Published : 13 Apr 2024 03:22 PM
Last Updated : 13 Apr 2024 03:22 PM
சென்னை: "என்னைப் பொறுத்தவரையில் மோடி வெற்றி பெறுவது இந்தியாவுக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கே நல்லதல்ல" என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், “மக்களவைத் தேர்தல் களத்தில் திமுக முதன்மையான இடத்தில் இருக்கிறது. அதிமுக வெகுதூரம் தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடிக்கப் போராடுகிறது. மற்ற கட்சிகள் கனவு உலகத்தில் மிதந்து கொண்டிருக்கலாம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆங்கில இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் இருந்து சில பகுதிகள்...
கடந்த சில நாட்களாக மக்களவைத் தேர்தலுக்காக களத்தில் பிரசாரம் செய்து வருகிறீர்கள். மக்கள் என்ன நினைக்கிறார்கள்? உங்களின் கணிப்பு என்ன?
“17 தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரையை இதுவரை முடித்துவிட்டேன். திமுக கூட்டணியே வெல்லும், சாதாரணமான வெற்றியாக அல்ல, மகத்தான வெற்றியாக அமையும் என்பது மக்களின் முகங்களில் தெரிகிறது. கடந்த மூன்றாண்டு காலமாக திராவிட மாடல் ஆட்சியானது மக்களுக்குச் செய்து கொடுத்த மகத்தான சாதனைகள் அனைத்தையும் மக்கள் அறிந்திருக்கிறார்கள். எந்தத் திட்டத்தின் பெயரைச் சொன்னாலும் மக்கள் கைதட்டுகிறார்கள். எனவே, 2021 சட்டமன்றத் தேர்தலின்போது எங்களுக்கு இருந்த ஆதரவைவிட இப்போது ஆதரவு இன்னும் அதிகமாகி இருக்கிறது.
அதேபோல், மோடி மீதான கோபமும் அதிகமாகி இருக்கிறது. மோடி என்பது போலியாகக் கட்டமைக்கப்பட்ட பிம்பம் ஆகும். அந்தப் பிம்பம் உடைந்து வருகிறது. கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழகத்தில் மோடி வெற்றி பெறவில்லை. அதைப் போலவே இந்தத் தேர்தலில் அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற உறுதி மக்களிடம் இருப்பதைப் பார்க்கிறேன்.
தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழகத்துக்கும் தொடர்ந்து துரோகம் இழைப்பதையே தொழிலாகச் செய்து வரும் பாஜகவை வீழ்த்தும் உறுதி மக்களிடம் இருக்கிறது. அந்த பாஜகவின் பாதம்தாங்கியாக இருந்து துரோகம் இழைத்தவர் பழனிசாமி. இன்றைய தினம் பாஜக போட்டுத்தந்த திட்டத்தின்படியே தனி அணியை உருவாக்கி சதிநாடகம் போட்டு வருகிறார் பழனிசாமி. இதையும் மக்கள் உணர்ந்துவிட்டார்கள். இந்த இரண்டு அணியையும் மக்கள் ஒருசேர வீழ்த்தத் தயாராகி விட்டார்கள்.”
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை, இந்தத் தேர்தல் நெருக்கத்தில் கைது செய்ததன் நோக்கம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
“மோடியின் தோல்வி பயம்தான் அவரைத் தவறுக்கு மேல் தவறு செய்ய வைக்கிறது. 370 இடம் பிடிப்போம், 400 இடம் பிடிப்போம் என்பவர் எதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களை, அதிலும் குறிப்பாக மாநில முதலமைச்சர்களைத் தேர்தல் நேரத்தில் கைது செய்ய வேண்டும்? இந்தியா கூட்டணிக்கு அரவிந்த் கேஜ்ரிவால் வரமாட்டார் என்று பாஜக நினைத்தது. கடைசி வரைக்கும் இருக்க மாட்டார் என்று நினைத்தார்கள்.
கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை சுமுகமாக முடித்து விட்டார் கேஜ்ரிவால். வடக்கில் உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி அணியானது வலுவாக அமைந்துவிட்டது. இங்கெல்லாம் போய் கேஜ்ரிவால் பிரச்சாரம் செய்தால் பாஜக ஒரு சில தொகுதிகளைக் கூட கைப்பற்ற முடியாது என்பதே கள நிலவரம். அவரை பிரசாரம் செய்ய விடாமல் தடுக்கவும், அவரது இமேஜை உடைக்கவும் இதனைச் செய்துள்ளார்கள்.
உண்மையில், அரவிந்த் கேஜ்ரிவாலின் செல்வாக்கு, அவரது கைதுக்குப் பிறகு மிக மிக அதிகமாகி விட்டது. அரவிந்த் கேஜ்ரிவாலின் கைது, பாஜக ஆதரவாளர்களையே மனமாற்றம் செய்துள்ளது. 'இது அடக்குமுறை ஆகும்' என்று அவர்களே சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். நடுநிலை வாக்காளர்களையும் இது யோசிக்க வைத்துள்ளது. அவரைக் கைது செய்தது தவறு என்று பாஜக மேலிடத் தலைவர்களே தங்களுக்குள் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள்.
இந்தக் கைதுக்கு பிறகு வடமாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு வெகுவாக சரிந்துவிட்டது. சிறையில் இருந்தபடி ஆட்சி நடத்தும் அவரின் நெஞ்சுரத்தை நான் பாராட்டுகிறேன். ஆம் ஆத்மி கட்சிக்கு திமுக என்றும் துணை நிற்கும்.”
கைது செய்யப்படும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு பிணைகூட மறுக்கப்படுகிறது. இது ஏன்?
“நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பதால் வெளிச்சம் கிடைக்கத் தாமதமாகலாம். ஆனால், நீதி தேவதையின் நியாயத் தீர்ப்புதான் இறுதி வெற்றியாக அமையும்.”
வேண்டாம் மோடி என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால் மோடிக்கு மாற்று யார் என்று சொல்லவேண்டும் அல்லவா?
“மோடி வேண்டாம் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்ட நிலையில், மாற்று யார் என்பது மக்களின் தீர்ப்பின் வாயிலாகவே உறுதியாகிவிடும். ஆட்சி மாற்றம்தான் முக்கியம் என மக்கள் முடிவு செய்துவிட்டால், அடுத்து யார் வருவார் என்பதைவிட, இந்தத் தேர்தலில் யாரை விரட்ட வேண்டும் என்பதுதான் அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும். மக்களின் தீர்ப்பின்படி, தகுதியற்ற மோடி நீக்கப்படுவார். தகுதியான தலைவர் நாட்டை ஆள்வார்.”
இந்த 10 ஆண்டு கால மோடி ஆட்சி குறித்த உங்கள் கருத்து என்ன?
“குஜராத் மாநிலத்தை வளப்படுத்தி விட்டதாகப் பொய்யான பிம்பத்தைக் காட்டி மோடியை 2014 தேர்தலில் வளர்ச்சியின் நாயகனாக அறிமுகம் செய்தது பாஜக. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசினார் மோடி. அந்த வாக்குறுதிகள் எதையும் அவர் நிறைவேற்றவில்லை. வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்டு ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் தரப்போவதாக வட மாநிலங்களில் பிரசாரம் செய்தார்கள். அதுதான் அவர்களை வெற்றி பெற வைத்தது.
ஆட்சிக்கு வந்ததும் அனைவரும் வங்கிக் கணக்கை தொடங்குங்கள் என்று சொல்லி ஏமாற்றினார்கள். அதை அந்த மக்கள் நம்பினார்கள். 'இது ஜூம்லா' என்று இப்போது கூச்சமே இல்லாமல் சொல்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. வளர்ச்சியின் நாயகனாகத் தன்னைக் கட்டமைத்துக் கொண்ட மோடி, இந்தப் பத்தாண்டு காலத்தில் எதையும் வளர்க்கவில்லை. தன்னுடைய தனிமனித பிம்பத்தை வளர்த்திருக்கிறார். சொல்லிக் கொள்ள அவரிடம் எந்த சாதனையும் இல்லை.
மோடியால் சிதைக்கப்பட்ட பட்டியல்தான் அதிகம். மாநிலங்களைச் சிதைத்தார், இந்தியப் பொருளாதாரத்தைச் சிதைத்தார், இந்திய அமைதியைக் குலைத்தார். இப்படி சமூக அரசியல் பொருளாதாரத்தின் அனைத்துப் பக்கத்தையும் சிதைத்துவிட்டார். இனி அவர் சிதைக்க ஏதுமில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் சிதைக்க நேரம் பார்த்துக் கொண்டு இருக்கிறார். இந்தத் தேர்தலில் வென்றால் அவர் செய்வதற்கு இது ஒன்றுதான் பாக்கி இருக்கிறது. என்னைப் பொருத்தவரையில் மோடி வெற்றி பெறுவது இந்தியாவுக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கே நல்லதல்ல.”
2021 தேர்தலின்போது, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளி யார் என்பது கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தீர்கள். இந்த வழக்கின் நிலை என்ன? குற்றவாளிகளைக் கண்டறிய ஏன் இந்தத் தாமதம்?
“வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள்தான் பயந்து பதுங்கி சட்டத்தின் சந்து பொந்துகளைப் பயன்படுத்துகிறார்கள். திமுக அரசு தனது பங்களிப்பைச் சரியாகச் செயல்படுத்தி வருகிறது. நீதியின் செயல்பாட்டு நடைமுறைகளால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது சற்று தள்ளிப் போகலாம். ஆனால், குற்றவாளிகளால் தப்பிக்கவே முடியாது.”
தமிழகத்தில் இந்த நாடாளுமன்றத் தேர்தல், அதிமுக - திமுக இடையிலான போட்டிதான் என்று சொல்லலாமா? எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவை மட்டும் எதிர்ப்பது ஏன்?
“திமுக - அதிமுகவுக்கு இடையிலான போட்டி என்று திருத்தம் செய்து கொள்ள வேண்டுகிறேன். திமுக முதன்மையான இடத்தில் இருக்கிறது. அதிமுக வெகுதூரம் தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடிக்கப் போராடுகிறது. மற்ற கட்சிகள் கனவு உலகத்தில் மிதந்து கொண்டிருக்கலாம்.
அதிமுக என்ற கட்சிக்குத் திமுக எதிர்ப்பு என்ற ஒரே ஒரு கொள்கைதான். திமுக வலுவோடும், வலிமையோடும் இருப்பதால்தான் அந்தக் கட்சியும் உயிர் வாழ்கிறது. பாஜகவை எதிர்க்க பழனிசாமிக்கு நாக்கு எழவில்லை. எஜமான விசுவாசம் தடுக்கிறது. கூட்டணியில் இருந்தபோது பாஜக சொல்வதற்கெல்லாம் தலையாட்டிப் பழக்கப்பட்டவர்கள், கூட்டணி இல்லாதபோதும் அதே பக்கமாக தலையாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக அமைத்துள்ள கூட்டணி என்பது அமித் ஷாவால் உருவாக்கப்பட்ட கூட்டணி என்பதை பாஜகவினர் அறிவார்கள்.”
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT