Published : 13 Apr 2024 10:45 AM
Last Updated : 13 Apr 2024 10:45 AM
அனைத்து மக்களவைத் தேர்தலிலும் தேசிய அளவில் அரசியல் நோக்கர்களால் உற்று கவனிக்கப்படும் தொகுதிஎன்ற பெருமை கன்னியாகுமரிக்கு உண்டு. இந்த தொகுதியில் 2014-ல் நடந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் 3,72,906 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதுடன், மத்திய இணை அமைச் சரானார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் 2,44,244 வாக்குகளுடன் இரண்டாம் இடம் பெற்றார். இருவரும் 2019 தேர்தலிலும் போட்டியிட்டனர். இதில் வசந்தகுமார் 6,27,235 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். பொன்.ராதாகிருஷ்ணன் 3,67,302 வாக்குகள் பெற்றார்.
கரோனா தொற்று காலத்தில் வசந்தகுமார் உயிரிழந்ததால், 2021-ல் குமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் காங்கிரஸ் சார்பிலும், பொன்.ராதாகிருஷ்ணன் பாஜக சார்பிலும் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் விஜய் வசந்த் 4,15,167 வாக்குகள் பெற்று எம்.பி.யானார். தற்போதைய மக்களவைத் தேர்தலிலும் இவர்களே மீண்டும் மோதுகின்றனர். குறிப்பாக பொன்.ராதாகிருஷ்ணன் 10-வது முறையாகப் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் பசிலியான் நசரேத், நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிபர் உட்பட 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வாக்கு சேகரிப்பு: எப்போதும் எளிதாக அணுக முடிந்தவர் என்ற பெயருடன், தனது சொந்த நிதியில் நகர, கிராம மக்களுக்கு செய்த சேவைகளைக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார் நடப்பு எம்.பி.யான விஜய் வசந்த்.
அதேநேரத்தில், பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், இரு முறை மத்திய இணை அமைச்சராக தான் இருந்த சமயங்களில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரு பெரிய மேம்பாலங்கள், நாற்கர சாலைத் திட்டங்கள், ஆற்றுப் பாலங்கள், நாகர்கோவில்-சென்னை இருவழி ரயில் பாதை திட்டம் மற்றும் மத்திய அரசின் சாதனைகளைக் கூறியும், பாதியில் நிற்கும் திட்டப் பணிகளை நிறைவேற்ற தனக்கு வாக்களிக்குமாறும் கூறியும் வாக்கு சேகரித்து வருகிறார்.
அதிமுக வேட்பாளராக மீனவ சமூகத்தைச் சேர்ந்த பசிலியான் நசரேத் களம் இறக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் கடற்கரைக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் வாக்குகள் தனக்கு அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இவர் உள்ளார். பாதுகாக்கப்பட்ட மீன்பிடி வர்த்தகத்துக்கு உத்தரவாதம் கொடுக்கும் வகையில் மக்களவையில் குரல் கொடுப்பதாகவும், இளைஞர்களுக்கு வேலை
வாய்ப்பை அளிக்கும் பெரு நிறுவனங்களை கொண்டுவரப் போவதாகவும் உறுதியளித்துள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மரிய ஜெனிபர் மும்முர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக, முதல்முறை வாக்காளர்களைக் கவரும் வகையில், கட்சியின் தொலைநோக்குத் திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.
குமரி தொகுதியில் ஜாதியை மீறி, மத ரீதியான வாக்குகளே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கின்றன. தேர்தல் அறிவிப்புக்கு ஓராண்டுக்கு முன்னரே விஜய் வசந்தும், பொன்.ராதாகிருஷ்ணனும் மாவட்டம் முழுவதும் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டனர்.
இவர்களிடையே போட்டி கடுமையாகியுள்ளது. மற்ற இரு வேட்பாளர்களும் வாக்கு வங்கியைப் பிரிப்பவர்களாக உள்ளனர். இந்துக்கள் மற்றும் நடுநிலையாளர்கள் வாக்கு முழுமையாக பாஜகவுக்கு கிடைக்குமா? பெரும்பான்மையாக உள்ள கிறிஸ்தவர்கள் வாக்குகளை விஜய் வசந்த் பெறுவாரா அல்லது கிறிஸ்தவர்களான பசிலியான் நசரேத்தும், மரிய ஜெனிபரும் அந்த வாக்குகளைக் கவர்வார்களா, இஸ்லாமியர் சமூக வாக்குகளை கவரப் போவது யார் என்ற கேள்விகளுக்கு கிடைக்கும் விடையே, குமரியில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் காரணிகளாகும்.
தொகுதி பிரச்சினைகள்: கடலில் மாயமாகும் மீனவர்களைக் கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸுடன் கூடிய கடல் பேரிடர் மீட்பு மையம், நெய்யாறு இடதுகரை பாசனக் கால்வாய் பிரச்சினைக்குத் தீர்வு, ஏவிஎம் கால்வாயை நீர்வழிப் பாதையாக சீரமைக்கும் திட்டம், ரப்பர் பூங்கா, பேச்சிப்பாறை, சிற்றாறு, களியல் போன்ற இயற்கையுடன் கூடிய சூழலியல் சுற்றுலா திட்டம், கனிமவளங்கள் பிற மாநிலங்களுக்கு கடத்தப்படுவதை தடுத்தல், கன்னியாகுமரியில் சுற்றுலாவை நவீனப்படுத்துதல், தேன் ஆராய்ச்சி மையம், தென்னை மதிப்புக் கூட்டப்பட்ட தொழிற்சாலைகள், தோவாளையை மையமாகக் கொண்டு நறுமணத் தொழிற்சாலை, நவீன மீன் வர்த்தக கூடம், உள்ளூர் முனைய விமான நிலையம், அரசு சட்டக் கல்லூரி, அரசு வேளாண் கல்லூரி, அன்னாசிப்பழ பொருட்களின் ஏற்றுமதி தொழிற்கூடம், வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் வகையில் ஹைடெக் நிறுவனங்கள் அமைத்தல் போன்றவை கன்னியாகுமரி தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளாகும்.
ஆண் வாக்காளர்கள்: 7,72,623
பெண் வாக்காளர்கள்: 7,74,619
இதர வாக்காளர்கள்: 136
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT