Published : 13 Apr 2024 04:00 PM
Last Updated : 13 Apr 2024 04:00 PM

ஈரோடு தொகுதி பிரச்சாரக் களத்தில் முந்துவது யார்? - ஒரு பார்வை

ஈரோடு: ஈரோடு மக்களவைத் தொகுதியில், அதிக வாக்குகளை அறுவடை செய்து வாக்கு வங்கியைத் தக்க வைப்பதில் திமுக, அதிமுக, தமாகா மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களிடையே பலத்த போட்டி நிலவுகிறது.

ஈரோடு மக்களவைத் தொகுதியில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம், காங்கேயம், தாராபுரம் ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் மூன்று தொகுதிகள் அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோரின் தொகுதிகளாகவும், அதிமுக, பாஜக, காங்கிரஸ் வசம் தலா ஒரு தொகுதிகளும் உள்ளன. இத்தொகுதியில், 15 லட்சத்து 28,242 வாக்காளர்கள் உள்ளனர்.

ஈரோடு மக்களவைத் தொகுதியில் கே.இ.பிரகாஷ் (திமுக), ஆற்றல் அசோக்குமார் (அதிமுக), விஜயகுமார் (தமாகா), கார்மேகன் (நாம் தமிழர்) உள்ளிட்ட 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கே.இ.பிரகாஷ் (திமுக) - கடந்த முறை திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு தொகுதியில், இம்முறை திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளராக உள்ள கே.இ.பிரகாஷ் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். திமுக அரசின் சாதனைகள், கூட்டணி பலம் ஆகியவை திமுக வேட்பாளரின் பலமாக உள்ளன.

முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, எம்பி கனிமொழி, கமல்ஹாசன் என முக்கியத் தலைவர்களின் பிரச்சாரம் மற்றும் ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமியின் தீவிர பிரச்சாரமும், வேட்பாளருக்கு சாதகமாக உள்ளது.

ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கே .இ.பிரகாஷை ஆதரித்து,
அமைச்சர் மு.பெ .சாமிநாதன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஈரோடு மக்களவைத் தொகுதியில் பிரதான தொழில்களாக உள்ள விவசாயம், ஜவுளி சார்ந்த தேவைகள் நிறைவேற்றப்படாத நிலையில், திமுக அரசின் 3 ஆண்டு சாதனைகளை மட்டுமே திமுக வேட்பாளர் முன்னிறுத்தி பிரச்சாரம் செய்கிறார்.

அதோடு, மக்களவைத் தேர்தலை ஒட்டி திமுக வெளியிட்டுள்ள சமையல் எரிவாயு விலைகுறைப்பு, பெட்ரோல், டீசல் விலைகுறைப்பு, அரசுப் பள்ளிகளில் படித்த கல்லூரி மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை போன்ற புதிய வாக்குறுதிகளும் திமுக வேட்பாளரின் பிரச்சாரத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.

ஆற்றல் அசோக்குமார் (அதிமுக) - ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரின் தாய் சவுந்திரம் அதிமுக முன்னாள் எம்பியாக இருந்து, தற்போது பாஜகவில் இருக்கிறார். அசோக்குமாரின் மாமியார் தற்போது மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏவாக உள்ளார்.

இப்படி அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், தொழிலதிபரான ஆற்றல் அசோக்குமார், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் பாஜகவில் அரசியல் பயணத்தை தொடங்கினார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிமுகவில் சேர்ந்து, மார்ச் மாதத்தில் ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமாருக்கு வாக்கு சேகரிக்கும் பணியில்
முன்னாள் அமைச்சர் கே .வி.ராமலிங்கம் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

ஆற்றல் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி, ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், மலிவு விலை உணவகம், மருத்துவ சிகிச்சை, அரசு பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர், கோயில்கள் கட்டித் தருதல் என பல்வேறு சேவைகளை கடந்த 3 ஆண்டுகளாக ஆற்றல் அசோக்குமார் செய்து வருகிறார்.

இந்த சேவைகளால் பலன் பெற்றோரும், அதிமுக வாக்கு வங்கியும் தனக்கு வெற்றியைத் தேடித்தரும் என்று அவர் நம்புகிறார். தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில், ரூ.583 கோடி சொத்து உள்ளதாக தெரிவித்துள்ள அசோக்குமார், தேர்தல் செலவுகளில் தாராளம் காட்டுவார் என்ற பெரும் எதிர்பார்ப்பு அதிமுகவினரிடையே இருந்தது. ஆனால், அது பூர்த்தி செய்யப்படவில்லை என்ற அதிருப்தி, வேட்பாளரின் பலவீனமாக கருதப்படுகிறது.

பி.விஜயகுமார் (தமாகா) - தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஈரோடு தொகுதியில் தமாகா வேட்பாளர் பி.விஜயகுமார் போட்டியிடுகிறார். ஈரோடு மாவட்ட தமாகா தலைவராக உள்ள விஜயகுமார், பிரதான கட்சி வேட்பாளர்களுக்கு இணையாக, தொகுதி முழுவதும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

தொகுதி முழுவதும் பாஜகவின் வளர்ச்சி வேட்பாளருக்கு சாதகமாக உள்ளது. மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, தமாகா பொதுச்செயலாளர் விடியல் சேகர் உள்ளிட்டோர் தமாகா வேட்பாளரையும், சைக்கிள் சின்னத்தையும் மக்களிடம் கொண்டு செல்வதில் தீவிர களப்பணியாற்றி வருகின்றனர்.

தமாகா வேட்பாளர் பி.விஜயகுமாருக்கு ஆதரவாக , அக்கட்சியின்
மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர் , பாஜக எம்எல்ஏக்கள்
சி.சரஸ்வதி,வானதி சீனிவாசன் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இவர்களோடு, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அதிக நாட்கள் ஈரோட்டில் முகாமிட்டு, தேர்தல் பணிகளை வேகப்படுத்தி வருகிறார். மத்திய அரசின் சாதனைகள், பிரதமர் மோடியின் சிறப்புகள் என பாசிட்டிவான கருத்துகளை ஜி.கே.வாசன் முன்வைத்து பிரச்சாரம் செய்வது, நடுநிலை வாக்காளர்களை ஈர்த்துள்ளது.

கூட்டணி பலம் இல்லாதது, பிரதான கட்சிகளுக்கு இணையாக செலவழிக்க முடியாதது போன்ற பலவீனங்கள் இருந்தாலும், வாக்கு வங்கியை அதிகரிக்கும் வகையில் வேட்பாளரின் பிரச்சார களம் அமைந்துள்ளது.

மு.கார்மேகன் (நாதக) - திருப்பூர் மாவட்டம் வெள்ளகோயிலைச் சேர்ந்த மருத்துவரான மு.கார்மேகன், ஈரோடு மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார். சென்னிமலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற கூட்டம், அக்கட்சி வேட்பாளரை கவனிக்கத்தக்க ஒருவராக மாற்றியுள்ளது.

சாயக்கழிவு நீர், சுற்றுச்சூழல் பாதிப்பு, கீழ்பவானி வாய்க்கால் பிரச்சினை என தொகுதியின் முக்கிய பிரச்சினைகளை சீமான் குறிப்பிட்டு பேசியது வாக்காளர்களிடையே ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் ஒருவர் தேர்தல் களத்தில் நிற்பதை, தனிச்சிறப்பாக கூறி நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகனை ஆதரித்து சென்னிமலையில்
நடந்த பிரச்சாரக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைமை
ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

கட்டமைப்பு பலம் இல்லாதது, தீவிர பிரச்சாரம் இல்லாதது போன்ற பலவீனங்களுக்கு இடையே, ஆளுங்கட்சி மீதான அதிருப்தி வாக்குகள் மற்றும் புதிய வாக்காளர்கள், இளைஞர்களின் வாக்கு வங்கியால், கடந்த முறை பெற்ற 39 ஆயிரம் வாக்குகளைத் தாண்டி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கூடுதல் வாக்குகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

இந்த ஆண்டில் இதுவரை தமிழகத்திலேயே அதிக அளவில் 108 டிகிரி வெப்பம் ஈரோட்டில் பதிவாகியுள்ளது. இந்த அனலுக்கு மத்தியில் நடக்கும் ஈரோடு மக்களவைத் தேர்தலில், பிரதான கட்சிகள் தங்கள் வாக்கு சதவீதத்தை தக்க வைப்பதற்கும், இதர கட்சிகள் வாக்கு வங்கியை உயர்த்திக்கொள்ளவும் தீவிரமாக களமாடி வருவதே தற்போதைய நிலை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x