Published : 15 Apr 2024 06:56 PM
Last Updated : 15 Apr 2024 06:56 PM
விருதுநகர்: “காங்கிரஸ் கட்சி மகாலட்சுமித் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கொடுப்பதாகக் கூறி மக்களிடம், வாக்காளர்களிடம் கையெழுத்து பெறுகிறார்கள். இந்த ஒரு விஷயத்துக்காகவே மாணிக்கம் தாகூர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறினார்.
இது குறித்து விருதுநகரில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறும். நல்ல சாலை வசதி, குப்பை இல்லாத, சுகாதாரமான விருதுநகரை கட்டமைக்க வேண்டும். பெண்களுக்கு வேலைவாய்ப்பு, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பட்டாசுக்கான தடைகளை நீக்க வேண்டும். சீனா லைட்டர்களை தடை செய்ய வேண்டும்.
விருதுநகர் எங்களது சொந்த மண். இந்த மண்ணின் பிரச்சினைகள் எங்களுக்கு நன்றாகத் தெரியும்.காங்கிரஸ் கட்சி மகாலட்சுமித் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கொடுப்பதாகக் கூறி மக்களிடம் வாக்காளர்களிடம் கையெழுத்து பெறுகிறார்கள். ஒரு வேட்பாளர் எப்படி செயல்பட வேண்டும் என்பது தெரியவில்லை. இது முற்றிலுமாக தேர்தல் விதிமீறல். 10 ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்தவர் இதை செய்யக் கூடாது. இந்த ஒரு விஷயத்துக்காகவே மாணிக்கம் தாகூர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். இது 100 சதவிகிதம் தேர்தல் விதிமுறைக்கு அப்பாற்பட்டது.
இது தொடர்பாக திருமங்கலம், விருதுநகர், சாத்தூர் ஆகிய 3 இடங்களில் காவல் துறையிலும், தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்துள்ளோம். தலைமை தேர்தல் அலுவலரிடமும், டெல்லிக்கும் புகார் அனுப்பியுள்ளோம். பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பதால் எந்தப் பயனும் இல்லை. வேட்பாளரே வாக்காளரிடம் கொடுத்து கையெழுத்துப் பெற்றால், அது தேர்தல் விதிமுறை மீறல்தான். மற்ற இடங்களிலும் இதுபோன்று காங்கிரஸ் கட்சியினர் செய்திருந்தால் அதுவும் விதிமீறல்தான். சட்ட ரீதியாக அந்தந்த தொகுதி வேட்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் கோபத்தில் உள்ளது. 18 சதவிகிதம் ஜிஎஸ்டியால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதை குறைத்து 5 சதவிகிதமாக ஆக்க விஜய பிரபாகரன் நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்பார். அனைத்து பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது. மாநில அரசும் மிகப்பெரும்பான்மையான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பது பொதுமக்களிடம் தெரிகிறது.
காங்கிரஸ் எம்.பி.க்கள் பல தொகுதிகளில் நுழைய முடியாத சூழ்நிலையை பார்த்தேன். தமிழகத்தில் கஞ்சா புழக்கம், வன்முறை காரணமாக திமுக மீது மக்கள் மிகப்பெரிய கோபத்தில் உள்ளனர். இது தேர்தலில் எதிரொலிக்கும். விருதுநகர் தொகுதிக்கான வாக்குறுதிகளை கொடுக்கிறோம். யாரிடமும் நாங்கள் கையெழுத்து வாங்கவில்லை. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தேவையான கோரிக்கைகளை நிறைவேற்றுவோம். மத்திய அரசு நிதியோடு மட்டுமல்லாமல் சொந்த செலவிலும் இலவச தையல் பயிற்சி, நீட் தேர்வுக்கான பயிற்சி என பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவோம்.
குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க தேவைப்படும்போது, விருதுநகருக்கும் சொந்த செலவில் தண்ணீர் லாரி மூலம் தண்ணீர் கொடுப்போம். மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டப் பணியை 150 நாளாக உயர்த்தி ரூ.500 ஊதியம் கிடைக்க விஜய பிரபாகரன் டெல்லியில் கண்டிப்பாக பேசுவார். இதுபோன்ற பல்வேறு திட்டங்களை வைத்துள்ளோம். கேப்டனுக்கு விருத்தாசலம் முதல் வெற்றிபோல் விஜய பிரபாகரனுக்கு விருதுநகரில் முதல் வெற்றி கிடைக்கும். உறுதியாக அனைத்து திட்டங்களையும் நாங்கள் செயல்படுத்துவோம்.
பாஜக தேர்தல் அறிக்கையில் தமிழ் வளர்ச்சிக்கான திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். வாக்குறுதிகளை நிறைவேற்றினால் வரவேற்போம். எங்களது தேர்தல் அறிக்கையை குரான், பைபிள், பகவத் கீதை போன்று மதிக்கிறோம். தேர்தல் என்பதே போர்தான். எனது மகனை போர்க்களத்திற்கு வெற்றிவீரனாக அனுப்பியுள்ளேன்” என்று கூறினார். அதைத் தொடர்ந்து, விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கான 46 தேர்தல் வாக்குறுதிகளை பிரமலதாவும், விஜய பிரபாகரனும் வெளியிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT