Published : 13 Apr 2024 05:48 AM
Last Updated : 13 Apr 2024 05:48 AM
சென்னை: தமிழகத்தில் 6.23 கோடி வாக்காளர்களில் 70 சதவீதம் பேருக்கு ‘பூத் சிலிப்’ வழங்கப்பட்டுள்ளதாகவும், 99 சதவீதம் வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை, சாய்தளம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ள தாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரி வித்தார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு, இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள மொத்தம் 6.23 கோடி வாக்காளர்களில், ஏப்.11-ம் தேதி மாலை வரை, 4.36கோடி அதாவது 70 சதவீதம் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. நாளைக்குள் (ஏப்.13) 100 சதவீதம் வழங்கி விடுவோம் என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிவிஜில் செயலி வழியாக இதுவரை 3,605 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 32 புகார்கள் மீதான நடவடிக்கை நிலுவையில் உள்ளது.
ரூ.314.87 மதிப்பில் பறிமுதல்: தேர்தல் பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழு மற்றும் வருமான வரித்துறையால் ரூ.151 கோடியே 75 லட்சத்து 68 ஆயிரம் ரொக்கம், ரூ.5 கோடியே 28 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பு மதுவகைகள், ரூ.99.51 லட்சம் மதிப்பு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள், ரூ.122 கோடியே 34 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பு தங்கம் உள்ளிட்ட உலோகங்கள், ரூ.34 கோடியே 48 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பு பரிசுப்பொருட்கள் என ரூ.314 கோடியே 86 லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ளவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
‘மைக்’ சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி அளித்த புகாரைப்பொறுத்தவரை, காதி வாரியம் வெளியிட்ட சின்னம் தொடர்பான புத்தகத்தில் இருக்கும் சின்னத்தைத்தான் இயந்திரத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதைத்தான், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நடைமுறைப்படுத்தியுள்ள தாக தெரிவித்துள்ளனர்.
இந்து மக்கள் கட்சி புகார்: விசிக தலைவர் திருமாவளவன் மீது இந்து மக்கள் கட்சி அளித்தபுகாரில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. அதேபோல், நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி மீது, தேர்தல் செலவின உதவி பார்வையாளர் அளித்த புகார் இன்னும் மின்னஞ்சலில் எங்களுக்கு வரவில்லை. பத்திரிகையில் தெரிந்து கொண்டேன். இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்க அறிக்கை கேட்டுள்ளோம்.
வாக்குச்சாவடிகளில் 99 சதவீதம் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனைத்து பள்ளிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தள வசதி உள்ளது. கழிப்பறை, குடிநீர் பெரும்பாலும் இருக்கும் நிலையில், இல்லாத இடங்களில் தற்காலிக வசதிகள்செய்து தரவும் உத்தரவிட்டுள்ளோம். மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வசதி, ஒரு வாக்குச்சாவடி மையத்துக்கு குறைந்தபட்சம் ஒன்று என்ற அளவில் இருக்க வேண்டும் என்பதை தெரிவித்துள்ளோம்.
பதற்றமான வாக்குச்சாவடிகள்: பதற்றமான வாக்குச்சாவடி களில் சிசிடிவி பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பதற்றமான வாக்குச்சாவடிகளில், ஒரு துணை ராணுவப்படை வீரர் அல்லது நிகழ்நேர வெப்காஸ்டிங் அல்லது இணையதள வசதி இல்லாத இடங்களில் முழுமையாக வீடியோ பதிவு அல்லது ஒரு நுண்பார்வையாளர் நியமிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஏற்பாடு செய்யப்படும்.
பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப் புக்கு குடிபெயர்ந்தவர்களில் 30ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் என வெளியான தகவல்குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி யிடம் அறிக்கை கேட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவி்த்தார்.
தேர்தல் ஆணையர் ஆலோசனை: தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில், தேர்தல் ஆணையர்கள், அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நேற்று மதியம் 2.30 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த இக்கூட்டத்தில், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT