Published : 15 Apr 2024 04:07 PM
Last Updated : 15 Apr 2024 04:07 PM
புதுச்சேரி: “பாஜக தேர்தல் அறிக்கையில் புதுச்சேரி மாநில அந்தஸ்து பற்றி ஏதும் கூறவில்லை. இதன்மூலம் மோடி அரசானது புதுச்சேரி மக்களை புறக்கணிப்பது தெளிவாகிறது” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார். மேலும், “தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவியை வைத்து நிர்வாகத்தை நடத்த விடாமல் முடக்கும் பணியை செய்து நெருக்கடியை மோடி தருகிறார்” என்று அவர் பேசினார்.
புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து இன்று மதியம் நடந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியது: “மத்திய காங்கிரஸ் அரசானது, புதுச்சேரிக்கு யூனியன் பிரதேச அங்கீகாரத்தை அப்போது தந்தது. தற்போது புதுச்சேரி முழு மாநில அந்தஸ்து பெற்ற மாநிலமாக மாற வேண்டும். காங்கிரஸ் கட்சியானது உறுதியாக மாநில அந்தஸ்து பெற்று தரும். ஆனால், மாநில அந்தஸ்தை மோடி தரமாட்டார். ரங்கசாமியும் செய்ய மாட்டார். பாஜக தேர்தல் அறிக்கையில் மாநில அந்தஸ்து பற்றி ஏதும் கூறவில்லை. இதன்மூலம் மோடி அரசானது புதுச்சேரி மக்களை புறக்கணிப்பது தெளிவாகிறது.
இண்டியா கூட்டணி வந்த பிறகு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தருவோம் என வாக்குறுதி தருகிறோம். அது மட்டுமில்லாமல் ரேஷன் கடைகளைத் திறப்போம். ஆலைகளைத் திறப்போம். கூட்டுறவு நிறுவனங்களை திறந்து வேலை தருவோம். அமலாக்கத் துறை மூலம் தமிழக அமைச்சர் பொன்முடியை மோடி அரசு கைது செய்து துன்புறுத்தி ஜனநாயகப் படுகொலை செய்ததையும், விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தொல்லை தந்ததைதையும் எதிர்த்தேன். பாஜக அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது.
ஆளுநர் மூலம் தொல்லை தருகிறார்கள். புதுச்சேரியில் ஆளுநரை வைத்து காங்கிரஸ் அரசுக்கு எப்படி தொல்லை தந்தார்களோ, அதேபோல தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவியை வைத்து நிர்வாகத்தை நடத்த விடாமல் முடக்கும் பணியை செய்து நெருக்கடியை மோடி தருகிறார். தமிழக அரசுடைய மக்கள் நலத் திட்டங்களை கோப்புகள் அனுப்பினால், அதை ஆளுநர் ரவி முடக்கி தாமதப்படுத்தி ஜனநாயக படுகொலை செய்தார். அரசமைப்புச் சட்டத்துக்கு முரணாக செயல்படுகிறார். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் முடக்குவதே மோடி அரசின் வேலை.
புதுச்சேரி மாநில முதல்வரைப் பார்த்து பரிதாபப்படுகிறேன். அவரும் செயல்படவில்லை. மோடியும் அவரை செயல்படவிடவில்லை. தலையாட்டி பொம்மை போல் கைக்குள் வைத்துள்ளனர். நாராயணசாமியை போல் ரங்கசாமிக்கும் அந்தத் தொல்லை தொடர்கிறது.
‘சோனியா, கார்கே ஆகியோருக்கு ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு அழைப்பு விடுத்திருந்தேன். ஆனால் வரவில்லை’ என்று மோடி குறிப்பிட்டுள்ளார். அவர்கள், ராமருக்கு எதிர்ப்பானவர்கள் என்று எங்கள் மீது பொய் குற்றச்சாட்டு மக்கள் மீது திசை திருப்புகிறார். ராமரை மதிக்கிறோம். காங்கிரஸ் கட்சி தலைவர்களாக சோனியா, கார்கேவை அவர் அழைக்கவில்லை. காங்கிரஸ் ராமர் கோயிலுக்கு எதிர்ப்பு எனச் சொல்கிறார்கள். ராமர், சிவன் பக்தர்கள் இருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் எந்தக் கடவுளையும் கும்பிடலாம். இந்தக் கடவுளைத்தான் கும்பிட வேண்டும் என்று வற்புறுத்த முடியாது. மோடி ராஜதந்திர அரசியலை காங்கிரஸிடம் காட்டுகிறார்.
இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துவிட்டதாக மோடி கூறுகிறார். ஆனால், கடனை வாங்கிவிட்டு இந்தியா வளர்ந்ததாகக் கூறுகிறார். மோடி ஆட்சியை பொறுத்தவரை பொருளாதாரம் சீரழிந்து வருகிறது. இரண்டு கோடி பேருக்கு வேலை தருவதாக மோடி வாக்குறுதி தந்தார். பத்தாண்டுகள் ஆகிவிட்டன. 20 கோடி பேருக்கு வேலை தந்திருக்கவேண்டும். வேலை தரவில்லை. பிரதமர் பொய் சொல்கிறார். மோடி நிறைய வாக்குறுதி தந்து நிறைவேற்றவில்லை.
மோடி ஆட்சியில் அவர் சொல்வதெல்லாம் பொய்யாக இருக்க, அதை எப்படி நம்ப முடியும். மக்கள் நம்பிக்கையை மோடி இழந்து வருகிறார். பிரதமர் மோடி மக்களுக்கு தந்த வாக்குறுதியை நிறைவேற்றாதவர் என தெளிவாக தெரிகிறது. அவர், மோடி இருந்தால் எதுவும் நடக்கும் என்று சொல்கிறார். மோடி இருந்தால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது என்பதே உண்மை. நாடு வளர்ந்து விட்டதாகக் கூறும் மோடி, கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறார். இதிலே அவர் முன்னுக்கு பின் முரணாக செயல்படுவது தெரிகிறது.
வேலைவாய்ப்பு இல்லாத சூழல் மாற வேண்டும். இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாட்டில் காலியாகவுள்ள 30 லட்சம் வேலைவாய்ப்புகள் ஓராண்டில் நிரப்புவோம். ஆண்டுதோறும் மகளிர் உரிமத் தொகை ரூ.1 லட்சம் தருவோம். அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள், மதிய உணவுத்திட்ட பணிபுரிவோர் வாங்கும் ஊதியத்தை இரட்டிப்பாக்குவோம். மத்திய அரசு நிதி தரும். மோடியின் வாக்குறுதி பொய்யானது. காங்கிரஸின் வாக்குறுதியே மெய்யானது. வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி தரவில்லை. ரூ.15 லட்சம் வங்கி கணக்கில் வரும் என்றதையும் செய்யவில்லை.
மோடி, அமித் ஷா மிகப் பெரிய சலவை இயந்திரம் வைத்துள்ளனர். வருவான வரித் துறை, சிபிஐ, அமலாக்கத் துறை மூலம் மிரட்டி அடிபணிந்தால் சலவை இயந்திரத்தில் போட்டு தூய்மை செய்து விடுகின்றனர். குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டோர் பாஜகவில் சேர்ந்தால் தூய்மையானவர்கள் ஆகின்றனர். மோடி வாக்குறுதி எதுவும் நிறைவேற்றவில்லை. தூய்மையானவர் - ஊழல் இல்லாதவர் என்று அரிசந்திரன்போல் பேசினாலும் பாஜக ஊழலில் திளைத்துள்ளது. விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலைவாய்ப்பு இல்லை ஆகிவற்றுக்கு மோடிதான் காரணம். மோடி வாக்குறுதி பொய்யானது. நமது அரசியலமைப்பு சட்டம், சுயமரியாதைக்காக நாம் வாக்களிக்க வேண்டும்'' என்றார் கார்கே.
LIVE: Congress President Shri @kharge addresses the public in Puducherry, Tamil Nadu for the 2024 Lok Sabha campaign.
https://t.co/70CaHvJ9LI— INC PUDUCHERRY (@INCPuducherry) April 15, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT