Published : 14 Apr 2024 09:07 AM
Last Updated : 14 Apr 2024 09:07 AM
தமிழக-ஆந்திர எல்லையில் அமைந்துள்ள வேலூர், பல்லவர்கள் ஆட்சியில் தொடங்கி பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்ட பகுதியாகும். வெள்ளையரை எதிர்த்து வேலூர் கோட்டையில் 1806-ல் நடைபெற்ற சிப்பாய் புரட்சியில் யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு, திப்பு சுல்தானின் புலிக்கொடி ஏற்றப்பட்ட நிகழ்வு முதல் சுதந்திரப் போராட்டமாக கருதப்படுகிறது.
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூரில் இருந்து வெளிநாடுளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களால் அந்நியச் செலாவணி அதிக அளவில் கிடைக்கிறது. வேலூரில் 16-ம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சியில் கட்டப்பட்ட அகழியுடன் கூடிய கோட்டை, வேலூர் தங்கக் கோயில், நூற்றாண்டு பெருமைமிகு சிஎம்சி மருத்துவமனை உள்ளிட்டவை வேலூர் மக்களவைத் தொகுதியின் அடையாளங்கள்.
வேலூர் மக்களவைத் தொகுதி 1951-ல் இருந்தே தேர்தலை சந்தித்து வருகிறது. தற்போது 18-வது மக்களவைத் தேர்தலை சந்திக்கும் வேலூர் தொகுதியில், 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வேலூர் தொகுதியை இதுவரை காங்கிரஸ் 5 முறையும், திமுக 6 முறையும், அதிமுக 2 முறையும், பாமக 2 முறையும் கைப்பற்றியுள்ளன. சுயேச்சை வேட்பாளர் ஒருமுறை வெற்றி பெற்றுள்ளார்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி, வேலூர் தொகுதிக்கு உட்பட்ட குடியாத்தம் நகரில் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மக்களவைத் தொகுதி திராவிட அரசியலில் ஆழமான பின்புலங்களைக் கொண்டது. விலைவாசி உயர்வு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அண்ணா, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 1962-ல் இந்தியா-சீன போர் காரணமாக அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டபோது அண்ணாவும் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த தினமே வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணா, ‘வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும், நமது வீடான இந்தியத் திருநாட்டைப் பாதுகாக்க தனி திராவிட நாடு கோரிக்கையை தள்ளிவைக்கிறேன்’ என்று பேசியது, திமுக வரலாற்றில் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்துக்கு நெருக்கமானவர் வீட்டிலிருந்து ரூ.11 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதால், தேர்தல் நிறுத்தப்பட்டது. மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நடத்தப்பட்ட தேர்தலில் திமுகவின் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகத்தைவிட 8,151 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றார்.
தற்போதைய தேர்தலில் திமுக வேட்பாளராக மீண்டும் கதிர் ஆனந்த், பாஜக கூட்டணியில் புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம், அதிமுக சார்பில் டாக்டர் பசுபதி, நாதக சார்பில் மகேஷ் ஆனந்த் உள்ளிட்ட 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தீவிர பிரச்சாரம்: ‘என்ன செய்தார் எம்.பி.? தொகுதிக்கு ஏன் வருவதில்லை?’ என்ற கேள்விகள் மக்களிடம் பரவலாக இருந்தாலும், பலமான கூட்டணி, தொகுதியில் உள்ள சுமார் 3 லட்சம் முஸ்லிம்களின் வாக்குகள், தனது தந்தையின் நீண்டகால தேர்தல் வியூகம் ஆகியவை திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் பலம். தொடர்ந்து 3-வது முறையாகப் போட்டியிடும் பாஜக வேட்பாளர்e ஏ.சி.சண்முகம், 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக சின்னத்தில் போட்டியிட்டு 59,393 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாமிடம் பிடித்தார்.
2019 தேர்தலில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு 8,151 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாமிடம் பிடித்தார். இந்த முறை பாஜக கூட்டணியில் அதிமுக இல்லாத நிலையில், பாமக வாக்குகள் மற்றும் தனது சமுதாய மக்களின் வாக்குகளை நம்பி களமிறங்கியுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மருத்துவ முகாம்கள், மாரத்தான் ஓட்டம், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தியுள்ளார் ஏ.சி.சண்முகம். அதிமுக வேட்பாளர் டாக்டர் பசுபதி, ஆலங்காயம் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராகப் பணியாற்றி, அரசியலுக்காக அரசுப் பணியை ராஜினாமா செய்தவர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவில் சிலர் தனது முதுகில் குத்தியதால் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதாக ஏ.சி.சண்முகம் கூறியது, அதிமுகவினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தலில் திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் பாஜகவுக்கு செல்லாமல் தங்கள் பக்கம் தக்கவைக்கவும், பாஜகவுக்கு பாமக சென்றதை விரும்பாதவர்களின் வாக்குகளைக் கவரவும் அதிமுகவினர் முயற்சித்து வருகின்றனர்.
பேரவைத் தொகுதிகள்: வேலூர் மக்களவைத் தொகுதியில் வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கியுள்ளன. இதில், 4 தொகுதிகள் தற்போது திமுக வசமும், 2 தொகுதிகள் அதிமுக வசமும் உள்ளன.
எதிர்பார்ப்புகள் என்ன?- வேலூர் மாவட்டத்தில் ஜீவாதாரமாக இருப்பது பாலாறு. ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே கட்டும் தடுப்பணைகளால் பெரிதும் பாதிக்கப்படுவது வேலூர் மக்கள்தான். எனவே, தமிழக அரசு காவிரியை போல பாலாற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
வேலூர் விமான நிலைய பணிகள் முடிந்த நிலையில், விமானப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நிதி ஒதுக்கீடு செய்தும், கிடப்பில் போடப்பட்டுள்ள கழனிப்பாக்கம், வெட்டுவானம் மேம்பாலப் பணிகளை தொடங்க வேண்டும். ஆம்பூர், வாணியம்பாடியில் ரயில்வே மேம்பாலம், குடியாத்தம் கூடநகரம் அருகே பாதியில் நிறுத்தப்பட்ட ரயில்வே மேம்பாலம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை முடிக்க வேண்டும்.
ஆம்பூர், வாணியம்பாடியில் தோல் கழிவால் ஏற்பட்டுள்ள நிலத்தடி நீர் மாசுபாட்டை சரி செய்ய, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கிடப்பில் போடப்பட்ட வேலூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை விரிவாக்கம், கேந்திரிய வித்யாலயா பள்ளியைத் தொடங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT