Published : 14 Apr 2024 01:06 PM
Last Updated : 14 Apr 2024 01:06 PM
தருமபுரி: அருணாச்சல பிரதேசத்தில் ஒரு வாக்காளருக்காக ஒரு வாக்குச்சாவடி அமைத்தது போல் தங்கள் கிராமத்திலும் வாக்குச் சாவடி மையம் அமைக்க வேண்டுமென தருமபுரி மாவட்டம் அலகட்டு மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் வட்டுவன அள்ளி ஊராட்சியில் அலகட்டு, ஏரிமலை, கோட்டூர் மலை ஆகிய மலைக் கிராமங்கள் தனித்தனி மலைமுகடுகளில் அமைந்துள்ளன. அலகட்டு கிராமத்துக்கு பாலக்கோடு ஒன்றியம் சீங்காடு பகுதியில் மலையடிவாரத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். ஏரிமலைக்கும் சீங்காடு பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். கோட்டூர் மலைக்கு மற்றொரு இடத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். இந்த 3 கிராமங்களுக்கும் வாகனங்கள் செல்லும் வகையிலான சாலை வசதி இல்லாமல் இருந்தது.
அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று அலகட்டு கிராமத்துக்கு ஓராண்டுக்கு முன்பு டிராக்டர் மூலம் செல்லும் வகையில் சாலை ஏற்படுத்தப் பட்டது. ஏரிமலை, கோட்டூர் மலை ஆகிய கிராமங்களுக்கு டிராக்டரில் செல்லும் வகையில் அண்மையில் சாலை வசதி செய்து தரப்பட்டது. பொதுத்தேர்தல்களின் போது ஏரிமலை, கோட்டூர் ஆகிய கிராமங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.
அலகட்டு கிராம மக்கள் பள்ளத் தாக்கான பகுதியை நோக்கி இறங்கி மீண்டும் ஏரிமலையின் உச்சியை நோக்கி நடந்து சென்று வாக்களித்து வருகின்றனர். இவ்வாறு வாக்களிக்க செல்லும் 4 கிலோ மீட்டர் காட்டு வழிப்பாதை கரடு, முரடானதாக உள்ளது.
மேலும், யானைகள், காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள் போன்ற வன விலங்குகள் நடமாடும் பகுதியாகவும் உள்ளது. எனவே, இந்த சாலையை சீரமைத்துத் தர வேண்டுமென அண்மையில் அலகட்டு கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வாயிலாக கோரிக்கை வைத்தனர்.
ஆனால், நடைபெறவுள்ள தேர்தலுக்குள் காட்டு வழிப்பாதையை சீரமைக்க முடியாத சூழல் நிலவுவதாக அலகட்டு கிராம மக்களுக்கு தெரிய வந்துள்ளது. எனவே, நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தலின்போது தங்கள் கிராமத்திலேயே வாக்குச் சாவடி மையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது பற்றி அலகட்டு கிராமத்தைச் சேர்ந்த சிலர் கூறியது: தமிழகத்தைப் போலவே, வரும் 19-ம் தேதி அருணாச்சல பிரதேச மாநிலத்திலும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்குள்ள மலோகாம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரே ஒரு பெண் வாக்காளருக்காக அதிகாரிகள் சுமார் 35 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வாக்குச் சாவடி அமைக்க இருப்பதாக ஊடகங்கள் வழியாக அறிந்தோம். ஒரு வாக்காளருக்கு வாக்குச் சாவடி அமைக்கும் தேர்தல் ஆணையம், 96 வாக்காளர்கள் உள்ள அலகட்டு மலைக்கிராமத்திலும் வாக்குச் சாவடி அமைத்திட முன்வர வேண்டும்.
அலகட்டு கிராமத்துக்கு 8 கிலோ மீட்டர் தூரம் டிராக்டர் மூலம் செல்ல முடியும் என்பதும், அரசு தொடக்கப் பள்ளி அமைந்திருப்பதும் கூடுதல் வசதியாக உள்ளது. எனவே, நடைபெறவுள்ள தேர்தலிலேயே எங்கள் கிராமத்தில் வாக்குச் சாவடி மையம் அமையும் வகையில் தொடர்புடைய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT