Published : 13 Apr 2024 06:26 AM
Last Updated : 13 Apr 2024 06:26 AM
ஓசூர்/கடலூர்/தஞ்சாவூர்: விவசாயிகளின் வாழ்வு மலர வேண்டுமெனில் மோடி மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஓசூர் ராம்நகரில் பாஜக வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் மற்றும் திமுகவைச் சேர்ந்தமக்களவை உறுப்பினர்கள், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை பற்றிய எந்த விஷயத்தையும் நாடாளுமன்றத்தில் பேசியதில்லை.ஆட்சியில் இருக்கும் பாஜக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திஉள்ளது. அதுபோல, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் மத்திய அரசின்பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி மழை, குளிர் காலங்களில் வந்து செல்லும் பறவைபோல தமிழகம் வருகிறார் என முதல்வர் விமர்சிக்கிறார். தமிழகத்துக்கு பிரதமர் ஒவ்வொரு முறையும் வரும்போது பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார்.
தமிழகத்தில் சாராய விற்பனையால் பல குடும்பங்கள் கஷ்டப்படுகின்றன. மக்களை குடிப் பழக்கத்திலிருந்து மீட்டு, வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென நாங்கள் கருதுகிறோம். ஆனால், ஒரு குடும்பம் வாழ வேண்டும் என்பதற்காக, போதைப் பொருட்களை இறக்குமதி செய்து, இளைஞர்களை சீரழிக்கின்றனர். அந்த குடும்பத்தை நாம் மீண்டும் ஒருமுறை தேர்ந்தெடுக்கக் கூடாது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக், அந்தக் குடும்பத்துடன் நேரடித் தொடர்பு வைத்துள்ளார் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
போதைப் பொருட்கள் மூலமாககோடி கோடியாக சம்பாதித்து, தனது குடும்பம் வாழ வேண்டும் எனக் கருதுகிறார்கள். போதைப் பொருட்கள் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயில் பிழைக்கும் எந்தக் குடும்பமும் வாழ்ந்தது இல்லை. கிராமப் பகுதிகளில் விவசாயிகளின் வாழ்வு மலர வேண்டுமெனில், மோடி மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.
தொடர்ந்து, தெலுங்கு மொழி பேசும் மக்கள் மத்தியில் நிர்மலா சீதாராமன் பேசும்போது, "ஜாதி, மத பேதமின்றி அனைவரும் முன்னேறவேண்டுமெனில், ஊழலற்ற தலைமை வேண்டும். அது பிரதமர்மோடியால் மட்டுமே சாத்தியம். நமது இளைஞர்கள் அதிக சம்பளத்துக்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். அந்த சம்பளம் நமது நாட்டிலேயே கிடைக்க பிரதமரை ஆதரிக்க வேண்டும்" என்றார்.
இதேபோல, சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து, சிதம்பரம் காந்தி சிலை அருகே நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
கோதுமை, வேர்க்கடலை, கரும்பு, நெல்லுக்கு ஆதார விலைஉயர்த்தப்பட்டுள்ளது. நெல் கொள்முதலுக்காக விவசாயிகளுக்கு ரூ.1.71 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. அரியலூர் உட்பட தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. புதுச்சத்திரம், சிதம்பரம் ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அண்ணாமலை பல்கலை. மிக மோசமான நிலையில் உள்ளது.
காங்கிரஸ், திமுக கூட்டணியினர் ஊழல் செய்து, நாட்டை பின்னோக்கிக் கொண்டு சென்றனர். மோடி அரசு இதை சரி செய்துள்ளது. அண்ணாமலையை ‘ஜோக்கர்’ என விமர்சித்தவர்கள், போதைப் பொருட்களின் வருமானத்தால் வாழ்கிறார்கள். 10 ஆண்டுகால மத்திய பாஜக ஆட்சியில் ஊழல் எதுவுமில்லை. எனவே,மக்கள் பாஜகவை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதேபோல, தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி பாஜகவேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து நிர்மலா சீதாராமன் நேற்று ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு `ரோடு ஷோ' சென்று, வாக்கு சேகரித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT