Published : 16 Apr 2024 04:03 PM
Last Updated : 16 Apr 2024 04:03 PM

வேங்கைவயல் வழக்கில் 3 மாதங்களில் விசாரணை நிறைவு: காவல் துறை உறுதி @ ஐகோர்ட்

சென்னை: வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக காவல் துறை தரப்பில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. தற்போது குரல் மாதிரி சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதுவரை, 337 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மூன்று மாதங்களில் வழக்கின் விசாரணை முடிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வன்கொடுமைத் தடுப்பு சட்டம், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவள்ளூர் மாவட்டம், வேப்பன்பட்டுவைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி பொதுநல வழக்குத் தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து, வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு நபர் ஆணையத்தின் இடைக்கால அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “இந்த வழக்கின் விசாரணையில் மாநில அரசு தீவிரம் காட்டவில்லை. எனவே, கிராம மக்கள், மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 மாதங்கள் ஆகிவிட்டன. புலன் விசாரணையில் ஏன் இவ்வளவு தாமதம்? எப்போது விசாரணை முடிக்கப்படும்?” என கேள்வி எழுப்பினர்.

அப்போது, காவல் துறை தரப்பில், “உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. தற்போது குரல் மாதிரி சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதுவரை 337 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மூன்று மாதங்களில் வழக்கின் விசாரணை முடிக்கப்படும்” என உறுதி அளிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கின் புலன் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தி, விசாரணையை ஜூலை 3-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அன்றைய தினத்தில் விசாரணை முடிக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்ப்பதாக நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x