Published : 15 Apr 2024 06:08 PM
Last Updated : 15 Apr 2024 06:08 PM
நெல்லை: “இண்டியா கூட்டணியில் திமுக, காங்கிரஸின் சித்தாந்தம் வெறுப்பினால் உருவாக்கப்பட்டுள்ளது. திராவிடத்தின் பெயரால் தமிழகத்தின் பாரம்பரியத்தை, பண்பாட்டை அழிக்க நினைக்கிறார்கள்" என்று நெல்லையில் நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக மீண்டும் தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி. விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி தொகுதிகளில் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நெல்லை அம்பாசமுத்திரம் பகுதியில் நடைபெறும் பிரச்சாரத்தில் கலந்துகொண்டார் அவர். பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசியது: “இந்தக் கூட்டத்தின் உற்சாகத்தையும் வரவேற்பையும் பார்த்து திமுக மற்றும் காங்கிரஸின் இண்டியா கூட்டணிக்கு தூக்கமே தொலைந்திருக்கும். உங்கள் ஆதரவுக்கு தலை வணங்குகிறேன்.
நேற்றுதான் நீங்கள் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடியிருப்பீர்கள். தமிழ் புத்தாண்டில்தான் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் தமிழகத்துக்கான பல திட்டங்கள் உள்ளன. மோடியின் உத்தரவாதம் என்று அதனை படிப்பவர்கள் பலரும் பாராட்டுகிறார்கள். ஒவ்வொரு பிரிவினரையும் யோசித்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த தமிழகம்தான் வளர்ந்த பாரதமாக மாறும் என்ற நம்பிக்கையோடு தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளோம்.
கடந்த 10 வருடங்களாக பாஜக மிகக் கடுமையாக உழைத்து நல்ல திட்டங்களை கொண்டுவந்துள்ளது. அதில் ஒன்று நெல்லைக்கான வந்தே பாரத் ரயில். அதனால் பலர் நன்மையை பெற்றுவருகின்றனர். தற்போது தெற்கிலும் புல்லட் ரயில் சேவை தொடங்க திட்டமிட்டு கொண்டிருக்கிறோம். புதிய அரசு அமைந்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கும். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் தாய்மார்கள் மோடியை ஆதரிக்கிறார்கள் என்று எல்லோரும் ஆச்சரியப்படுகின்றனர்.
அரசியல் வித்தகர்களுக்கு இதற்கான காரணம் தெரியவில்லை. காரணம் என்னவென்றால், தாய்மார்கள் படும் துன்பத்தை உணர்ந்து வைத்துள்ளேன். அதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றேன். தாய்மார்களுக்கு தொண்டு செய்ததால் எனக்கு இந்த அன்பு கிடைத்து வருகிறது.
தமிழ் மொழியை, கலாச்சாரத்தை நேசிப்பவர்கள் பாஜகவையும் நேசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். தமிழ் மொழிக்கு உலக அங்கீகாரத்தை பெற்றுவருவதாக பாஜக தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் புராதன சின்னங்கள் உலகப் புகழ் பெறும். உலகம் முழுவதும் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் உருவாக்கப்படும்.
இண்டியா கூட்டணியில் திமுக, காங்கிரஸின் சித்தாந்தம் வெறுப்பினால் உருவாக்கப்பட்டுள்ளது. திராவிடத்தின் பெயரால் தமிழகத்தின் பாரம்பரியத்தை, பண்பாட்டை அழிக்க நினைக்கிறார்கள். அது செங்கோல், ஜல்லிக்கட்டு ஆகியவற்றை திமுக, காங்கிரஸும் எப்படி எதிர்த்தார்கள் என்பதிலேயே தெரியும்.
இந்தியாவின் தென்பகுதியில் இருக்கும் நெல்லை மண்ணில் பொங்கும் வீரமும், தேசப்பற்றும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாட்சியார் போன்றோர் எப்பேர்ப்பட்ட துணிச்சல் மிக்கவர்கள். இவர்கள் எல்லாம் வாழ்நாள் முழுவதும் ஆங்கிலேயே ஆட்சியை எதிர்த்து போராடினர். அதேபோல், சுதந்திர போராட்ட காலத்தில் முத்துராமலிங்க தேவரின் தாக்கத்தால் நேதாஜியின் படைக்கு இந்தப் பகுதியில் இருந்து ஏராளமான தமிழர்கள் சென்றார்கள்.
இவர்களின் கனவு எல்லாம், இந்தியா வலுவான, வளமான நாடாக விரும்பினார்கள். அதுபோலவே, தற்போது இந்தியா இன்று மதிக்கப்படுகிறது. ஜி20 மாதிரி உலகளாவிய நிகழ்வுகளால் இந்தியா பெருமை கொள்கிறது. இந்தியா மீது பற்று வைத்துள்ள ஒவ்வொருக்கும் பாஜகதான் பிடித்தமான கட்சி. பாஜக எப்போதும் தமிழ் மொழியையும், தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் மிகவும் நேசிக்கும் கட்சி.
அதனால்தான் தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் பாஜகவுக்கு மாபெரும் உற்சாகம் கிடைக்கிறது. இந்தியா தன்னிறைவு பெற வேண்டும் என நினைத்த இந்தப் பகுதியைச் சேர்ந்த வ.உ.சிதம்பரம் பிள்ளை தான் எங்களுக்கு ஊக்கம் கொடுக்கிறார். அவர் காட்டிய வழியில் தான் பாதுகாப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு பெற்று வருகிறது. தமிழகத்தில் பாதுகாப்பு வழித்தடத்தை உருவாக்கியுள்ளோம்.
காமராஜர் தேசப் பக்தியும், நேர்மையும் கொண்ட மாபெரும் தலைவர். அவரை பின்பற்றி தூய்மையான அரசியலை பாஜக இன்று முன்னெடுத்து செல்கிறது. ஆனால், காங்கிரஸும் திமுகவும் காமராஜரை தொடர்ந்து அவமதித்துக் கொண்டிருக்கிறது. எங்களின் லட்சியம் தூய்மையான அரசியல். அதில் பயணிக்கும்போது எம்ஜிஆர் கனவுகளை தமிழகத்தில் முன்னெடுத்து செல்கிறது பாஜக. சட்டசபையில் ஜெயலலிதா அவமதிக்கப்பட்ட விதம் மறக்க முடியாது.
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் கோரிக்கையை நிறைவேற்றியது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தான். திமுக, காங்கிரஸ் பல்வேறு தேச விரோத செயல்களை செய்து வந்தன. கச்சத்தீவை வேறு நாட்டுக்கு தாரைவார்த்தார்கள். கச்சத்தீவு விவகாரத்தில் இரு கட்சிகளும் திரைமறைவில் செய்த இந்த வரலாற்று பிழை மன்னிக்கவே முடியாத பாவம். ஏனென்றால், தமிழக மீனவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் செய்த இந்த தேச துரோகத்தை சமீபத்தில் பாஜக தான் அம்பலப்படுத்தியது.
தமிழகம் இன்றைக்கு போதையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. குடும்ப அரசியலில் இருப்பவர்கள் போதையை ஊக்குவிக்கிறார்கள். அதிகாரம் மிக்கவர்களின் அனுமதியுடன் போதைப்பொருள் தலைவிரித்தாடுகிறது. போதைப்பொருள் என்கிற விஷம் தமிழகம் முழுவதும் பரவி உள்ளது. போதைப்பொருள் மாஃபியா யாருடைய பாதுகாப்பில் நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். போதைப்பொருளை இந்த தேசத்தை விட்டு ஒழிப்பேன்.
இந்தக் கூட்டம்தான் தமிழகத்தில் இந்தத் தேர்தலுக்காக நான் கலந்துகொள்ளும் கடைசி கூட்டம். இன்னொரு முறை உங்களை வந்து சந்திக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. இத்தனை முறை தமிழகம் வந்து உங்களை பார்த்ததில் பாஜக மட்டும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு அமோக ஆதரவு தருகிறீர்கள்.
பாஜக தமிழகத்தில் எங்கு இருக்கிறது என்று திமுகவும், இண்டியா கூட்டணி கேட்டார்கள். அவர்கள் வியக்கும் அளவுக்கு நீங்கள் பாஜகவுக்கு அமோக ஆதரவு தருவீர்கள். பாஜக வந்துவிடும் என்று அவர்கள் ஒரு பழைய பல்லவியை பாடுகிறார்கள். அவர்கள் சொன்ன வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
ஆனால், 24X7 மணி நேரமும் 2047 பற்றி தான் எனது சிந்தனை இருக்கிறது. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கக்கூடிய திமுகவுக்கு பயமும், பதற்றமும் வந்துவிட்டது. பேரலை போன்ற மக்களின் ஆதரவால் பயப்படுகிறார்கள். பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை தடுக்கும் அளவுக்கு பயப்படுகிறார்கள். பாஜக தொண்டர்கள் பக்கம் மொத்தத் தமிழ்நாடும் உள்ளது" என்று பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT