Published : 14 Apr 2024 05:02 AM
Last Updated : 14 Apr 2024 05:02 AM
சென்னை: தமிழ் புத்தாண்டு இன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆளுநர் மற்றும்அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் நல்லஆரோக்கியம், மகிழ்ச்சி, வெற்றி மற்றும் நிறைவை அளிக்கட்டும். புதிய உத்வேகம், ஆற்றல், உற்சாகம், தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக நம்மை மீண்டும்அர்ப்பணிப்போம்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதற்கு ஏற்ப புதிதாய் மலரும் தமிழ் புத்தாண்டில், தமிழர் விரோத சக்திகள் எல்லாம் மறைந்து, தமிழகத்தில் சமத்துவமும், மனிதநேயமும் பெருகட்டும். அனைவருக்கும் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: மலர இருக்கும் குரோதிஆண்டு எல்லா மக்களுக்கும் அன்பையும், நிறைந்த ஆரோக்கியத் தையும், சந்தோஷத்தையும் வாரிவழங்கும் ஆண்டாக அமைந்திடட்டும். தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து.
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: பாஜகஅரசால் தமிழர்களின் உரிமைகளும், தன்மானமும் பறிக்கப்பட்டு வருவதை மீட்டெடுக்கவும், தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பாதுகாக்கவும் இந்த குரோதி வருட தமிழ்ப் புத்தாண்டில் உரிய தருணம் அமைந்திருக்கிறது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தமிழகத்திலும், இந்தியஅளவிலும் ஒரு பெரிய மாற்றத்துக்கு கட்டியம் கூறும் வகையில் இந்த ஆண்டு சித்திரைத் திங்கள் மலர்கிறது. நல்ல தீர்ப்பை எதிர்பார்த்து சித்திரையில் தளரும் பகை, வளரும்நகை என்று மகிழ்வோடு இந்நாளை நாம் கொண்டாடி மகிழ்வோம்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: நமக்கான சமூக நீதியை தாமதப்படுத்தலாமே தவிர தடுக்க முடியாது. நமக்கான சமூக நீதி மிக விரைவில் மலர்ந்தே தீரும். வசந்த விழாவையும், இந்திர விழாவையும் வழங்க வரும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: புதிய தமிழ் ஆண்டில்அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் மாற்றத்துக்கான புதிய சிந்தனைகள் உருவாகி, தமிழகத்தை அமைதிப் பாதையில், வளர்ச்சிப் பாதையில், முதன்மை பாதையில் அழைத்து செல்ல இந்த இனிய திருநாளில் உறுதி ஏற்போம்.
ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்: வசந்தகாலம் தொடங்குவதை தமிழ் மண்ணுக்கு எடுத்துக்கூறும் தமிழ் புத்தாண்டு, தமிழர்களின் உள்ளங்களில் நம்பிக்கை, நற்சிந்தனையை தழைத்தோங்கச் செய்து, ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் மகிழ்ச்சியை நிறைக்கட்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: புத்தாண்டில் அடி எடுத்துவைக்கும் தமிழர்கள், வருங்காலத்தை மனதில் வைத்து மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமையவாக்களிக்க முன்வர வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: மலரும் தமிழ்ப் புத்தாண்டு தமிழக மக்களின் இல்லங்கள், உள்ளங்களில் நம்பிக்கையையும், நல்வாழ்க்கையையும் வழங்கும் ஆண்டாக அமையட்டும்.
பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி: இந்நாள் முதல் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கப் பெற்று, சமூகநீதி எல்லாருக்கும் உரியவாறு கிடைத்து, மனித நேயமும், சகோதரநல்லிணக்கமும் நிலைத்து ஒவ்வொரு குடும்பமும் நலமுடன் வாழ சித்திரை திருநாள் வாழ்த்துகள்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாமக தலைவர் அன்புமணி, ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, சு.திருநாவுக்கரசர் எம்.பி.,கொமதேகசெயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், கோகுல மக்கள் கட்சியின் நிறுவனர் எம்.வி.சேகர், தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தலைவர் க.சக்திவேல் உள்ளிட்டோரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT