Published : 15 Apr 2024 07:07 PM
Last Updated : 15 Apr 2024 07:07 PM
கோவை: வெறும் 3 சதவீதம் வாக்கு வைத்திருக்கும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை கோவையில் வெல்லப் போவது இல்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக மக்களவை வேட்பாளர்கள் சிங்கை ஜி.ராமச்சந்திரன் (கோவை), கார்த்திகேயன் (பொள்ளாச்சி) ஆகியோர் ரேஸ்கோர்ஸில் உள்ள சி.எஸ்.ஐ பிஷப் பேராயர் திமோத்தி ரவீந்தரை இன்று (ஏப் 15) சந்தித்து அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியது: ''கடந்த மூன்றாண்டுகளாக திமுக மக்களுக்காக எதையும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் கோவையை மாற்றிக் காட்டியுள்ளோம்.
ஐந்து ஆண்டுகளில் 50 ஆண்டுகள் வளர்ச்சியை கோவையில் செய்து காட்டியுள்ளோம். கோவையில் பாஜக வெற்றி பெறப் போவதில்லை. அதிமுக சார்பில் போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரன் வெற்றி உறுதியாகியுள்ளது. வெறும் 3 சதவிகித வாக்கு வைத்திருக்கும் பாஜகவால் எப்படி வெல்ல முடியும்? கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவால்தான் கோவையில் பாஜக ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆட்களை வைத்துக்கொண்டு போலியான கருத்துக் கணிப்புகளை வெளியிட வைத்து வருகிறார்கள். முதலில் அவர்கள் களத்தில், பூத்தில் வேலை செய்வதற்கு ஆட்களைப் போடட்டும். அதன்பிறகு பார்க்கலாம். அதிமுக பொன்விழா கண்ட கட்சி, 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்ட கட்சி. அப்படி இருக்கும்போது, இப்போது வந்து மூன்றாண்டுகள் தான் ஆகிறது. அதற்குள் அதிமுகவை அழித்துவிடுவேன். பொதுச் செயலாளர் பழனிசாமியை காணாமல் செய்துவிடுவேன் என்று வாய்க்கு வந்தபடி பேசுவது நியாயமா?
அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போனார்கள். அவர்(அண்ணாமலை) விமான நிலைய விரிவாக்கத்தை பற்றி பேசுகிறார். விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிதி ஒதுக்கி, 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி கொடுத்தது அதிமுக ஆட்சியில் தான். அதன்பிறகு திமுக அரசும் எதுவும் செய்யவில்லை, மத்திய அரசும் எதுவும் செய்யவில்லை.
அதுபோல் ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தைப் பற்றி பேசியுள்ளார். அத்திட்டத்துக்கான பணிகளையும் நடைமுறைபடுத்தியது அதிமுக ஆட்சியில் தான். அதற்காக கேரளா முதல்வர் பினராயி விஜயனுடன், அப்போதைய முதல்வர் பழனிசாமி பேசினார். நானும், பேரவைத் துணைத் தலைவராக இருந்த பொள்ளாச்சி ஜெயராமனும் நேரில் சென்று பார்த்து திட்டத்தை செயல்படுத்தினோம். அதன் பிறகு திமுக அத்திட்டத்தை கைவிட்டது.
மேலும் பாஜக என்பது வாட்ஸப், யூ டூயூப்களில் மட்டுமே அரசியல் செய்து வருகின்றனர். மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் நூறு சதவீதம் வெற்றி பெறுவார்'' என்று அவர் கூறினார். இந்நிகழ்வில் எம்.எல்.ஏக்கள் அம்மன் அர்ச்சுணன், செ.தாமோதரன், கே.ஆர்.ஜெயராம் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT