Last Updated : 16 Apr, 2024 10:49 AM

 

Published : 16 Apr 2024 10:49 AM
Last Updated : 16 Apr 2024 10:49 AM

“செஞ்சி பகுதியில் விரைவில் ரயில் சேவை” - பாமக வேட்பாளர் வாக்குறுதி

பட விளக்கம்: செஞ்சி அருகே சோ.குப்பம் கிராமத்தில் சாரட் வண்டியில் வேட்பாளர் கணேஷ்குமாரை அமரவைத்து வாக்கு கேட்கும் பாஜக கூட்டணியினர்.

விழுப்புரம்: “திண்டிவனம் - நகரி, திண்டிவனம் - திருவண்ணாமலை ரயில் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அவற்றை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். செஞ்சி பகுதியில் விரைவில் ரயில் வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று ஆரணி பாமக வேட்பாளர் கணேஷ்குமார் வாக்குச் சேகரிப்பின் போது வாக்குறுதி அளித்தார்.

செஞ்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி சார்பில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் வாக்கு சேகரித்தார். அப்போது சோ.குப்பம் கிராமத்தில் வேட்பாளர் கணேஷ்குமாரை சாரட் வண்டியில் அமரவைத்து, பாமகவினர் கிராமம் முழுவதும் மலர் தூவி வரவேற்றனர்.

பின்னர் பாமக வேட்பாளர் கணேஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியது, “நீண்ட நாட்கள் கோரிக்கையாக உள்ள நந்தன் வாய்க்காலை சீரமைக்க வேண்டுமென்று தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர். 2011ம் ஆண்டில் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றபோது தொடர்ச்சியாக சட்டமன்றத்தில் போராடி உலக வங்கி நிதிகளுடன் கூடிய இந்த வாய்க்காலை சீரமைக்கின்ற வேலைகளை செய்தோம். அதனுடைய வெளிப்பாடாக அந்த நீர் சத்தியமங்கலம் வரைக்கும் வந்து கொண்டிருக்கிறது.

இந்த நீர் மழைக்காலங்களில் வருகின்ற நீராக உள்ளது. அருகில் உள்ள சர்க்கரை ஆலைகழிவுகள் இதில் கலந்து வருகிறது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. இதனை கண்டறிந்து சுத்திகரிக்கப்பட்டு அதை தூய குடிநீராக கொண்டுவதற்கான முழு முயற்சி எடுத்து இதனுடைய கடைமடை பகுதியான பனமலை ஏரி வரைக்கும் அந்த நீரை கொண்டு செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பெண்ணையாறு - செய்யாறு இணைப்பு திட்டம் மூலமாக உயர்மட்ட கால்வாய் மூலமாக இந்த நந்தன் வாய்க்காலை பள்ளிகொண்டான்பட்டு அணைகட்டு உடன் இணைத்து, ஆண்டு முழுவதும் அந்த வாய்க்காலில் தண்ணீர் வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

2004ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திண்டிவனம் - நகரி, திண்டிவனம் - திருவண்ணாமலை ரயில் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். விரைவில் செஞ்சி பகுதியில் ரயில் சேவையை நாம் பார்ப்போம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அப்போது எம் எல் ஏ சிவகுமார், பாமக நிர்வாகிகள் ராஜேந்திரன், கனல் பெருமாள், ஜேபி முருகன், ஜெயகுமார், ரகுபதி, அய்யனார், அமமுக மாவட்ட செயலாளர் குமரன், பாஜக அசோக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x