Published : 15 Apr 2024 08:34 PM
Last Updated : 15 Apr 2024 08:34 PM
ஓசூர்: ஓசூர் மாநகராட்சி கேசிசி நகர் பகுதி மக்கள் “நோ வாட்டர் நோ ஓட்டு” என குடியிருப்புகள் முன்பு துண்டு பிரசுரங்களை ஒட்டி நூதன முறையில் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி 6வது வார்டு, கேசிசி நகரில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளின்றி மலை கிராமங்களில் வாழ்வது போன்று அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியின் அடிப்படை வசதிகள் குறித்து வார்டு உறுப்பினர் மற்றும் மாநகராட்சி ஆணையாளரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக தண்ணீர் இல்லாமல் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் இல்லாததால் மிகவும் அவதியடைந்து வருவதால், இன்று கேசிசி நகர் பொதுமக்கள் தங்களது வீடுகளின் வெளிக்கதவுகளின் முன்பு ''நோ வாட்டர் நோ ஓட்டு'' என துண்டு பிரசுரங்கள் ஒட்டி தேர்தலை புறக்கனிப்பதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பிரியா என்பவர் கூறும் போது, “கேசிசி நகர் குடியிருப்பு பகுதிகளில் சுமார் ஆயிரம் குடியிருப்புகளுக்கு மேல் உள்ளன. தங்கள் குடியிருப்பு உருவாகி 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. மழைக்காலங்களில் மழை பெய்தால் மழைநீர் குடியிருப்புகளுக்கு புகுந்து விடுகிறது. சாலை வசதி இல்லாமல் குண்டும் குழியுமான தெருக்கள் உள்ளது. அதேபோல் போதிய கழிவுநீர் கால்வாய் இல்லாததால், கழிவு நீர் குடியிருப்புகளின் அருகே தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவுகிறது.
மேலும் இதுவரை மாநகராட்சி சார்பில் குடிநீர் இணைப்பு வழங்காததால், சொந்த செலவில் ஆழ்த்துளை கிணறு அமைத்து தண்ணீரை பயன்படுத்தி வந்தோம். இந்நிலையில் வறட்சியின் காரணமாக ஆழ்த்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லாததால், விலை கொடுத்து தண்ணீர் வாங்கி, டிராக்கடர் மூலம் கொண்டு வந்து ஆழ்த்துளை கிணறுகளில் ஊற்றி பயன்படுத்தி வருகிறோம். இதுகுறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டோம். ஆனால் இதற்கு அவர்கள் கேசிசி நகர் குடியிருப்புகள் மாநகராட்சியிடம் ஒப்படைக்காததால் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முடியாது என கூறுகின்றனர்.
ஆனால் நாங்கள் மாநகராட்சிக்கு வரி செலுத்தி வருகிறோம். மற்ற அடிப்படை வசதிகள் இல்லை என்றாலும் பொறுத்துக் கொள்வோம். கடந்த 3 மாதங்களாக தண்ணீர் இல்லமால் கடும் அவதிப்பட்டு வருகிறோம். எந்த அரசியல் கட்சியினருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் எங்கள் குரல் கேட்காததால், நாங்கள் எதற்கு வாக்களிக்கவேண்டும். அதனால் தான் வேறு வழியின்றி வீட்டின் கதவுகளில், ''நோ வாட்டர் நோ ஓட்டு'' என தேர்தல் புறக்கனிப்பதாக துண்டு பிரசுரங்கள் ஒட்டி எதிர்ப்பை தெரிவித்துள்ளோம்.
எனவே, யாரும் தங்கள் பகுதிக்கு வாக்கு சேகரிக்க வரவேண்டாம். அப்படியே அவர்கள் வந்தாலும் இந்த தேர்தலுக்காக கொடுக்கும் பொய்யான வாக்குறுதியாகத்தான் இருக்கும். எனவே மாநகராட்சி ஆணையாளர் நேரடியாக வந்து ஆய்வு செய்து போர்கால அடிப்படையில் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் இல்லை என்றால் எங்களின் கோபத்தை தேர்தலில் காட்டுவோம்” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT