Published : 15 Apr 2024 03:01 PM
Last Updated : 15 Apr 2024 03:01 PM
பந்தலூர்: “இந்திய நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்ட பிரதமர் மோடி தவறிவிட்டார்” என்று நீலகிரி மாவட்டம் தாளூர் பகுதியில் நடைபெற்ற விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசினார். மேலும், ‘பாஜகவிடம் மக்களுக்கான திட்டம் எதுவும் இல்லை’ என்று அக்கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை குறித்து தெரிவித்தார்.
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரியில் உள்ள தாளூர் பகுதிக்கு இன்று வருகை புரிந்தார். அவர் வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். பின்னர் தாளூர் பகுதியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசினார். அவர் பேசும்போது, ‘‘நான் தமிழகத்துக்கு வருவதும் தமிழக மக்களை சந்திப்பதும் எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
நாம் மிகப் பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். மத்தியில் ஆளக்கூடிய பாஜக அரசை எதிர்த்து நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய பிரதமர் ஒரு நாடு, ஒரு தலைவர், ஒரு மொழி என்று தவறாக இந்த நாட்டை வழிநடத்த பார்க்கிறார். இந்த நாடு பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு உணர்வுகளை கொண்ட மக்கள் வாழும் நாடு என்பதை மறந்துவிட்டு அவர்கள் செயல்படுகிறார்கள்.
தமிழ் மொழி, தமிழ் மக்கள் மீது எந்த மொழியும் எந்த ஆதிக்கத்தையும் செலுத்துவதை நாம் அனுமதிக்க மாட்டோம். அதை நானும் அனுமதிக்க மாட்டேன். நமது பிரதமர் நாட்டின் பன்முக தன்மையை மதிக்க மறுக்கிறார். நமது நாடு ஒரு மொழி ஒரு நாடு என்பது அல்ல, பல்வேறு மொழி பேசும் பல்வேறு மக்களை உள்ளடக்கிய நாடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பல்வேறு ஒற்றுமைகளுடன் வாழ்வதுதான் நமது இந்திய நாடு.
பல்வேறு மொழிகள் பேசப்பட்டு, பல்வேறு இனத்தவர்கள் நமது நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இந்திய பிரதமர் இந்த பன்முக தன்மை உணர்வுகளை எல்லாம் மதிக்க தவறிவிட்டார். நம்முடைய மக்களுக்கு, விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு என பல்வேறு இன மக்களுக்கான உரிமையை நாம் வழங்க விரும்புகிறோம். ஆனால் பிரதமர் மோடி அதை விரும்பவில்லை.
பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை நாம் ஒற்றுமையே நிலை நாட்ட விரும்புகிறோம். ஆனால், அதை அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் குறிப்பிடுகின்ற ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு செயல் என்பது தவறு என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
இந்த நாட்டின் தலைவராக இருப்பவர் எல்லாவற்றையும் இணைப்பவராக இருக்க வேண்டும். ஆனால், பிரதமர் மோடி அப்படி இருக்கவில்லை. பாஜக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள எந்தத் திட்டமும் மக்களுக்காக அறிவித்துள்ள திட்டம் இல்லை. ஆனால், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இந்தியாவில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கு ஓர் ஆண்டுக்கு பயிற்சி கட்டணமாக ஒரு லட்ச ரூபாய் தர உறுதியளித்துள்ளோம்.
நம்முடைய நாட்டில் முக்கியமான துறை ராணுவத் துறை. அதில் பயிற்சிபெற அனுப்புகிற மக்களுக்கு எதிராக அவர்கள் இருக்கிறார்கள். அக்னிவீரர் திட்டம் தவறான திட்டம். அதை மாற்றி அமைக்கப்போம்" என்று ராகுல் காந்தி பேசினார்.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்டபின்னர், கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க ராகுல் காந்தி சாலை வழி மார்க்கமாக சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT