Published : 15 Apr 2024 03:09 PM
Last Updated : 15 Apr 2024 03:09 PM
திண்டுக்கல்: திண்டுக்கல் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய அவரது சொந்தக் கட்சி தலைவர்கள் யாரும் தொகுதிக்கு வராத நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் தொகுதியைக் கண்டு கொள்ளவில்லை. இதனால் தனி ஆளாக தேர்தல் களத்தில் பாமக வேட்பாளர் பிரச்சாரம் செய்து வருகிறார்.
திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி, மார்க்சிஸ்ட் தேசியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியச் செயலாளர் பிரகாஷ் காரத், மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், திருச்சி சிவா எம்.பி., பீட்டர் அல்போன்ஸ், திண்டுக்கல் லியோனி, நடிகர் கருணாஸ், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர்.
அதிமுக கூட்டணியில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக்கை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலைராஜனை ஆதரித்து செம்பட்டி, ஒட்டன்சத்திரம், ஆயக்குடி ஆகிய பகுதிகளில் அக்கட்சியின் தலைமை ஒருங் கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஆனால், பாஜக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் ம.திலக பாமாவை ஆதரித்து திண்டுக்கல் தொகுதியில் பிரச்சாரம் செய்ய அவரது கட்சியைச் சேர்ந்த நிறுவனத் தலைவர் ராமதாஸ், மாநில தலைவர் அன்புமணி, கவுரவத் தலைவர் கோ.க.மணி உள்ளிட்ட யாரும் இதுவரை வரவில்லை.
திண்டுக்கல் தொகுதியை பாமகவுக்கு பெற்று வேட்பாளரை அறிவித்ததோடு தங்கள் கடமை முடிந்துவிட்டது என பாமக கட்சித் தலைமை முடிவு செய்துவிட்டது போல் தங்கள் கட்சி வேட்பாளரையே கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டதாக அக்கட்சியினரே புகார் தெரிவிக்கின்றனர். தேர்தல் பிரச்சாரம் ஏப்.17-ம் தேதி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. பிரச்சாரம் முடிய இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில் இதுவரை அக்கட்சித் தலைவர்கள் வராதது பாமக வேட்பாளரை மட்டுமல்ல, அக்கட்சி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சியான பாஜக நிர்வாகிகளையும் சோர்வடையச் செய்துள்ளது.
பாமக தலைவர்கள்தான் பிரச்சாரத்துக்கு வரவில்லை என்றால், கரூர் தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம் பாறைக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த பாஜக மாநிலத் தலை வர் அண்ணாமலையும் திண்டுக்கல் தொகுதியைக் கண்டு கொள்ளவில்லை என பாமகவினர் தெரிவித்தனர். ஆனால், பாமக வேட்பாளர் திலகபாமா, இதைப் பற்றி யெல்லாம் கவலைப்படாமல் தனது பாணியில் விறுவிறுப்பாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்.
வியாபாரியுடன் சேர்ந்து மாம்பழம் விற்பது, விவசாயத் தொழிலாளர்களுடன் சேர்ந்து நாற்று நடுவது, கயிறு திரிப்பது, பூப்பறிக்கும் பெண்களுடன் இணைந்து பூப்பறிப்பது என பிரச்சாரத்தில் மக்களை கவர்ந்து வருகிறார். அவருடன் உள்ளூர் பாமக, பாஜக நிர்வாகிகள் வாக்குச் சேகரிக்க தொகுதி முழுவதும் செல்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT