Published : 14 Apr 2024 08:20 PM
Last Updated : 14 Apr 2024 08:20 PM
சேலம்: தமிழகத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ள சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக - அதிமுக - பாமக இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் சொந்த மாவட்டம் சேலம். எனவே, சேலம் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெறுவது, எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும், ஆளுங்கட்சியான திமுகவுக்கும் ஒரு கவுரவப் பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. சேலம் மேற்கு, சேலம் தெற்கு, சேலம் வடக்கு, வீரபாண்டி, ஓமலூர், எடப்பாடி ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியதாக சேலம் மக்களவைத் தொகுதி உள்ளது. இதில் 16 லட்சத்து 48 ஆயிரத்து 911 வாக்காளர்கள் உள்ளன. தேர்தலில் டி.எம்.செல்வகணபதி ( திமுக ), பி.விக்னேஷ் ( அதிமுக ), என்.அண்ணாதுரை ( பாமக ), க.மனோஜ்குமார் ( நாதக ) உள்பட 25 பேர் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்தில், ஆளுங்கட்சியாக இருக்கும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் எக்காரணத்தைக் கொண்டும் வெற்றியை கை நழுவ விடக்கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது. இதேபோல், சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்ற வெற்றியை, மக்களவைத் தேர்தலிலும் தொடரச் செய்ய வேண்டும் என்று அதிமுகவும், வலுவான வாக்கு வங்கி இருப்பதால் வெற்றியை பெற வேண்டும் என பாமகவும், புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் நாதகவும் களத்தில் இறங்கியுள்ளன. வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டி.எம்.செல்வகணபதி (திமுக): தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களின் உரிமையை பறித்துவிட்ட, மோடி தலைமையிலான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். பாஜக ஆட்சியில் உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஆகியவை குறைக்கப்பட, திமுக இடம் பெற்றுள்ள இண்டியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். ஏழை மக்கள் பயனடைந்து வரும் 100 நாள் வேலை திட்டத்தை , 150 நாட்களாக உயர்த்துவதுடன், தினசரி ஊதியமும் ரூ.400 ஆக உயர்த்தப்படும்.
குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் உரிமைத் தொகை திட்டத்தில், விடுபட்டவர்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என்று கூறி திமுக வேட்பாளர் செல்வகணபதி பிரச் சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஓமலூர், தாரமங்கலத்தில் கால்நடை மருத்துவமனைகள் அமைக்கப்படும். மக்களின் பிரச்சினை களை கேட்டறிந்து, அவற்றுக்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறி, மக்களிடம் டி.எம்.செல்வகணபதி வாக்கு சேகரித்து வருகிறார்.
பி.விக்னேஷ் ( அதிமுக ): தமிழக முதல்வராக பழனிசாமி இருந்தபோது, சேலம் மாவட்டத்துக்கு செய்து கொடுத்த திட்டங்களை குறிப்பாக, சேலம் மாநகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள பாலங்கள், மேட்டூர் அணை உபரிநீர் திட்டம், மருத்துவக் கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு கொண்டு வந்தது உள்பட அதிமுக ஆட்சியில் சேலம் மாவட்டத்துக்கு கிடைத்த திட்டங்களை பட்டியலிட்டு, வேட்பாளர் பி.விக்னேஷ், ஒவ்வொரு ஒன்றியமாக சென்று, மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார்.
மேலும், கடந்த முறை திமுகவைச் சேர்ந்தவரே எம்பியாகவும், ஆளுங் கட்சியாக திமுகவும் இருந்தபோதிலும், சேலத்துக்கு புதிய திட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படவில்லை என்று தனது பிரச்சாரத்தில் குறிப்பிட்டு வருகிறார். மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 4-ல் அதிமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் இருப்பதாலும், பொதுச்செயலாளர் பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதாலும் அதிமுகவினர் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.
என்.அண்ணாதுரை ( பாமக ): மத்தியில் ஆளும் பாஜக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தொடர, பிரதமர் மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமராக வருவதற்கு, மக்கள் ஆதரவளிக்க வேண்டும். மேலும், சேலம் மக்களவைத் தொகுதியில் முதன்மையாக இருக்கும் ஜவுளித் தொழிலை பாதுகாக்கவும், வளர்ச்சியடையச் செய்யவும், பிரதமரிடம் கோரிக்கை வைத்து, திட்டங்களை கொண்டு வருவேன் என்று தொகுதியின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, மக்களை சந்தித்து பாமக வேட்பாளர் என்.அண்ணாதுரை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சாதி வாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ஆகியவற்றை வலியுறுத்தும் பாமகவின் தேர்தல் அறிக்கை, சேலம் மக்களவைத் தொகுதியில் பாமகவுக்கு உள்ள கணிசமான செல்வாக்கு ஆகியவை பாமக வேட்பாளர் என்.அண்ணாதுரைக்கு சாதகமாக உள்ளது. மேலும், கூட்டணி வைத்துள்ள பாஜக சார்பில் சேலம் மக்களவைத் தொகுதியின் பிரச்சாரத்துக்கு பிரதமர் மோடியே வந்து சென்றதால் பாஜகவின் ஆதரவும் என்.அண்ணாதுரையின் பிரச்சாரத்துக்கு பலம் சேர்த்துள்ளது.
க.மனோஜ்குமார் ( நாதக ): சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை உள்ளது. ஆனால், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு காவிரி நீர் கிடைக்கவில்லை. எனவே, மேட்டூர் அணையில் இருந்து, காவிரி நீரை அனைத்து பகுதிகளின் பாசனத்துக்கும் கொண்டு வருவோம். சேலம் மாவட்டம் கனிம வளங்கள் மிகுந்தது. இங்கு கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. கனிம வளக்கொள்ளையை தடுத்து, இயற்கையை பாதுகாப்பது எங்களின் முக்கிய கடமை என்று மக்களிடம் பேசி, வேட்பாளர் மனோஜ்குமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும், திருமணிமுத்தாற்றில் கழிவுகள் கலப்பதை தடுத்து, நதியை தூய்மையாக்கி, நிலத்தடி நீர் மற்றும் பாசன நீர் ஆதாரத்தை மேம்படுத்தி, விவசாயத்தை பாதுகாப்போம் என்று இயற்கை வளம் மற்றும் விவசாயத்துக்கு ஆதரவான தங்களின் நிலைப்பாட்டை இயல்பாக எடுத்துரைத்து ஆரவாரமின்றி கே.மனோஜ்குமார் மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். திமுக, அதிமுக, பாமக, நாதக என முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு, அவர்கள் சார்ந்துள்ள கட்சி மற்றும் கூட்டணி ஆகியவற்றின் தலைவர்களும், மக்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
சேலம் தொகுதியில் 25 பேர் போட்டியிட்டாலும் திமுக-அதிமுக-பாமக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மக்களவைத் தேர்தல் என்றாலும் கூட, நாட்டின் பிரச்சினையோடு, உள்ளூர் பிரச்சினைக்கும் தீர்வு காணக்கூடியவரை தேடுவதால், அவர்கள் யாரை தேர்ந்தெடுப்பார்கள் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT