Published : 14 Apr 2024 12:29 PM
Last Updated : 14 Apr 2024 12:29 PM
திருநெல்வேலி: திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நண்பர் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து போலீஸார் சோதனை நடத்தினர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித் துறையினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நெல்லை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரன் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்க அவருடைய நண்பரான பிரபல எலெக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர் மகாவீர் என்பவரின் வீடு மற்றும் கடையில் பரிசு பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து நெல்லை சந்திப்பு பகுதியில் பாஜகவின் தேர்தல் அலுவலகம் எதிரே இருக்கக்கூடிய ராஜேஷ் எலெக்ட்ரானிக்ஸ் கடை மற்றும் அம்மன் சன்னதி பகுதியில் இருக்கக்கூடிய அவருடைய இரண்டு வீடுகளிலும் மூன்று குழுக்களாக பத்துக்கும் மேற்பட்ட போலீஸார் சோதனை மேற்கொண்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் பணம், பரிசுப் பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என முதல் கட்டமாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கெனவே கடந்த வாரம் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர் வீடுகளில் போலீஸார் சோதனை நடத்தி மது பாட்டில்கள் பரிசு மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த நிலையில் தற்போது மீண்டும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT