Published : 15 Apr 2024 06:30 AM
Last Updated : 15 Apr 2024 06:30 AM
சென்னை: தமிழகத்தில் மக்களவை தேர்தல் பாதுகாப்புக்காக கூடுதலாக 10 கம்பெனி துணை ராணுவம் கோரப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.
தமிழகத்தில் மக்களவை பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்.19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியதாவது: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் உள்ள 61,135 போலீஸாரில் 26, 247 பேர் தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
யாருக்கெல்லாம் தபால் வாக்குகள் வரவில்லையோ அவர்களுக்கு விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மறுநாள் ஏப்.17-ம் தேதி பிற தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் திருச்சியில் உள்ள ஒருங்கிணைந்த மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து பிரித்தனுப்பப்படும்.
அதேபோல், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் படிவம் ‘12டி’ பயன்படுத்தி வரும் ஏப்.18-ம் தேதிவரை தபால் வாக்குகள் பதிவு செய்ய முடியும். முன்னர் இருந்த நடைமுறைபோல், வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்வரை தபால் வாக்கு அளிக்கும் வசதி தற்போது இல்லை.
மேலும், பாதுகாப்பு பணியில் உள்ள 71 ஆயிரம் ராணுவ வீரர்கள், ஆன்லைன் மூலம் தபால் வாக்கு வசதிக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு மட்டும், ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன் காலை 8 மணிக்குள் தபால் வாக்குகள் அனுப்புவது அனுமதிக்கப்படும்.
கூடுதல் துணை ராணுவம்: தமிழக தேர்தல் பணியில் பாதுகாப்புக்காக தேர்தல் ஆணையம் 190 கம்பெனி துணை ராணுவப் படையை அனுமதித்து, அவர்கள் வந்து சேர்ந்துள்ளனர். இந்நிலையில் கூடுதலாக 10 கம்பெனி துணை ராணுவப் படையை அனுப்ப வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் டிஜிபி கேட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆணையம் முடிவு செய்யும். கூடுதல் பாதுகாப்பு அலுவலர் தேவைக்கு அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து காவலர்களை அழைக்கவும், அவர்களுக்கான செலவினங்களை ஏற்று பயன்படுத்தவும் தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ‘ஸ்ட்ராங்க் ரூம்’களில் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் உரிய பாதுகாப்புடன், ஏப் 18-ம் தேதி 68,320 வாக்குச்சாவடிகளுக்கும், அலுவலர்களுடன் அனுப்பி வைக்கப்படும். வாக்காளர்களுக்கு ‘பூத் ஸ்லிப்’ விநியோகம் 100 சதவீதம் நிறைவடைந்துவிட்டது.
விடுபட்டவர்களுக்கு இன்று அல்லது நாளைக்குள் விநியோகிக்கப்பட்டுவிடும்.வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், நிலை கண்காணிப்புக்குழு, பறக்கும் படையினர், வீடியோ கண்காணிப்புக்குழு, வருமான வரித்துறை சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வீடியோ கண்காணிப்பு குழுக்களின் எண்ணிக்கையை, தேர்தல் பார்வையாளர்கள் பரிந்துரைப்படி அதிகரித்துள்ளோம்.
1,425 கிலோ தங்கம்: சென்னை அருகே குன்றத்தூரில் 1,425 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி அளித்த தகவலில், ‘பிரிங்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது என்றும், இதன் பின்னணி குறித்து வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு துணை இயக்குநருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ஆய்வு செய்து விசாரித்த பின்னர் உண்மை நிலவரம் தெரியவரும் என்று கூறியுள்ளார். தற்போது, வருமான வரித்துறையினர் அந்த தங்கக் கட்டிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
பறிமுதல்: கடந்த 2019 மக்களவை தேர்தலின்போது, பறக்கும்படையினர் உள்ளிட்டோர் நடத்திய சோதனைகளில் ரூ.952.01 கோடி மதிப்பிலும், 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது ரூ.446.28 கோடி மதிப்பிலும், தங்கம், வெள்ளி, பரிசுப் பெருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது, ஏப்.13-ம் தேதி வரை, ரூ.324.38 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் உறுதியுடன் உள்ளது. வாக்காளர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடுவதற்கு ஏப்.16-ம் தேதிக்கு முன் எம்சிஎம்சிஐயிடம் அனுமதி பெற வேண்டும். இந்த விளம்பரங்களை ஏப்.17 தொடங்கி, 19-ம் தேதி வாக்குப்பதிவு நாள் வரை வெளியிடலாம்.
நீலகிரியில் உதவி செலவின பார்வையாளர் சரவணன் புகார் குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். வேட்பாளர்களின் செலவின கணக்குகளை பார்வையிட அவருக்கு அதிகாரம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT