Published : 16 Apr 2024 06:13 AM
Last Updated : 16 Apr 2024 06:13 AM
தூத்துக்குடி: ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் இடையே போர் மூண்டுள்ளது. இந்நிலையில், ஐக்கிய அரபுஅமீரகமான துபாயில் இருந்து மும்பையில் உள்ள நவசேவா துறைமுகத்துக்கு சரக்கு பெட்டகங்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ‘எம்எஸ்சி ஏரீஸ்' என்ற சரக்குக் கப்பலை, ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படை கடந்த 13-ம் தேதி சிறைபிடித்தது.
ஹெலிகாப்டரில் வந்த ஈரான் படையினர், ஓமன் வளைகுடா அருகில் உள்ள ஹார்முஸ் நீரினைஅருகே அந்தக் கப்பலை சிறைபிடித்து ஈரான் நாட்டு துறைமுகத்துக்கு கொண்டு சென்று தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அந்தக் கப்பலுக்கு இஸ்ரேலுடன் தொடர்புள்ளதாக கருதி ஈரான் படையினர் அதை சிறைபிடித்துள்ளனர்.
போர்ச்சுகீசிய நாட்டில் பதிவு செய்யப்பட்ட அந்த கப்பலில் 25 மாலுமிகள் உள்ளனர். அவர்களில் தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தலை மீனவ கிராமத்தைச் சேர்ந்த பிரைன்ஸ்டன், புன்னக்காயல் மீனவ கிராமத்தைச் சேர்ந்த செலாஸ்டின் ஆகியோர் உட்பட 17 பேர் இந்தியர்கள் ஆவர்.
இந்திய மாலுமிகளை மீட்கக்கோரி, ஆலந்தலை கப்பல் மாலுமிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
ஈரான் படையினர் சிறை பிடித்துள்ள ‘எம்எஸ்சி ஏரீஸ்' சரக்கு கப்பலையும், அதில் சிக்கியுள்ள மாலுமிகளையும் பத்திரமாக மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த கப்பல் தொடர்ந்து தனது பயணத்தை தொடரவும், கப்பலில் உள்ள மாலுமிகள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளவும் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், கப்பலில் உள்ள மாலுமிகளின் பாதுகாப்பை சர்வதேச கடல்சார் அமைப்பு உறுதி செய்ய வேண்டும். சர்வதேச கடல்சார் சட்டங்களை ஈரான் மதித்து நடக்க அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT