Published : 14 Apr 2024 12:54 PM
Last Updated : 14 Apr 2024 12:54 PM
அரூர்: அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிகளில் சிறிய கிராமங்கள், மலைக் கிராமங்களில் மாலை நேர தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் வாக்கு சேகரிப்பு பணியில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக சார்பில் போட்டியிடும் அ.மணியை ஆதரித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, எம்ஆர்கே பன்னீர்செல்வம், கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ராமகிருஷ்ணன், முத்தரசன், திராவிடர் கழக தலைவர் வீரமணி உள்ளிட்டோரும், அதிமுக வேட்பாளர் அசோகனை ஆதரித்து முன்னாள் முதல்வர் பழனிசாமி, தேமுதிக பிரேமலதா ஆகியோரும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணியை ஆதரித்து மருத்துவர் ராமதாஸ், அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அபிநயாவை ஆதரித்து சீமான் உள்ளிட்டோரும் வாக்கு சேகரித்தனர்.
இது தவிர கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள், தலைமைக் கழக பேச்சாளர்களும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தலைவர்களின் பிரச்சாரங்கள் அனைத்தும் முக்கிய பெருநகரங்களில் மட்டுமே நடந்து முடிவுற்ற நிலையில், வேட்பாளர்களும் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களை கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இருப்பினும் 6 சட்டப்பேரவைத் தொகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்றூர்கள் உள்ளதால் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மலைக் கிராமங்கள், சாலை வசதியற்ற மற்றும் நீண்ட தொலைவில் உள்ள குக்கிராமங்களுக்கு வேட்பாளர்கள் சென்று வாக்கு சேகரிக்க இயலவில்லை. இந்நிலையில், குக்கிராமங் களிலும், வேட்பாளர்கள் வராத பகுதிகளிலும் வாக்காளர்களை கவரும் வகையில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடும் வெயிலின் காரணமாக மாலை 4 மணிக்கு மேல் தொடங்கும் இப்பிரச்சாரத்தில் அப்பகுதி கட்சி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சியினர், பெண்கள் ஆகியோர் கொடிகளை ஏந்திய படி அனைத்து வாக்காளர்களையும் சந்தித்து துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் மாலை முதல் இரவு 10 மணி வரை தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. வாக்குப்பதிவுக்கு மிகக் குறைந்த நாட்களே இருப்பதால் இனிவரும் நாட்களில் சிறப்பு கவனிப்புகளுடன் பிரச்சாரம் மேலும் களை கட்டும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT