Published : 13 Apr 2024 09:55 PM
Last Updated : 13 Apr 2024 09:55 PM
தேனி மக்களவைத் தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற டிடிவி தினகரன், இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய தங்க தமிழ்ச்செல்வன், தவிர அதிமுகவில் புதுமுகமான நாராயணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில், அதிமுக என்னும் கட்சிதான். டிடிவி தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் அதிமுகவில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், தேனி மக்களவைத் தேர்தல் களம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் யார்? - தேனி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பாக தங்க தமிழ்ச்செல்வன், அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணியில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக மதன் ஜெயபால் ஆகியோர் களத்தில் நிற்கின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக வென்ற ஒரு தொகுதி தேனிதான். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தரநாத் களம் கண்டு வெற்றியைப் பதிவு செய்தார்.
2024 களம் எப்படி இருக்கிறது? - திமுக சார்பாக தேனியில் களம் காணும் தங்க தமிழ்ச்செல்வன் ஏற்கெனவே தேனி மக்களவையில் களம் கண்டவர்தான். 2019-ம் ஆண்டு அமமுக சார்பாகப் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன் 1,44,050 வாக்குகள் பெற்று மூன்றாவது இடம்பிடித்தார். இந்தநிலையில், திமுகவில் இணைந்த அவருக்கு தேனியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவரை எதிர்த்து அமமுக சார்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எதிர்த்துப் போட்டியிடுகிறார். அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். ஆகவே, டிடிவி தினகரன் - தங்க தமிழ்ச்செல்வன் போட்டி என்பது ’குரு - சிஷ்யன்’ மோதலாகியுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
அதிமுக வேட்பாளர் நிலை என்ன? - அதிமுக வேட்பாளர் நாராயணசாமி 40 ஆண்டுகளாக அதிமுக கட்சியில் இருக்கிறார். ஒன்றிய செயலாளராக இருந்தவருக்கு எம்பி சீட் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும், தங்க தமிழ்ச்செல்வன் போல் தொகுதி மக்களுக்கு அறிமுகமானவர் இல்லை. இப்போதுதான் தேனி மக்கள் இவரை அறிய தொடங்குகின்றனர். திமுக மீதான அதிருப்தி மற்றும் அதிமுக வாக்கு வாங்கியை அடிப்படையாகக் கொண்டு களமாடி வருகிறார். மேலும், புதிதாகப் போட்டியிடுவதால் தனக்கு எம்பியாகும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்னும் கோரிக்கையும் முன்வைத்து மக்களிடம் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
டிடிவி தினகரன் நிலை என்ன? - 1999-ம் ஆண்டு தேனியில் நடந்த மக்களவைத் தேர்தலில் டிடிவி தினகரன் அதிமுக சார்பாகப் போட்டியிட்டு வென்றிருக்கிறார். எனவே, அப்போது தொடங்கி தொகுதி மக்களுக்கு நன்றாக அறிமுகமானவராகத் தான் டிடிவி.தினகரன் இருக்கிறார். குறிப்பாக, இந்தத் தேர்தலில் வார்டு வார்டாக சென்று களப்பணி செய்து வருகிறார். இவருக்கு தேனி களம் பாசிட்டிவ்வாகத்தான் உள்ளது.
திமுக நிலை என்ன? - மாற்று கட்சியைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு என்பதால் திமுக உட்கட்சி அளவில் சிறு மோதல் இருக்கிறது என்னும் கருத்து சொல்லப்படுகிறது. இதனால், தேர்தல் பணிகளில் சுணக்கம் ஏற்படலாம். எனினும், திமுக சார்பாகக் களம் காணும் தங்க தமிழ்ச்செல்வன் ஏற்கெனவே இந்தத் தொகுதியில் போட்டியிட்டவர்தான். எனவே, மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் மற்றும் ஆளும் திமுகவின் சப்போர்ட் எனக் களம் இவருக்கு அணுக எளிமையாகவுள்ளது. குறிப்பாக, மாநில அரசின் திட்டங்களான உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம் ஆகியவற்றைக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.
மக்கள் மனநிலை என்ன? - தேனி மாவட்டத்தில் போடி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் மாம்பழ சாறு தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதேபோல் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துதல், வைகை அணையைத் தூர்வாருதல், கண்ணகி கோயில் செல்வதற்கான பாதையை அமைத்தல், ’திண்டுக்கல் - சபரிமலை’ ரயில்பாதைத் திட்டத்தைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொகுதியில் உள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்கள் இதனைக் கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர். இருப்பினும் இக்கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையிலேயே உள்ளன. ஆகவே, அனைத்துக் கட்சிகளும் இதனை வாக்குறுதியாக அளித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தேனி களத்தைப் பொறுத்தவரையிலும், ’திமுக, அதிமுக, அமமுக’ என மூன்று கட்சி வேட்பாளர்களுக்கும் தொகுதியில் நல்ல செல்வாக்கு இருப்பதால், களத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. எனினும், ’தங்க தமிழ்ச்செல்வன் - டிடிவி தினகரன்’ இடையே கடுமையான போட்டி இருக்கும் என சொல்லப்படுகிறது.
ஆண்டிபட்டி, தேனி, உசிலம்பட்டி, சேடபட்டி போன்ற பகுதிகளில் முக்குலத்தோர் ஓட்டுகள் அதிகம் உள்ளன.அதனால், அதே சமூகத்தைச் சேர்ந்த இந்த இருவர் மத்தியில் ’டஃப் ஃபைட்’ இருக்கும். இந்தக் கடுமையான போட்டியில் மக்கள் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT