Published : 15 Apr 2024 01:12 PM
Last Updated : 15 Apr 2024 01:12 PM
காரைக்குடி: “14 நாட்களில் 15 லட்சம் பரிந்துரைகளை பரிசீலித்ததாக சொல்கிறார்கள். இதற்கு அவர்களுக்கு கின்னஸ் சாதனையை அளிக்க வேண்டும். மத்திய அரசின் நடப்பு திட்டங்கள், புதிய திட்டங்களாக சொல்லியுள்ளார்கள். பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை.” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நான்கு மாதங்களாக தயாரிக்கப்பட்டது. ஆனால், பாஜக தேர்தல் அறிக்கை 14 நாட்களில் தயாரிக்கப்பட்டது. மார்ச் 30ல் தான் ராஜ்நாத் சிங் தலைமையில் தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டது. 14 நாட்களிலயே தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
14 நாட்களில் 15 லட்சம் பரிந்துரைகளை பரிசீலித்ததாக சொல்கிறார்கள். இதற்கு அவர்களுக்கு கின்னஸ் சாதனையை அளிக்க வேண்டும். மத்திய அரசின் நடப்பு திட்டங்கள், புதிய திட்டங்களாக சொல்லியுள்ளார்கள். பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. உதாரணத்துக்கு இந்தியாவில் ஏழ்மை ஏறத்தாழ அகன்றுவிட்டது என்று சொல்லியுள்ளது நிதி ஆயோக். நாட்டில் 5% பேர் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஏற்க முடியாது. அதனால்தான் 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை அறிவித்துள்ளது பாஜக.
பாஜக உண்மை கூற்றை மறைக்க பார்க்கிறது. அடுத்ததாக, எல்லா ஊர்களுக்கும் குழாய் மூலம் தண்ணீரே சென்று சேராத நிலையில் குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்வதாகக் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
பாஜக அரசு, மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. தற்போதைய நிலையில் நிலுவையில் உள்ள கல்விக்கடன் ரூ.11,122 கோடி. அதில், ரூ.4,124 கோடி வாராக்கடனாக இருக்கிறது. இந்த இரண்டையும் தள்ளுபடி செய்ய முடியாதா என்ன?. கடந்த 9 ஆண்டுகளில் பெருமுதலாளிகள் வங்கிகளில் வாங்கிய ரூ.11 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பெருமுதலாளிகளின் பல லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்யும் போது மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்ய முடியாதா?.
அனைத்து ஊர்களுக்கும் புல்லட் ரயில் இயக்கப்படும் என்ற பாஜக வாக்குறுதி வேடிக்கையானது. ஒரு புல்லட் ரயிலுக்கு ரூ.1.1 லட்சம் கோடி செலவு செய்யத் தயாராக உள்ள பாஜக அரசு, போதிய விபத்து தடுப்புக் கருவிகளைப் பொருத்தாதது ஏன்?.
வேளாண் விளை பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஏற்கெனவே உள்ள ஒன்றுதான். பழைய பல்லவிகளைப் பாடுவது புதிய சிந்தனை அல்ல.
பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை வேண்டுமென்றே பாஜக ஒத்திப் போட்டுள்ளது. 33% மகளிர் இட ஒதுக்கீடு குறித்து பாஜக அரசு சட்டம் இயற்றி இருந்தாலும், அது இப்போதைக்கு அமலுக்கு வராது.
பாஜக அரசு 4 கோடி வீடுகளைக் கட்டிக்கொடுத்துவிட்டதாகத் தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது பொய்க் கணக்கு. 4 கோடி வீடுகளைக் கட்டி இருந்தால் 52,000 வீடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டி இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் பாஜக அரசு கட்டிக்கொடுத்த 52000 வீடுகளைக் காட்ட முடியுமா?.
இந்தியாவை இரண்டு ஆபத்துகள் சூழ்ந்துள்ளது. இந்திய ஜனநாயகத்துக்கு, சகிப்பு தன்மைக்கு, சக வாழ்வுக்கு எதிராக இரண்டு ஆபத்துகள் எழுந்துள்ளன. ஒன்று ஒரு நாடு ஒரு தேர்தல், இன்னொன்று பொது சிவில் சட்டம். இது இரண்டு பேராபத்து. மக்களை பிளவுபடுத்திவிடும். இந்தியாவை சர்வாதிகார பாதையில் செலுத்தும். ஒரு கட்சி தான் நிலைத்து நிற்கும். மற்ற கட்சிகள் எல்லாம் அழிக்கப்பட்டுவிடும்.
இந்த இரண்டு திட்டத்தையும் அமல் செய்வோம் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் மீண்டும் சொல்லியுள்ளது. மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக வாக்களிக்க வேண்டும். இந்த இரண்டு தான் அவர்களுக்கு சர்வாதிகார பாதையில் இந்தியாவை கொண்டு செல்ல வழிவகுக்கும். எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT