Published : 14 Apr 2024 08:43 AM
Last Updated : 14 Apr 2024 08:43 AM
சென்னை: திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் பாரபட்சம் காட்டுவதாகவும், திமுக விளம்பரங்களை அற்ப காரணங்களுக்காக நிராகரித்துள்ளதாகவும் கூறி தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக திமுக சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்கறிஞர் எஸ்.மனுராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு: மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி அரசியல் ரீதியிலான தேர்தல் விளம்பரங்களை வெளியிடும் முன்பாக தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அரசியல் கட்சிகள் தாக்கல் செய்யும் தேர்தல் விளம்பரங்கள் தொடர்பான விண்ணப்பங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் 2 நாட்களுக்குள் பரிசீலித்து சான்றளிக்க வேண்டும்.
இதன்படி மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் செய்யப்பட்டுள்ள முக்கிய சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாகதேர்தல் விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த விளம்பரங்களுக்கு முன் அனுமதி கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் திமுக சார்பில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை தேர்தல் ஆணையம் பரிசீலித்து முடிவு எடுக்க 6 நாட்கள் வரை காலதாமதம் செய்கிறது.
சில விண்ணப்பங்களை ஒன்றுமில்லாத அற்ப காரணங்களுக்காக நிராகரித்துள்ளது. குறிப்பாக இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் என்ற தேர்தல் விளம்பரத்துக்கு முன் அனுமதி கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை, நாட்டின் இறையாண்மைக்கு எதிராக உள்ளதாகக் கூறி தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மேல்முறையீடு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
நிராகரிப்பதற்கு முன்பாக திமுகவிடம் எந்தவொரு விளக்கமும் கோரவில்லை. ஆனால் மற்ற அரசியல் கட்சிகளின் விளம்பரங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுகவின் தேர்தல் பிரச்சார முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டு பாரபட்சம் காட்டப் படுகிறது.
நாளை விசாரணை: இதனால் சுதந்திரமான, நேர்மையான தேர்தல் ஆணையத்தின்நடவடிக்கைகள் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி வழங்க மறுத்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். அதேபோல திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT