Published : 15 Apr 2024 04:38 PM
Last Updated : 15 Apr 2024 04:38 PM
அரியலூர்: சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் சிமென்ட்தொழிற்சாலைகள், தனியார் கரும்பாலை தவிர, வேறு பிரதான தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. இத்தொகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே முழுவதும் நம்பியுள்ளனர். சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அதிமுக சார்பில் சந்திரகாசன், பாஜக சார்பில் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜான்சிராணி உட்பட 14 பேர் களத்தில் உள்ளனர்.
வாக்குப் பதிவுக்கு 4 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் வெயிலின் தாக்கத்தை விட அதிகம் சூடு பிடித்துள்ளது. வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சித் தலைவர்கள், இந்நாள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள் முழு வீச்சில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாய்ச்சலில் விடுதலை சிறுத்தைகள்: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வெ.கணேசன், எம்எல்ஏக்கள் ஜெயங்கொண்டம் கண்ணன், காட்டுமன்னார்கோவில் சிந்தனைச் செல்வன் ஆகியோர் பம்பரமாய் சுற்றி வருகின்றனர். தொண்டர்களும் களத்தில் பாய்ச்சல் காட்டி வருகின்றனர்.
மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்கள் வைகோ, கே.பாலகிருஷ்ணன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் தொகுதியில் வாக்கு சேகரித்து சென்றுள்ளனர். ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டது.
மகளிருக்கு மாதம் உரிமைத்தொகை ரூ.1,000, நகரப் பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், ஏற்கெனவே 2 முறை எம்.பி.யாக இருந்து தொகுதிக்கு கொண்டு வந்த வளர்ச்சிப் பணிகள், தொகுதிக்காக மக்களவையில் கோரிக்கை வைத்ததை முன்னிறுத்தி வாக்கு சேகரிப்பில் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். திருமாவளவன், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை அடுத்த ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
துள்ளலில் அதிமுக வேட்பாளர்: அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரகாசனுக்கு முன்னாள் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, ஜெயபால், முன்னாள் எம்.பி. சந்திரகாசி, சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவர் வரகூர் அருணாசலம், எம்எல்ஏ அருண்மொழித்தேவன் உள்ளிட்டோர் களப்பணியாற்றி வருகின்றனர்.
சந்திரகாசனுக்கு வாக்குக்கேட்டு ஏற்கெனவே அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி 2 முறை வந்து பிரச்சார பொதுக்கூட்டத்திலும், வேனில் சென்றும் பிரச்சாரம் செய்துள்ளார். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு, திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.
போதைப் பொருட்கள் விற்பனை முற்றிலுமாக தடுக்கப்படும். பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும், அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை முன்னிறுத்தியும் துள்ளலுடன் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் நேற்று குன்னத்தை அடுத்த தெரணி கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வசீகர வாக்குறுதியுடன் பாஜக வேட்பாளர்: பாஜக சார்பில் போட்டியிடும் கார்த்தியாயினிக்கு பாஜக தேசியத் தலைவர் நட்டா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்துள்ளனர். என்னை வெற்றிபெற வைத்தால் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுவதை ரூ.12 ஆயிரமாக உயர்த்துவேன்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா ஒரு இலவச நீட் பயிற்சி மையம் கொண்டு வருவேன். காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மூடுவேன். ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைப்பேன்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவேன் என்பன உள்ளிட்ட வசீகரமான வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
எழுச்சியுடன் நாம் தமிழர்: தேர்தலுக்கு புதிதான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ளவை முழுமையாக செயல்படுத்தப்படும். மேலும், ஒவ்வொரு கிராமத்திலும் பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
குடிநீர், சாலை, தெருவிளக்கு, கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என எழுச்சியுடன் தெருத் தெருவாக இளைஞர்களுடன் சென்று `மக்களுடன் நான்' எனக்கூறி வாக்குகளை சேகரித்து வருகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT