Published : 13 Apr 2024 10:53 AM
Last Updated : 13 Apr 2024 10:53 AM
பனியன் தொழிலால் தமிழ்நாட்டின் முதன்மை தொழில் நகரமான `டாலர் சிட்டியை’ உள்ளடக்கியதுதான் திருப்பூர் மக்களவைத் தொகுதி. தொழிலும், விவசாயமும் இங்கு சமபங்கு வகிக்கின்றன. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் அடைக்கலம் கொடுப்பது திருப்பூர். ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவின் பன்மைத்துவ கலாச்சாரத்தின் அடையாளமாக திருப்பூர் தொகுதி திகழ்கிறது.
திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, கோபிசெட்டிபாளையம், பவானி, பெருந்துறை, அந்தியூர் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டது திருப்பூர் மக்களவைத் தொகுதி. திருப்பூர் வடக்கு, தெற்கு தொகுதிகள் மட்டுமே திருப்பூர் மாவட்டத்தில் உள்ளன. மற்ற 4 தொகுதிகள் ஈரோடு மாவட்டத்தில் வருகின்றன.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பூர் தெற்கு மற்றும் அந்தியூர் தொகுதிகளில் திமுகவும், மற்ற 4 தொகுதிகளில் அதிமுகவும் வென்றன. 2009 மக்களவைத் தேர்தலுக்கு முன்புவரை போபிசெட்டிபாளையம் தொகுதியாக இருந்து, மறுசீரமைப்பில் திருப்பூர் தொகுதியாக மாறியது.
2009-ல் அதிமுகவைச் சேர்ந்த சிவசாமி, 2014-ல் சத்தியபாமா வென்றனர். 2019-ம் ஆண்டு திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் 5 லட்சத்து 8 ஆயிரத்து 725 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக வேட்பாளர் எம்எஸ்எம்.ஆனந்தன் 4 லட்சத்து 15 ஆயிரத்து 357 வாக்குகள் பெற்றார்.
திருப்பூர் மக்களவைத் தொகுதி தற்போது 4-வது தேர்தலை சந்திக்கிறது. திமுக கூட்டணியில் மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் கே. போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் அருணாச்சலம், பாஜக சார்பில் ஏ.பி.முருகானந்தம், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் புதுமுகங்களாக களம் காண்கின்றனர். தற்போதைய எம்.பி. சுப்பராயன், கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிக்கு செய்த பணிகள் மிகவும் சொற்பமே என்கின்றனர் தொகுதிவாசிகள்.
தொகுதிக்கு ஆற்றிய 100 பணிகள் என்று அவர் புத்தகம் போட்டிருந்தாலும், அவரது அரசியல் வாழ்க்கை தொடங்கிய நாளிலிருந்து அவர் ஆற்றிய பணிகளைத்தான் அதில் குறிப்பிட்டுள்ளார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், தொழில் துறை தொடர்பான கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் அவர் எதிரொலிக்கவில்லை என்றும் ஆதங்கப்படுகின்றனர் தொழில் துறையினர். திருப்பூர் தெற்கு மற்றும் அந்தியூர் தொகுதிகள் தனக்கு கை கொடுக்கும் என்று அவர் நம்புகிறார்.
பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், தொகுதிக்கு செய்ய வேண்டிய பணிகள்-100 என்ற புத்தகம் வெளியிட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்துக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் தேர்தல் பணியாற்றுகின்றனர்.
அதிமுக வேட்பாளர் பெருந்துறை, கோபி, பவானி தொகுதிகளில் அறிந்த முகமாக இருக்கிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேராசிரியை சீதாலட்சுமி, அதே கட்சியில் பல்வேறு தேர்தல்களில் களம் கண்டவர். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பிரச்சாரத்தில் முன்வைக்கிறார்.
தொகுதி பிரச்சினைகள்: திருப்பூர் வடக்கு, தெற்கு தொகுதிகளில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வெகுவாகப் பாதித்துள்ளது ஜிஎஸ்டி வரிவிதிப்பு. பின்னலாடையின் மூலப்பொருளான பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு என பல்வேறு பிரச்சினைகள் மக்களைப் பாதித்துள்ளன. திருப்பூர் பின்னலாடை சந்தையை, வங்கதேசம் கைப்பற்றி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அங்கிருந்து அதிக அளவிலான ஜவுளி இந்தியாவில் இறக்குமதியானது தொழில் துறையினரை கவலையடையச் செய்துள்ளது.
திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் பறக்கும் பாலங்கள், தொழில் கண்காட்சி வளாகம், மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவை மக்களின் எதிர்பார்ப்புகள். மேலும், நொய்யல் ஆற்றில் ஏற்படும் மாசை தடுக்க வேண்டும், பவானி கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் கோயிலை சுற்றுலாத்தலமாக விரிவாக்கம் செய்ய வேண்டும், அந்தியூரில் பவானிசாகர் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், அந்தியூர், பர்கூர், கோபியில் உள்ள மலைக் கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் பெருந்துறை-கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் விடுபட்ட பகுதிகளை சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் தொகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆண் வாக்காளர்கள்: 7,91,027
பெண் வாக்காளர்கள்: 8,17,239
இதர வாக்காளர்கள்: 255
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT