Last Updated : 13 Apr, 2024 09:45 PM

1  

Published : 13 Apr 2024 09:45 PM
Last Updated : 13 Apr 2024 09:45 PM

எம்ஜிஆர் - கருணாநிதி அரசியலுடன் ஓபிஎஸ் - இபிஎஸ் பிரச்சினையை ஒப்பிட்ட அண்ணாமலை!

படம்: பாலச்சந்தர்

ராமநாதபுரம்: “காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றினால் ராமநாதபுரம் தொகுதியின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடியும்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் பாஜக கூட்டணி சுயேச்சை வேட்பாளர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடைபெற்ற பிரச்சாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழக அரசியல்வாதிகளில் பிரதமர் மோடிக்கு மிகவும் பிடித்தமானவர் ஓபிஎஸ். எளிமையானவர், அவரது அன்பு, ஏழை மக்களுக்கான அவரது வாழ்க்கை, இதைவிட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர். இவர் எம்பியானால் நாட்டில் முன்னாள் முதல்வர்களில் ஒரு சிலரில் இவரும் ஒருவராக திகழ்வார்.

ராமநாதபுரம் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் குடிநீர் பிரச்சினை உள்ளது. இத்தொகுதியில் பெண்கள் வண்டியில் குடிநீர் குடத்தை வைத்து இழுத்துச் செல்லும் நிலை உள்ளது. தேவர் தனது சொத்துக்களை 16 பகுதிகளாக பிரித்து ஏழை மக்கள், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்காக பிரித்து கொடுத்தார்.

2021-ல் திமுக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், மாநில அரசோடு தேவர் சண்டையிட்டதால் ராமநாதபுரம் வளர்ச்சி பெறவில்லை எனக் கூறினார். தேவரை இழிவாக தமிழக அரசியலில் தொடர்ந்து பேசும் கட்சி திமுக. தேவரின் பார்வையில் ஓபிஎஸ் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன, தேவேந்திரர்குல வேளாளர், சிறுபான்மை மக்களை ஒருங்கிணைத்து நிற்கிறார். நாட்டில் ராமநாதபுரம் மீது மோடிக்கு தனிப்பிரியம் உள்ளது. மோடி ராமநாதபுரத்தில் நிற்க வேண்டும் என மக்கள் விரும்பினா். ஆனால் மோடிக்கு பதிலாக ஓபிஎஸ் நிற்கிறார். தமிழகத்தில் 2 மாவட்டங்களில் ராமநாதபுரத்தை வளரும் மாவட்டமாக அறிவித்து மத்திய அரசின் நேரடி கவனத்தில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

ராமநாதபுரம் முதன்மை மாவட்டமாக வர வேண்டும் என்றால் ஓபிஎஸ் வெற்றி பெற வேண்டும். தற்போதைய ராமநாதபுரம் எம்பியின் சொந்த கிராமமான கொக்காடி, குருவாடியில் குடிக்க தண்ணீர் இல்லை. அப்படி இருக்கும்போது எப்படி அவரால் தொகுதியின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க முடியும். ராமநாதபுரம் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக வெளியிடங்களுக்குச் செல்லும் நிலை உள்ளது. உலக நாட்டு தலைவர்கள் மோடியை சந்திக்க ஆவலுடன் உள்ளனர்.

தமிழகத்தில் 2 அரசியல் துரோகம் நடந்துள்ளது. ஒன்று திமுகவில் இருந்து எம்ஜிஆரை கருணாநிதி வெளியேற்றினார். ஆனால் எம்ஜிஆரோ திமுகவை இல்லாமல் செய்தார். இரண்டாவது துரோகம் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து பழனிசாமி வெளியேற்றியது. ராமநாதபுரம் தொகுதி மக்கள் ஓபிஎஸ்ஸை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

1974-ல் பொங்கல், தீபாவளிக்கு டிஸ்கவுண்ட் கொடுப்பதுபோல் திமுகவும், காங்கிரஸும் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது. அப்போது மத்திய அரசிடம் கருணாநிதி நீங்கள் கொடுப்பது போல் கொடுங்கள், நான் தடுப்பதுபோல் நடிக்கிறேன் என கூறியுள்ளார். அதன்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் கச்சத்தீவை கொடுத்ததால் எனக்கு நெஞ்சம் பதை பதைத்தது, உதடு துடி துடித்தது என கருணாநிதி கூறியுள்ளார்.

அப்போதைய ராமநாதபுரம் எம்பி மூக்கையாத்தேவர் மட்டுமே பாராளுமன்றத்தில் கச்சத்தீவை கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பியுள்ளார். மீனவர் பிரச்சினையை தீர்க்க கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும். அது மோடி அரசால் மட்டுமே முடியும். கடல் அட்டை பிடிக்க தடைவிதித்தது காங்கிரசு அரசும், அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலுவும் தான். ஓபிஎஸ் வெற்றி பெற்றால் கடல் அட்டை பிடிக்க நிரந்தர தீர்வு காண்போம்.

மத்திய அரசு ராமநாதபுரம் தொகுதியில் ராமேசுவரத்துக்கு அம்ருத் சிட்டி, ராமேசுவரத்திலிருந்து அரிச்சல்முனைக்கு தேசிய நெடுஞ்சாலை, ரூ.127 கோடியில் தேசிய கடற்பாசி பூங்கா, ரூ.128 கோடியில் நரிப்பையூரில் மீன்பிடி துறைமுகம், ராமேசுவம்- மண்டபத்தை இணைக்க கடலில் 2.2 கி.மீட்டருக்கு இருவழி ரயில்பாலம், 2021- 2023 வரை மீனவர்களுக்காக ரூ.617 கோடியில் திட்டங்கள், ரூ.1356 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள், விவசாயிகளுக்கு போல் 1.85 லட்சம் மீனவர்களுக்கு மீனவர்களுக்கான கிசான் அட்டை வழங்கப்பட்டுள்ளது

காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தால் ராமநாதபுரம் தொகுதியின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடியும். மத்திய அரசிடமிருந்து சிறப்பு நிதி பெற்று செயல்படுத்தப்படும். நதிநீர் திட்டத்தை மோடியால் மட்டுமே செயல்படுத்த முடியும். பிரதமர் மோடி 2019-ல் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் கொண்டு வந்தார். பிரதமர் நேரடியாக விருப்பப்பட்டு ஓபிஎஸ்-ஐ இங்கு நிறுத்தியுள்ளார்.

ஓபிஎஸ்-ஐ பலாப்பழம் சின்னத்தில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவருக்கு கிடைத்த அநீதிக்கு, ராமநாதபுரம் மண்ணில் நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்” என்றார்.

இக்கூட்டத்தில் எம்பிக்கள் தர்மர், ஓ.பி.ரவீந்திரநாத், பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மாநில நிர்வாகி கதிரவன், அமமுக மாவட்ட செயலாளர் முனியசாமி, முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேனியிலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஹெலிபேட் தளத்தல் வந்திறங்கிய அண்ணாமலை அங்கிருந்து காரில் ராமநாதபுரம் அரண்மனை பிரச்சார இடத்திற்கு வந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x