Published : 16 Apr 2024 03:37 PM
Last Updated : 16 Apr 2024 03:37 PM
கும்பகோணம்: மயிலாடுதுறை தொகுதிக்கு உட்பட்ட பட்டவர்த்தியில் அதிமுக வேட்பாளரை கரும்பு விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ப.பாபு, கட்சி நிர்வாகிகளுடன், பாபநாசம் ஒன்றியத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பட்டவர்த்தியில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இது குறித்து, திருமண்டங்குடி சர்க்கரை ஆலை முன்பு 504 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள், ப.பாபு பிரச்சாரம் செய்யும் இடத்துக்கு வந்து அவரை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர்.
பின்னர், அவர் பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே இறங்கிச் சென்றதும், ஆத்திரமடைந்த விவசாயிகள், “அண்மையில் முன்னாள் முதல்வர் பழனிசாமி கபிஸ்தலம் வந்தபோது, அவருக்கு கருப்புக் கொடி காட்டாதீர்கள், உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்த அதிமுக நிர்வாகிகள் எங்கே? ஏன் அதன்பிறகு ஒரு நிர்வாகி கூட, போராட்டப் பந்தலுக்கு வரவில்லை.
எதிர்க்கட்சியில் உள்ள பழனிச்சாமி, போராடி வரும் விவசாயிகள் குறித்து ஏன் பேச மறுக்கிறார்? போராடி வரும் விவசாயியான எங்களுக்கு குரல் கொடுக்காத உங்களுக்கு, எங்கள் வாக்கு மட்டும் தேவையா?'' எனக் கேள்வி எழுப்பினர்.
பின்னர், வேட்பாளர் ப.பாபு, இரு கரங்களைக் கூப்பியபடி, நான் வெற்றி பெற்ற பிறகு உங்களுக்கான அனைத்துக் கோரிக்கையையும் நிறைவேற்றுவேன் என்று பதில் அளித்தார். அதைத் தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர், வேட்பாளர் ப.பாபு பிரச்சாரத்தைத் தொடர்ந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT