Last Updated : 13 Apr, 2024 05:51 PM

 

Published : 13 Apr 2024 05:51 PM
Last Updated : 13 Apr 2024 05:51 PM

“மகாத்மா காந்தியைவிட ராமரை கையில் ஏந்தியவர் வேறு யாரும் கிடையாது!” - கே.எஸ்.அழகிரி பேச்சு

விருதுநகர்: "மகாத்மா காந்தியைவிட ராமரை கையில் ஏந்தியவர் வேறு யாரும் கிடையாது" என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து விருதுநகரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், "உங்கள் தொகுதியில் நாகரிகமான, தேச நலனில் அக்கறையுள்ள இளைஞர் போட்டிடுகிறார். பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்காக நீங்கள் பெருமைப்படலாம்.

தொகுதிக்காகவும், தமிழ் மக்கள் நலனுக்காகவும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியவர் மாணிக்கம் தாகூர். நமது கூட்டணி வளர்ச்சிக்கான கூட்டணி. மக்களின் வாழ்க்கையில் முன்னேற்ற வேண்டும் என்பதற்கான கூட்டணி. 1.15 கோடி பெண்களுக்கு தமிழக முதல்வர் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூபாய் ஆயிரம் கொடுக்கிறார். ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபிறகு நீட் தேர்வு என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யலாம் என்றும், விவசாயிகளுக்கு விளைபொருளுக்கான கட்டுபடியான விலை சட்டரீதியாக வழங்கப்படும் என்றும் ராகுல் அறிவித்துள்ளார். இதனால் விவசாயிகள் தற்கொலை தடுக்கப்படும். அதானி, அம்பானி உள்பட 80 முதலாளிகளின் கடனை ரூ.10 லட்சம் கோடியை மோடி அரசு தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்ய மோடி அரசு மறுத்துவிட்டது.

ஆனால், விவசாயக் கடனையும் கல்விக் கடனையும் தள்ளுபடி செய்வோம் என முதல்வர் ஸ்டாலினும் ராகுல் காந்தியும் கூறியுள்ளனர். அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதால் மோடி வெற்றிபெறுவார் என ஒரு கூட்டம் கூறிக் கொண்டிருக்கிறது. அயோத்தியில் 3,200 ராமர் கோயில்கள் உள்ளன. மோடி கட்டியது 3,201வது கோயில். கடவுள் நம்பிக்கை என்பது வேறு, தேர்தல் என்பது வேறு. மகாத்மா காந்தியைவிட ராமரை கையில் ஏந்தியவர் வேறு யாரும் கிடையாது. காங்கிரஸ் கட்சியும் ராமருக்காக எவ்வளவோ செய்துள்ளது. இந்த நாடு ஒற்றுமையான நாடு.

உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது என்றால் ராஜீவ் காந்தி கொண்டுவந்த பஞ்சாயத்து ராஜ் சட்டம்தான். பொருளாதாரத்தையும், விவசாயத்தையும் கைத்தொழில்களையும் நாம் வளர்க்க வேண்டும் என்று விரும்புகிறோம். ராமர் நமக்கும் கடவுள்தான். அவர் ஆசி எப்போதும் நமக்குதான். தமிழகம் வளர்ச்சிபெற தேசியத்தை உயர்த்திப் பிடிக்கும் மாணிக்கம் தாகூருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்" என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், "கசசத்தீவை நாங்கள் தாரைவார்க்கவில்லை. அங்கு தமிழக மீனவர்களும் மீன்பிடிக்கலாம், ஓய்வெடுக்கலாம். கச்சத்தீவை மீட்க 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த மோடி அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பினார். பிரச்சாரத்தின்போது, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர், சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x