Published : 16 Apr 2024 04:10 PM
Last Updated : 16 Apr 2024 04:10 PM
மதுராந்தகம்: "கோயம்புத்தூரில் அண்ணாமலையை தோற்கடிக்க திமுக வேலையே செய்யவில்லை. இதை மறுக்க முடியுமா? வேலை செய்யாதீர்கள் என திமுக சொல்லியுள்ளது. அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி தொகுதியிலேயே இல்லை. திருப்பூரில் பொதுக் கூட்டம் நடத்திய ஸ்டாலின் ஏன் கோவையில் நடத்தவில்லை" என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரம் மக்களவை தொகுதிக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து மதுராந்தகம் பகுதியில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசுகையில், "அதானி பணம் எதுவுமே கிடையாது. அனைத்தும் மோடியின் பணம். அனைத்து நிறுவனங்களிலும் அமலாக்கத் துறை ரெய்டு நடத்தி மிரட்டி மோடி பணம் வாங்கினார்.
எங்கெங்கு அமலாக்கத் துறை ரெய்டு நடந்ததோ, அங்கே பாஜக பணம் பெற்றுள்ளது. லாட்டரி மார்டினிடம் திமுக ரூ.550 கோடி வாங்கியதுபோல், பாஜகவும் வாங்கியுள்ளது. கொள்கையில் திமுகவும், பாஜகவும் வேறு என சொல்கிறார்கள். ஆனால் மிரட்டி பணம் வாங்குவதில் இரு கட்சிகளும் கூட்டுதான்.
பாஜகவை எதிர்க்கிறோம், மோடியை வரவிடக் கூடாது எனக் கூறிக்கொண்டு, கோயம்புத்தூரில் அண்ணாமலையை தோற்கடிக்க திமுக வேலையே செய்யவில்லை. இதை மறுக்க முடியுமா? வேலை செய்யாதீர்கள் என திமுக சொல்லியுள்ளது. அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி தொகுதியிலேயே இல்லை.
திருப்பூரில் பொதுக்கூட்டம் நடத்திய ஸ்டாலின் ஏன் கோவையில் நடத்தவில்லை. அனைத்தும் நாடகம். தூத்துக்குடியில் கனிமொழிக்காக தமாகவுக்கு சீட் கொடுத்து பாஜக டம்மி வேட்பாளரை நிறுத்தியுள்ளது. கோயம்புத்தூரில் அண்ணாமலைக்காக திமுக டம்மி வேட்பாளரை நிறுத்தியுள்ளது.
சதுரங்கம், கேலோ விளையாட்டு நிகழ்வுக்கு பிரதமர் மோடி ஏன் வர வேண்டும். எந்த மாநிலத்தில் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு பிரதமர் மோடி நேரம் கொடுத்து சந்தித்துள்ளார். பாஜக ஆளும் மாநில விளையாட்டுத் துறை அமைச்சரை மோடி சந்தித்துள்ளாரா?.
கோயம்புத்தூரில் திமுகவினர் ஒருவர் கூட வேலை செய்யவில்லை. ஆ.ராசாவை தவிர, திமுக தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் யாரும் பாஜகவை எதிர்த்து பேசவில்லை" என்று குற்றம்சாட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT