்வொரு முறையும் வாக்குறுதி அளிக்கப்பட்டும் பலனில்லை. இத்தேர்தலிலும் அரசியல் கட்சியினர் வாக்குறுதி அளித்துள்ளனர். காலங்கள் மாறினாலும், காட்சிகள் மாறாமல் உள்ளது என்பது நிதர்சனமாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT