Published : 13 Apr 2024 05:20 PM
Last Updated : 13 Apr 2024 05:20 PM

காங்கிரஸ் Vs பாஜக - கடும் போட்டி நிலவும் கன்னியாகுமரி கள நிலவர அலசல்

கேரள மாநில எல்லைக்கு ஒட்டியிருப்பதால், கன்னியாகுமரி மக்களின் அரசியல் கண்ணோட்டம் மாறுபட்டதாகவே இருக்கும். அதனால், திராவிட கட்சிகளைவிட தேசிய கட்சிகளின் செல்வாக்கு இங்கு அதிகம். இதனால், பெரும்பாலும் அதிமுக, திமுக கூட்டணியிலுள்ள தேசிய கட்சிகளுக்குத்தான் இந்தத் தொகுதி ஒதுக்கப்படும். கடந்த 2019-ம் ஆண்டும் திமுக கூட்டணியிலிருந்த காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டது. அக்கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் வசந்தகுமார். அவர் 2021-ம் ஆண்டு மரணமடைந்ததால், அவரின் மகன் விஜய் வசந்த் காங்கிரஸ் சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது, அவரே மீண்டும் களமிறங்குகிறார். பாஜக சார்பாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் களம் காணுவதால் ’நட்சத்திர தொகுதி’ என்னும் பெயரைக் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பெற்றுள்ளது.

போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்: இந்தத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக விஜய் வசந்த் போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக பசிலியன் நசரேத், பாஜக சார்பாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக மரிய ஜெனிஃபர் ஆகியோர் களத்தில் பிரதான வேட்பாளராக இருக்கின்றனர். தற்போது, யார் வெல்லுவார்கள் என்பதைப் பார்ப்பதற்கு முன்பு, அங்கு சென்றமுறை வசந்தகுமார் வென்றது எப்படி எனப் பார்க்கலாம்.

காரணம் என்ன? - மத்திய இணை அமைச்சர் ஒருவர் பாஜக சார்பாகக் களம் கண்ட நிலையிலும் காங்கிரஸ் வெற்றி வாகை சூடியது எப்படி? 2014-ம் ஆண்டு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என அனைத்துக் கட்சியும் தனித்தனியாகக் களம் கண்டபோதுதான் பாஜகவைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று மத்திய இணை அமைச்சரானார். ஆனால், 2019-ம் ஆண்டு ’அதிமுக - பாஜக’ கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது. தமிழகத்தில் நிலவிய பாஜக எதிர்ப்பலையில் இந்தக் கூட்டணியால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மேலும், திமுகவில் அனைத்து கட்சிகளும் இணைந்து தேர்தலைச் சந்தித்ததால் காங்கிரஸ் எளிதாக இங்கு வெற்றி பெற்றது. இந்த வியூகம்தான் இடைத்தேர்தலில் விஜய் வசந்தையும் வெல்ல வைத்தது.

2014 களம் எப்படி இருக்கிறது? - கிறிஸ்தவ மீனவர்கள் இந்தத் தொகுதியில் அதிகம் வசித்து வருகின்றனர். அதேவேளையில், கன்னியாகுமரி வேட்பாளர் வெற்றியை உறுதி செய்வது இவர்கள் வாக்கு தான். ஆகவே, இம்முறை அதிமுக சார்பில் மீனவச் சமூகத்தைச் சேர்ந்த பசிலியன் நசரேத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். எனவே, வாக்குகள் உடையும் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

எனினும், திருச்சபைக் கூடி முடிவெடுக்கும் பட்சத்தில் அந்த வேட்பாளருக்குத்தான் அனைத்து மீனவச் சமூக மக்களும் வாக்களித்து வருகிறார்கள். இவர்கள் பல ஆண்டுகளாகவே திமுக கூட்டணிக்கு ஆதரவான முடிவுகளைத் தான் எடுத்து வருகின்றனர். எனவே, திமுக கூட்டணிக்கு சாதகமான முடிவு எடுக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கலாம். தவிர, சிட்டிங் எம்பியாக இருக்கும் விஜய் வசந்த் மக்களுக்கு நெருக்கமாக, எளிமையாக அணுகக் கூடியவராக இருப்பதும் அவருக்கு பாசிட்டிவாக அமையும் என்னும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், திருச்சபை வாக்குகள் சிதறுமேயானால், அது மீனவச் சமூகத்தினரை வேட்பாளராகக் களமிறக்கியிருக்கும் அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்குச் செல்லலாம். இதனால், ’காங்கிரஸ் - பாஜக’ இடையே கடும் போட்டி நிலவும்.

பாஜக நிலை என்ன? - பாஜகவைப் பொறுத்தவரைப் பொன்.ராதாகிருஷ்ணன், “நாகர்கோவில் சென்னை இடையே இரட்டை ரயில் பாதைத் திட்டம் பாஜக அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கன்னியாகுமரி சென்னை இடையே கிழக்கு கடற்கரை வழியாக ரயில் பாதை அமைக்கப்படும். கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இடையே நாற்கரை சாலை என முக்கிய திட்டங்களை முன்னெடுப்பது, மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள இஎஸ்ஐ மருத்துவமனைத் திட்டத்தைக் கொண்டு வர நடவடிக்கை, நாகர்கோவில் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை, மீனவ மக்களுக்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்” போன்ற வாக்குறுதிகளை அளித்து தீவிரமாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

அதிமுக பிரச்சார வியூகம் என்ன? - அதிமுகவுக்குக் கன்னியாகுமரியில் இருக்கும் வாக்கு வங்கி பெரிதாக உதவும் என நம்பி களத்தில் இறங்கியுள்ளது. தவிர, கடந்த கால ஆட்சியில் மீனவ மக்களுக்குப் பெரிதாக எந்தப் பலனும் கிடைக்கவில்லை. எனவே, அந்த அதிருப்தி வாக்குகள் மீனவச் சமூகத்தைச் சேர்ந்த அதிமுக வேட்பாளருக்குக் கிடைக்கும் என உறுதியாக நம்பி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது அதிமுக.

நாதக நிலை என்ன? - நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரைக் கன்னியாகுமரிக்குத் தேசிய கட்சிகளும் வேண்டாம், திராவிட கட்சிகளும் வேண்டாம், நாம் தமிழருக்கு வாய்ப்பு தாருங்கள் என்றும், தொகுதியில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளை மக்களிடம் கொண்டுசென்று தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிட்டிங் எம்பி விஜய் வசந்த் செயல்பாடு எப்படி? - ’‘எம்பி தொகுதி நிதியிலிருந்து 25% நிதியைக் கடற்கரைக்கு ஒதுக்குவேன் எனச் சொன்னது, கடற்கரை இணைப்புச் சாலைகள் உருவாக்கும் திட்டம், மீன்பிடி துறைமுகங்களை உருவாக்குவது, மீனவர்களைப் பழங்குடியின பட்டியலுக்குள் சேர்ப்பது’ எனப் பல வாக்குறுதிகளை நிறைவேற்றப்படவில்லை.

இந்த விமர்சனத்துக்கு பதிலாக, “2 ஆண்டுகள் மட்டுமே எம்பியாக பணி செய்ய வாய்ப்பு கிடைத்ததால் முழுமையாக பணிகள் முடியவில்லை. 4 வழிச்சாலைப் பணிகளைத் துரிதப்படுத்தியது, சாலை சீரமைப்பு எனப் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இல்லாததால் பல பணிகளில் சுணக்கம் இருப்பதாகவும் இம்முறை வெற்றி பெறச் செய்தால் மீதமுள்ள பணிகளை மேற்கொள்வேன்” எனப் பேசி வருகிறார் விஜய் வசந்த்.

கன்னியாகுமரி களம் பொறுத்தவரையிலும், எப்போதும் போல் இரு தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜகவுக்கு இடையில்தான் போட்டி நடப்பதாகவே கருத்துகள் சொல்லப்படுகிறது. ஆனால், மீனவ வாக்குகள் உடைய வாய்ப்பு இருக்குமேயானால், இம்முறை காங்கிரஸ் - பாஜகவுக்குச் சற்றே டஃப் ஃபைட் இருக்கலாம் என்னும் கருத்துகள் முன்வைக்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x